கனடா உதயன்’ கதிரோட்டம்- 07-08-2020
கொரோனா என்னும் கொடிதான அச்சுறுத்தலையும் அமைதிப்படுத்தி, பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை கடந்து வந்துள்ளது, இனப்பிரச்சனையை இன்னும் முடிவுக்கு கொண்டுவராத இலங்கை என்னும் சிறிய நாடு.
அசம்பாவிதங்கள் மிகவும் குறைந்த ஒரு தேர்தலைக் கண்டு ஆறுதலடைந்தேன் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச. படைகளுக்கெல்லாம் அதிபதியான ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இலங்கை தேர்தல் ஆணைக் குழு , தனது பணியை திறம்பட ஆற்றியிருக்கின்றது என்ற புகழாரங்கள் நான்கு திசைகளிலிருந்தும் எழுகின்றன.
இலட்சங்களைத் ◌தாண்டும் எண்ணிக்கை இராணுவப் படை, பொலிஸ் படை, அரச சேவையாளர்கள் என அரசாங்கத்தின் ஆளணி இந்த தீவெங்கும் திரண்டு பரந்திருந்தது.
மக்கள் தங்கள் வாக்குகளை மிகவும் அவதானமாக பதிவு செய்து தங்கள்ஜனநாயக உ ரிமைக்கு மதிப்பளித்தார்கள்.
ஏழாயிரத்திற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்ட நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளிவர வெளிவர மக்கள் வெற்றிகளைக் கொண்டாடினார்கள். துள்ளிக் குதித்தார்கள். விருந்துண்டு மகிழ்ந்தார்கள்.
தோல்விகளைச் சந்தித்தவர்கள் துவண்டு போனார்கள். அவர்களில் பலர் வாயடைத்து நின்றார்கள். எங்களில் எங்கேயோ தவறு இருக்கின்றது என்று ஆறுதலடைந்திருக்கலாம் அவர்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தின் சிறந்த உயர் கல்லூரிகளில் ஒன்றான மத்திய கல்லூரியில் மாத்திரம் எப்படி ஒரு அநியாயம் அரங்கேறியது என்று தான் எமக்கு விளங்கவில்லை. அதுவும் ஒரு பெண் வேட்பாளருக்கு எதிராக. அவர் கூட பாராளுமன்ற உறுப்பினரான தனது கணவரை தென்னிலங்கை ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சன்னங்களுக்கு இரையாகக் கொடுத்தவர். கொழும்பின் சிறந்த மகளிர் கல்லூரி ஒன்றின் சிறந்த ஆசிரி;யைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக தனது ஆசிரியப் பதவியைத் துறந்து துணிச்சலோடு தேர்தல் போட்டியில் களமிறங்கினார். “ஜனநாயக நாடுதானே! எல்லாம் சட்டத்தின் அடிப்படையில் நீதி சார்ந்து நிறைவேறும்” என்று நிச்சயமாக நம்பிய வண்ணம் இருந்திருப்பார்.
ஆனால், அவர் கைகளுக்கு வந்த கனி, தட்டிப் பறிக்கப்படப் போகின்றது என்பதை உணராமல் அவர் பிறந்த ஊரில் கொண்டாட்டம் ஒன்றுக்கு வந்த அழைப்பையும் ஏற்றுக்கொண்டாராம்.
ஆனால் இறுதி நேரத்தில் அவர் கைகளுக்கு மிக அருகே இருந்த அந்த வெற்றிக் கனி, தட்டிப் பறிக்கப்பட்ட கொடுமையான காட்சி அரங்கேறியது. உண்மை தெரிந்தவர்கள்; குமுறினார்கள்.
ஆனால் அந்த பெண் வேட்பளரோ கண்களில் நீர் மல்க, தன் புதல்விகள் கதறிய வண்ணம் தன்னை அணைத்து நிற்க, அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றார்..
அரச இயந்திரத்தின் பல பாகங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய அழுத்தமா இந்த மோசடி?
எத்தனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், ஆணைக்குழுவின் மேற்பார்வை, எல்லாமே நிறைந்திருக்க எப்படி முடிந்தது ஜனாநாயகத்தை ஏமாற்ற? எப்படித் துணிந்தனர் ஒரு தாய்க்கு சமனான புத்திஜீவி ஒருவரை?
தேசத்தின் அதிபர் ஏற்பாடு செய்திருந்த அதிரடிப் படையினரும் அநீதிக்கு துணை நின்றனரோ? அப்பாவி இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் ஆவேசத்துடன் தாக்கப்பட்டமை எதனைக் காட்டுகின்றது?
ஏதோ ஒரு நன்றிக் கடன் நேற்றைய நாளில் அந்த அநீதியை இழைக்க காரணமாக இருந்திருக்குமோ. தலவர்களின் கழுத்துகளுக்கு வரவேண்டிய கயிற்றை கழற்றி விட்ட கயமைக்காக, நேற்று நன்றிக் கடன் நாடகம் அரங்கேறியதோ! தங்கள் இடர் தீர்த்த ஒருவருக்காய் ஒரு புத்திஜீவியான ஒரு தமிழ் அன்னை பலிக்கடா ஆனாரா? உண்மைகள் எப்போதோ வெளியே வந்துவிட்டன.