சிவா பரமேஸ்வரன்
இலங்கையின் பிரதான தேசியக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக கால் நூற்றாண்டுக்கும் மேலாக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி விலக தீர்மானித்துள்ளார்.
இதை அக்கட்சியின் பொதுச் செயலர் அகில விராஜ காரியவசம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க படுதோல்வியடைந்த நிலையில் அவரும் படுதோல்வியடைந்தார். அவர் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் 2015 தேர்தலில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் இம்முறை 50,000 விருப்பு வாக்குகளைக் கூட அவரால் பெற முடியவில்லை.
ஐ.தே.கவின் அடுத்த தலைவர் பதவிக்குப் பலரது பெயர்கள் உலவுகின்றன. தயா கமகே, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்த்தன ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால் யார் கட்சியின் தலைவராக வந்தாலும் அவர்கள் பெருஞ்சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும். படு பாதாளத்திலுள்ள கட்சியை மீட்டெடுத்து மீண்டும் தீவிர அரசியல் அரங்குக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால் அது இலகுவானது இல்லை.
டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் ஆர்.பிரேமதாஸ வரை மிகவும் பலமாகவும் ஆளுமையுடனும் இருந்த இக்கட்சியின் வீழ்ச்சி ரணில் தலைமையேற்ற பிறகே ஆரம்பமானது என்பது கசப்பான உண்மை.
1993ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்ட நிலையில் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாப் பொறுப்பேற்க ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். காமினி திஸநாயக்க கொல்லப்பட்ட நிலையில் கட்சியின் தலைவராக ரணில் நியமிக்கப்பட்டார்.
எனினும் இப்போது பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலையிலேயே ரணில் தலைமைப் பொறுப்பைத் துறக்க முடிவு செய்துள்ளார். கட்சியில் அவரது தலைமைத்துவம் குறித்து சவால்கள் எழுந்த போது அதைத் தீர்க்கதரிசனத்துடன் கணிக்க ரணில் தவறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.
அவர் யதார்தமாகச் சிந்தித்து மாறி வரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப காய்களை நகர்த்தி கட்சியின் தலைமைப் பொறுப்பை இளைய தலைமுறையிடம் ஒப்படைத்து `பிதாமகனாக` இருந்து கட்சியை வழிநடத்த அவர் முன்வந்திருந்தால் இன்று ஐக்கிய தேசியக் கட்சி உடைந்திருக்காது. தேர்தலில் படுதோல்வியும் ஏற்பட்டிருக்காது.
நாட்டில் பௌத்த கடும்போக்குச் சிந்தனைகள் மேலோங்கி வரும் நிலையில் சிறிய கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியையே தமது பாதுகாவலனாக நம்பியிருந்தன. எனினும் சிறுபான்மை மக்களுக்கு நெருக்கடிகள் எழுந்த போதெல்லாம் அதை உரிய வகையில் கையாண்டு அப்படியான சிக்கல்கள் மீண்டும் எழுவதை அவரால் தடுக்க முடியவில்லை. எனினும் காலத்தின் மாறுதல் காரணமாகச் சிறுபான்மை மக்களும் அவர்களது வாக்குகளுமே ஐ.தே.கட்சியின் இருப்பை உறுதி செய்யத் துணை நின்றன..
கடந்த ஐந்து ஆண்டுகளில் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து `நல்லாட்சி அரசு` ஒன்றை முன்னெடுத்தாலும், தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த `நல்லாட்சி அரசை` நாடாளுமன்றத்தில் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏராளமான சந்தர்ப்பங்கள் இருந்தும் அதைக் காத்திரமாக முன்னெடுக்கவில்லை.
இதன் எதிரொலிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் சந்தித்த பாரியப் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.
மஹிந்த ராஜபக்சவிடம் எதிர்ப்பார்க்க முடியாத விடயங்களைச் சிறுபான்மை மக்கள் ரணிலிடம் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
இலங்கையின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த அவர் தனது பதவி காலத்தில் சில துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்திருந்தாலும், அவரால் நாட்டில் கொள்கையளவில் பெரிய மாற்றத்தையோ அல்லது தாக்கத்தையோ கொண்டுவர முடியவில்லை என்பது யதார்த்தம்.
இலங்கை அரசியலுக்கு `கோட்டும் சூட்டும்` புதிய விடயமல்ல. ஆனால் காலவோட்டத்ததில் வெள்ளைச் சாரமும் சட்டையும் இலங்கையின் அரசியல் அடையாளம் ஆனது.
ஆனால் ரணில் தனது அரசியலைத் தொடர்ந்தும் `கோட்டு சூட்டிலேயே` நடத்தி வந்தார். அதேவேளை அவர் பௌத்தத்தை மதித்தாலும் அதில் ஒரு தீவிர பற்றாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைச் சாதகமாகவும் பார்க்கலாம் அவர் அரசியலில் செய்த பிழையாகவும் பார்க்கலாம்.
கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை ஒரு பலமான தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள ரணில் தவறிவிட்டார். தலைமைப் பதவியின் மீது அவருக்கு இருந்த மோகமும், ஆட்சியில் அவருக்குக் கீழிருந்தவர்கள் தவறு செய்து முறைகேடுகளில் ஈடுபட்ட போது அதைத் தட்டிக் கேட்காத தன்மையும் அவரது வீழ்சிக்குத் தொடர்ந்து வழி வகுத்தது.
கடந்த ஓராண்டுகாலமாகத் தலைமைத்துவம் தொடர்பில் அவருக்கும் சஜித்துக்கும் இடையே வெளிப்படையாக ஏற்பட்ட மோதலின் போது கூட அவர் `தன்னை யாரும் அசைக்க முடியாது` எனும் கனவுலகில் இருந்தார். மேலும் தன்னைச் சுற்றியிருந்த மேட்டுக்குடி குழுவொன்றிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை.
ரணில் இலங்கையில் 13,17, 21 ஆவது பிரதமராக இருந்துள்ளார்.
பிரதமர் பதவிக் காலம் | ஆட்சியில் ஜனாதிபதி | குறிப்பு |
09/01/2015 – 21/11/ 2019 | மைத்திரிபால சிறிசேன | பதவி நீக்கம் |
09/12/2001 – 07/02/2004 | சந்திரிகா குமாரதுங்க | நாடாளுமன்றம் கலைப்பு |
07/05/1993 – 18/08/1994 | டி.பி.விஜேதுங்க | நாடாளுமன்ற பதவிக் காலம் முடிவு |
இலங்கையின் 13,12, மற்றும் 21ஆவது பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிஙக மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசின் இறுதிக் காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 26/10/2018 அன்று ஜனாதிபதி மைத்திரியால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது அரசியல் அமைப்புக்குப் புறம்பானது என ரணில் விக்ரமசிங்க பதவி விலக மறுத்தாலும் மஹிந்தவை பிரதமராக மைத்திரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மஹிந்த தலைமையிலான `52 நாட்கள் அரசு` செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க 16/12/2018 அன்று மீண்டும் பிரதமராக ரணில் பொறுப்பேற்றார். பின்னர் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற ரணில் பதவி விலகினார்.
இலங்கை சரித்திரத்தில் மூன்று தடவை பிரதமராக இருந்தாலும் ஒரு முறை கூட முழுமையான ஆட்சிக் காலத்துக்குக் கூட இருக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி இதுவரை பதவி வகித்த 14 பிரதமர்களில் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரேயொரு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்ட இரு பிரதமர்களில் ரணிலும் ஒருவர்.
மென்மையாகப் பேசக் கூடியவர் என்றாலும் மேட்டுக்குடி அரசியலையே அவர் செய்து வந்தார் எனும் விமர்சனம் அவர் மீது உண்டு. `ராசியில்லாத ராஜாவாகவே`அவரது அரசியல் பயணம் இருந்துள்ளது.