—சிவா பரமேஸ்வரன்—
புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நான் புலியைப் பார்த்து சிங்கம் சூடுபோட்டுக் கொண்ட விஷயம் ஒன்றைக் கண்டேன்.
புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிநாடுகளில் வாழும் பன்னாட்டு மக்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன். இதில் சிங்கள மக்களும் அடங்குவர். அதில் இரண்டுவிதமான கருத்துக்கள் ஒலிக்கும். முதலாவது புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அசாத்தியமான உழைப்பு. அவர்கள் எங்குச் சென்றாலும் தமது உழைப்பின் மூலம் முன்னேறி, தாயகத்தில் தமது மக்களுக்கு உதவுகின்றனர் என்று அம்மக்கள் கூறுவார்கள்.
மறுபுறம் இலங்கைக்குள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை அரசியல் ரீதியாகத் தீர்மானிப்பதிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறார்கள் என்று ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள புலம் பெயர்ந்த சிங்கள மக்களும் சொல்வார்கள்.
இப்போது புலம் பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களின் கூட்டமைப்பு எனும் அமைப்பு இலங்கைப் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் பத்து பேருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அந்தப் பத்து வேட்பாளர்களுக்காக தாங்கள் தேர்தல் பணிகளைச் செய்வதாகவும் அதற்கான காரணங்களையும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அவர்களின் பட்டியலில் கொழும்பிலிருந்து நால்வர், களுத்துறை, அனுராதபுரம், கம்பஹா, திருகோணமலை, வன்னி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஒருவர் உள்ளனர்.
இதில் சந்தேகத்துக்கு இடமின்றி இனவாதிகள் என்று அறியப்படும் விமல் வீரவன்ச, உதயன் கம்மன்பில, தினேஷ் குணவர்தன, நாளக்க கொடஹேவ போன்றவர்களுடன் இலங்கைக் கடற்படையில் ரியர் அட்மிரலாக இருந்த சரத் வீரசேகர ஆகியோர் அடங்குவர். வன்னி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புப் படையின் கட்டளை அதிகாரியாக இருந்த கர்ணல் ரட்ணப்பிரிய பண்டுவும் இந்தப் பட்டியலில் உள்ளார். இவர்கள் அனைவரும் தீவிர சிங்கள பௌத்த பற்றாளர்கள். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த ஆதரவு அவர்களுக்கு வழங்கப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
அதில் முதலாவதாக இலங்கையில் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது. இரண்டாவதாக இராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, உறுதியான எல்லைப் பாதுகாப்பை நிறுவி அதன் மூலம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் ஆகியோர் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதைத் தடுக்க கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிநாட்டவர் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கும், ஆயுதங்களை நாட்டிற்குள் கொண்டுவருவதையும் தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அபாயகரமான வகையில் அப்படிச் செய்வோர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோருவது ஜனநாயக உரிமை ஆனால் நமது இலங்கை என மாரடித்துக் கொள்ளும் இவர்கள் இலங்கைச் சட்டங்களை அறியாத அறிவிலிகளாக உள்ளனர்.
இலங்கையில் மரண தண்டனை சட்டத்தில் இருந்தாலும் அது பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படுவதில்லை. அது தெரியாமல் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுவதை அறிமுகம் செய்ய வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் மதக் குழுக்களின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறும் இவர்கள் முஸ்லிம் தனிச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
இத்தோடு நிறுத்தாமல் 13ஆவது மற்றும் 19ஆவது அரசியல் திருத்தம் நீக்கப்பட இவர்கள் ஆதரிக்கும் இந்த பத்துபேரும் உடன்பட்டுள்ளனர் என் புலம் பெயர்ந்த இலங்கையர்கள் கூட்டமைப்பு எனும் அந்த அமைப்பு கூறுகிறது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாத அரசியல் சக்திகளே இப்படியான அமைப்புகளின் பின்புலத்திலுள்ள என்பது தெட்ட்த் தெளிவாகத் தெரிகிறது.
புலம் பெயர்ந்த இலங்கையர்கள் கூட்டமைப்புக்கு ஜூலை 31ஆம் திகதிச் செய்தி ஒன்று தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தீவிரமாக ஆதரிக்கும் மொட்டுக் கட்சி தொடர்பான செய்தி அது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ரட்ணபுரி மாவட்டத்தில் போட்டியிடும் பிரேம்லால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இன்று இரட்ணபுரி மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் கஹவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பிலேயே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாகக் கடைசி இரு நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டிய இவர் கொலைக் குற்றவாளியாக இப்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.