சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்.
இலங்கைப் பொதுத் தேர்தல் நாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை பெரும் ஏமாற்றங்களையும் அளித்துள்ளது.
நாட்டில் எதிர்பார்த்தபடி ராஜபக்சக்கள் தலைமையில் புதிய ஆட்சி அமைகிறது. அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
அதேவேளை மஹிந்த ராஜபக்சவுடன் சமகாலத்தில் அரசியல் செய்த ரணில் விக்ரமசிங்கவும் அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் மாபெரும் தோல்வியடைந்துள்ளனர்.
`ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்` என்பதை ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட பிளவு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
கடந்த 1977 ஆம் ஆண்டு தனது 28ஆவது வயதில் பியகம தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 43 ஆண்டுகள் அரசியலில் ஆளுமை செலுத்திவந்த ரணிலின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி எனும் கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், பலர் தமது அரசியல் எதிர்காலம் எனும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதிலிருந்து குதித்தனர். ஆனால் அவர்களுக்கு உறுதியளிக்கும் விதமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி அந்தக் கப்பலைக் கரைசேர்க்காமல் இப்போது கப்பலுடன் தானும் மூழ்கியுள்ளார்.
மூன்று முறை பிரதமராக இருந்த அவர் கடந்த தேர்தலில் தலைநகர் கொழும்பிலிருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றார்.
பொருந்தாத கூட்டணி அமைத்து மைத்ரிபால சிறிசேனவுடன் கூட்டாக ஆட்சி அமைத்த ரணில் `நல்லாட்சியை` அளிக்கத் தவறினார். அவர் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தனது பின்னடைவுகளுக்கு அடுத்தவர்களைக் குறை கூறினார்.
கட்சிக்குள் சஜித்துக்கு ஆதரவு பெருகுகிறது என்பதை அவர் உணர்ந்து அதற்கேற்ற வகையில் சிறிது விட்டுக் கொடுத்துச் சென்றிருந்தால் இந்த அவமானம் அவருக்கு ஏற்பட்டிருக்காது. கட்சியும் உடைந்திருக்காது.
அதேவேளை தாங்களே உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி என்று கூறிய சஜித் தலைமையிலான அணியினரும் மக்களிடையே அவர்கள் எதிர்ப்பார்த்த ஆதரவைப் பெறவில்லை.
மறுபுறம் மாறிவரும் அரசியல் சூழலை நன்கு புரிந்துகொண்ட மஹிந்த ராஜபக்ச ஐந்து வருடங்களாகத் திட்டமிட்டு தனது வியூகத்தை வகுத்து அதை முன்னெடுத்து வெற்றியும் கண்டுள்ளார்.
ஆனால் அவர்களுக்குக் கிடைத்துள்ள மூன்றில் இரண்டு பங்கு பலம் பல்தரப்பில் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சிறுபான்மை மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமது குரலை எழுப்ப முடியாத ஒரு சூழல் உருவாகக் கூடும்.
தேர்தலுக்கு முன்னரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த அரசால் கொண்டுவரப்பட்ட 19ஆவது சட்டத் திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.
அந்த சட்டத் திருத்தத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், சுயாதீன ஆணைக் குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சில நல்ல விடயங்கள் இருக்கவே செய்தன. அதை இல்லாது ஒழிப்பது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுக்கும் எனும் கவலைகள் எழுந்துள்ளன.
எனினும் தாமரை மொட்டுக் கட்சி சார்பில் ஓரிரு சிறுபான்மையினர் வெற்றி பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தாமரை மொட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத் திருத்தத்தையும் ஒழிக்க வேண்டு என்று விடாப்பிடியாக உள்ளனர்.
அப்படியான ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்க்க நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளுக்கு போதிய பலமில்லை. குறிப்பாகத் தமிழ்க் கட்சிகள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுப்பார்கள்.
தமிழ் கட்சிகளை விட முஸ்லிம் கட்சிகளின் நிலை இன்னும் மோசமாகவுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பிறகு சிங்கள-முஸ்லிம் உறவுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் பொதுஜன பெரமுன முஸ்லிம் கட்சிகளை அணைத்துச் செல்லும் வாய்ப்பு இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தி போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கவில்லை. மாறாக சிறிய கட்சிகளே அவர்கள் தயவில் உள்ளனர். இது தேசியப் பட்டியல் நியமனத்திலும் எதிரொலிக்கும்.
நடந்து முடிந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ராஜபக்சக்கள் தமது பெருந்தன்மையை வெளிப்படுத்தி அனைத்து இன மக்களின் நலன்களையும் முன்னெடுக்க வேண்டும். அதுவே அவர்கள் தமது வெற்றியைக் கொண்டாடுவதற்கு சிறந்த வழியாக இருக்கும்.
ராஜபக்சக்களின் வெற்றி பன்னாட்டு அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அவர்கள் சீனா பக்கமே சாய்வார்கள் எனும் கவலை இந்தியாவுக்கு உள்ளது. இது இந்திய-இலங்கை உறவுகளில் உரசல்களை ஏற்படுத்தக் கூடும். சீனா அவர்களின் வெற்றியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது உறுதி.