-நக்கீரன்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 06:
‘ஆசியான்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மலேசியா, சிங்கப்பூர், இந்தோ-னேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புரூணை, மியன்மார், கம்போடியா, லாவோஸ், வியட்னாம் ஆகிய
நாடுகளில் உடல் பருமன் சிக்கலை சற்று அதிகமாக எதிர்கொண்டுள்ள நாடு மலேசியா.
இந்தச் சுழலில் கொடிய ஆட்கொல்லி கிருமியான ‘கோவிட்-19’ தாக்கத்தால் 18 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் இந்தச் சிக்கல் பரவலான அளவில் பிரதிபலிப்பதாக மலேசிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி டாக்டர் அருணா சந்திரன் தெரிவித்தார்.
இதற்கு குடும்ப பாரம்பரியம், சுற்றுச்சூழல் என்றெல்லாம் பல்வேறு காரணம் சொல்லப்பட்டாலும் பெற்றோரின் அலட்சியமும் வாழ்க்கை முறையும்தான் முக்கியமான அம்சங்களாகும்.
குழந்தைப் பருவத்தினர் முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை எந்த அளவுக்கு உடல் பருமனாகவும் அதிக எடையுடனும் காணப்படுகின்றனர் என்பது குறித்த ஆய்வை மலேசிய சுகாதாரத் துறை அவ்வப்பொழுது மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சிக்கலால் பாதிக்கப்படும் சிறார் விகிதாச்சாரம் 2006-ஆம் ஆண்டில் 5.4 விழுக்காடாக இருந்தது. 2011-ஆம் ஆண்டளவில் 6.1% என்ற கட்டத்தை எட்டியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது ஏறக்குறைய இரட்டிப்பானது. நோய்ப் பரவல் மற்றும் உடல் பருமன தொடர்பாக மலேசிய சுகாதாரத் துறை 2019-இல் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரத் தரவின் அடிப்படையில் இந்த அளவு 15 விழுக்காட்டை எட்டியது. இது, சற்று கவலைக்குரிய விடயம் என்று மருத்துவர் அருணா சொன்னார்.
சின்ன வயதில் பிள்ளைகள் உடல் பருமனாக இருப்பது அழகு என்று ஒரு சில பெற்றோரும், உரிய வயதை எட்டியதும் அவர்களே சரிசெய்துக் கொள்வார்கள் என மற்றும் சில பெற்றோரும் கருதிக் கொள்ளும் போக்கு பரவலாக காணப்படுகிறது.
சிறுவர்களாக இருந்தாலும் உடல் பருமன் பிரச்சினையால், உடல் ரிதியாகவும் மனதளவிலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை. குறிப்பாக, கல்விச் சாலைகளில் சக மாணவர்களாலும் மற்ற தரப்பினராலும் கேலிக்கு ஆளாவதுண்டு. சிற்சில வேளைகளில், பகடிவதை என்ற கட்டத்தைக்கூட இது எட்டுவதுண்டு.
இதைத் தவிர தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். இதனால், சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் கல்வி நலம்கூட பாதிக்கப்படலாம்.
பொதுவாக ஓய்வு நேரங்களில் பிள்ளைகள் ஓடி ஆடவும் விளையாடவும் அனுமதிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் முன்பெல்லாம் பிள்ளைகள் சலிப்பு தட்டும் அளவுக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். இப்பொழுதெல்லாம் விவேகத் தொலைபேசியுடன் ஒரு மூலையில் அல்லது நாற்காலியில் முடங்கிவிடும் போக்கை பரவலாகக் காண முடிகிறது.
பொதுவாக இன்றைய காலக் கட்டத்தில் பிள்ளைகளின் படிப்பில்தான் பெற்றோர் முழு அக்கறை காட்டுகின்றனரே அன்றி, பிள்ளைகளின் உடல் இயக்கம், உடற்பயிற்சி குறித்து அந்த அளவிற்கு முனைப்பு காட்டுவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பிள்ளைகளுக்கும் உணவு பரிமாறும் போக்கை பொதுவாகக் காணமுடிகிறது. தவிர, உணவு விடயத்தில் பெற்றோரின் தரப்பில் பிள்ளைகளின் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு, ‘பிள்ளைகள் காய்கறிகளை சாப்பிடுவது இல்லை’ என்பதுதான். இது உண்மையும்கூட.
இதற்கு இன்றைய நாகரிக உணவுப் பழக்கம் அடிப்படைக் காரணம் ஆகும். மேகி, பர்கர், பீஸா போன்ற துரித உணவுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டுள்ள இன்றைய வாழ்க்கை முறையில், ஒவ்வொரு விட்டிலும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதற்கு ஏற்ப பிள்ளைகளின் மனதைக் கவரும் விதத்திலும் காய்கறிகளின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் உணவைப் பரிமாற வேண்டும். அதற்கான வித்தையையும் சாகசத்தையும் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒருசில பொழுதுகளில் கண்டிப்பை வெளிப்படுத்தலாம். அத்துடன், ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறும் வர்த்தகப் பாணியையும் பெற்றோர் கடைப்பிடிக்கலாம். யார் அதிகமான காய்கறியை உண்கிறார்களோ அவர்களுக்கென ஒரு பரிசுப் பொருளைத் தரலாம். இந்த விடயத்தில் பிள்ளைகளுக்கு இடையே ஒரு போட்டி மனப்பான்மையை தந்திரமாக ஏற்படுத்தலாம் என்றெல்லாம் பெற்றோருக்கு ஓர் ஆசிரியைப்போல யாவரும் நலம் என்னும் நிகழ்ச்சிவழி வானொலியின் ஆலோசனை வழங்கினார் டாக்டர் அருணா சந்திரன்.
இந்த வேளையில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விவரித்தார்.
எந்த வேலை செய்தாலும் எத்தகைய வாழ்க்கை முறையை மேற்கொண்டாலும் பொன்னான உணவான தாய்ப்பாலை குழந்தைப் பிறந்தது முதல் குறைந்தது 180 நாட்களுக்கு புகட்டுவதைப் பற்றி கர்ப்ப காலத்தில் இருந்தே அனைத்து பெற்றோரும் திட்டமிட வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு தாயும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்று தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படும் இந்த நேரத்தில் எடுத்துரைத்தது பொருத்தமாக அமைந்தது.
குழந்தை வளர்ப்பும் தாய்ப்பால் புகட்டுவதும் எல்லாத் தாய்மாருக்கும் இயல்பாக அமைவதில்லை. சில பெண்களுக்கு போராட்டமாகவும் அமையக் கூடும். அதைச் சமாளித்து வென்று விட்டால், பிள்ளைகள் ஆரோக்கியமாகத் திகழ்வர் என்பதுடன், உடல் பருமன் சிக்கலையும் ஓரளவு தவிர்க்கலாம் என்றார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா பாதிப்பு நிலவும் இந்தக் காலக்கட்டத்தில் பிள்ளைகளின் நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்டது. அவர்கள் வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்ய ஊக்குவிப்பதுடன் பெற்றோரும் அவர்களுடன் இணைந்து அவர்களை ஊக்கப்படுத்தலாம். பூச்செடிகள் மற்றும் அலங்கார தாவராங்களை வீட்டில் பராமரிக்க கற்றுக் கொடுக்கலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்கினார் டாக்டர் அருணா சந்திரன்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24