சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கு முன்னர் இருந்திராத வகையில் பல புதிய விடயங்களும் அரங்கேறியுள்ளன.
இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை (09.08.20)ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது மூத்த சகோதரரான மஹிந்த ராஜபக்சவின் பாதம் தொட்டு ஆசி பெற்றார். அதன் பின்பு இருவரும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பதவியைவிடப் பாசமும் மரியாதையும் பெரியது என்பதை இந்த நிகழ்வு காட்டியது.
நாடாளுமன்றத்த்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் வயதில் மூத்தவராக த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தர் (வயது 87) விளங்குகிறார். அதே நேரம் மிகக் குறைந்த வயதில் ஜீவன் தொண்டமான்(வயது 26) நாடாளுமன்றம் செல்கிறார்.
1977ல் நடைபெற்ற தொகுதிவாரி தேர்தல் முறையில் தெரிவானவர்களில் சம்பந்தர் மட்டுமே இம்முறையும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். இவரைத் தவிர தொகுதிவாரி தேர்தல் முறையில் வென்றவர்கள் யாரும் இம்முறை நாடாளுமன்றத்தில் இல்லை.
1970, 1977 தேர்தல்களில் கிளிநொச்சித் தொகுதியிலிருந்து தெரிவான த.வி.கூ தலைவர் வீ.ஆனந்தசங்கரி இறுதியாக 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் தான் தெரிவாகியிருந்தார். இம்முறை அவர் போட்டியிட்டார் எனினும் வாய்ப்பு கிட்டவில்லை.
கால் நூற்றாண்டுக்கு பின்னர் டெலோ மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இந்தத் தேர்தலில் மீண்டும் நாடாளுமன்றத்ம் செல்கிறார்.
1989 தேர்தலில் தனது 25ஆம் வயதில் த.வி.கூ சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவாகி முதல் முறையாக அவர் நாடாளுமன்றத்ம் சென்றிருந்தார். எனினும் அடுத்து வந்த 1994 தேர்தலில் தனது கட்சி சார்பிலும் 2015 தேர்தலில் த.வி.கூ சார்பிலும் போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை.
இந்த தேர்தல்களின் முடிவுகளின் படி ஓரிரு பிரதான கட்சிகளின் தலைவர் மற்றும் பொதுச் செயலர்கள் ஆகியோர் தோல்வி கண்டுள்ளனர். ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க, செயலர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் முறையே கொழும்பு மற்றும் குருநாகலை மாவட்டங்களில் போட்டியிட்டு தோல்வி கண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ் மாவட்டத்திலும், பொதுச் செயலர் கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் படுதோல்வியடைந்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வரலாற்றில் 50 வருடங்களுக்குப் பிறகு தலைவர் மற்றும் செயலர் தோல்வி கண்ட சம்பவம் இத்தேர்தலில் பதிவாகியுள்ளது.
1970 தேர்தலில் அப்போது தலைவராக இருந்த மறைந்த சி.மு.இராசமாணிக்கம் பட்டிருப்புத் தொகுதியில் ஐ.தே.க வேட்பாளர் சோ.உ.தம்பிராஜாவால் தோற்கடிக்கப்பட்டார். செயலாளராக இருந்த அ.அமிர்தலிங்கம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வேட்பாளரான அ.தியாகராசாவிடம் தோல்வி கண்டார்.
சுதந்திரத்துக்கு பின் டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் மஹிந்த ராஜபக்ச வரை 14 பேர் பிரதமராகப் பதவி வகித்துள்ளனர். பிரதமர் பதவி வகித்த ஒருவர் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் 60 வருடங்கள் பின்னர் ரணிலின் தோல்வி மூலம் மீண்டும் பதிவாகியுள்ளது.
1959 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இடைக்காலப் பிரதமராக டபிள்யூ.தஹநாயக்க பதவியேற்றிருந்தார். 1960 தேர்தலில் பிரஜா தந்திரவாதி கட்சி சார்பில் காலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது இந்நேரத்தில் நினைவுகூரத்தக்கது.
கடந்த 2015 தேர்தலில் நாட்டிலேயே அதிகூடிய (500,566) விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த ரணில் விக்ரமசிங்க இம்முறை தோல்வியடைந்தார்.
இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக குருநாகலையில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச நாட்டிலேயே அதிகமாக ( 527,364) விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். விகிதாசார தேர்தல் வரலாற்றில் இதுவே மிக அதிகமான விருப்பு வாக்குகள் என்று தெரிய வருகிறது.
அதேவேளை ஆகக் குறைந்த விருப்பு வாக்குகளை (3203)வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவான பெற்ற ஈ.பி. டி.பியைச் சேர்ந்த குலசிங்கம் திலிபனும் நாடாளுமன்றத்ம் செல்கிறார்.
1977 வரை ஆம் ஆண்டு தொகுதிவாரி தேர்தல் கடைசியாக நடைபெற்றது. அப்போது புத்தளம் தொகுதியிலிருந்து ஐ.தே.க சார்பில் தெரிவான நயினா மரைக்கர் 1989 வரை பதவி வகித்தார். அதன் பிறகு விகிதாசர முறையில் புத்தளம் மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் யாரும் தெரிவாகவில்லை. இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் புத்தளம் வாழ் முஸ்லிம்களின் அபிலாஷை நிறைவேறியுள்ளது.
முஸ்லிம் கட்சிகள் இணைந்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாக முன் நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவரான ரிஷாத் கட்சியைச் சேர்ந்த அலி சப்ரி ரஹீம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்ம் செல்கிறார்.
2015 தேர்தல் ஐ.ம.சு.மு, ஐ.தே.க, த.தே,கூ, முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, ஜே.வி.பி ஆகிய ஆறு கட்சிகளுக்கு மட்டுமே நாடாளுமன்றத்த்தில் அதிகாரப்பூர்வமான பிரசன்னம் இருந்தது. இம்முறை அந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 15 கட்சிகளில் சிறுபான்மைக் கட்சிகள் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளன. தமிழ் காங்கிரஸ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, பிள்ளையான் கட்சி, விக்கினேஸ்வரன் கட்சி, ரிஷாத் கட்சி, அதாவுல்லா கட்சி போன்ற கட்சிகளிலிருந்தும் நேரடியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.