சிவா பரமேஸ்வரன்
இலங்கை பொதுத் தேர்தல் முடிந்தாலும் தேசியப் பட்டியல் நியமனத்தில் குழப்பங்களும் சர்ச்சைகளும் தொடருகின்றன.
இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தேசியப் பட்டியல் நியமனங்களை வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் முன்னணி (ஜே.வி.பி), அபே ஜன பல பக்ஷய ஆகிய கட்சிகளுக்குள் தேசியப் பட்டியல் நியமனம் குறித்த இழுபறிகள் தொடருகின்றன.
தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் தமிழ் காங்கிரஸ் மட்டுமே சுமுகமான சூழலில் முடிவெடுத்து செல்வராஜா கஜேந்திரனின் பெயரை அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் நியமனம் தொடர்பிலும் சர்ச்சைகள் நீடிக்கின்றன.
இரட்டைக் குடியுரிமை:
தேர்தல் முடிந்த கையோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்த 17 பேர் கொண்ட பட்டியலில் சுரேன் ராகவனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் ஏற்கனவே தேசியப் பட்டியலுக்கு அவர் முன்மொழியப்பட்டிருந்தார். ஆனால் அவரது கட்சியிலிருந்தே இப்போது இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கனடியப் பிராஜவுரிமையுடன் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றிருந்த அவர் எவ்வாறு தேசியப் பட்டியலில் நியமனம் பெறலாம் என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
எனினும் அவர் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதியே தனது கனடியப் பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என்று கனடிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் அவர் கனடிய பிரஜாவுரிமைய வைத்திருந்த காலத்தில் எவ்வாறு வட மாகாண சபையில் ஆளுநராகப் பதவி வகித்தார் எனும் கேள்விகளும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015 தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர் நடிகை கீதா குமாரசிங்க. அவர் சுவிஸ் குடியுரிமையும் பெற்றிருந்தார். ஆனால் 2015 ஏப்ரல் மாதம் அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தம் காரணமாக இவரது நியமனம் குறித்து சர்ச்சை எழுந்து அது உச்சநீதிமன்றம் வரை சென்றது.
உச்சநீதிமன்றம் அவர் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று 2017 மே மாதம் அறிவித்தது. இதையடுத்து அவர் பதவியிழந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பெற்ற சலுகைகளையும் திரும்பச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2020 தேர்தலில் தனது சுவிஸ் பிரஜாவுரிமையை கைவிட்டு இலங்கைப் பிரஜையாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.
இலங்கையில் தேர்தல் முறையிலும், சட்டங்களிலும் உள்ள சில விடயங்களில் இருக்கும் ஒருவித தெளிவற்ற தன்மை காரணமாகவே இப்படியான பிரச்சினைகள் உச்சநீதிமன்றம் வரை செல்கின்றன.
பல நாடுகளில் ஏராளமானோர் இரட்டைக் குடியுரிமையை வைத்திருப்பது நடைமுறையிலிருந்து வருகிறது. ஆனால் இதைத் தேர்தல் காலத்தில் அரசியல் இலாபத்துக்கான பயன்படுத்தப்படுவதையும் காண முடிகிறது.
பொதுவாகத் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்து அதை பரிசீலிக்கும் போதும், தேர்தலுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் தேசியப் பட்டியல் ஏற்கப்படும் நிலையிலும் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வேட்பு மனுக்கள் ஏற்கப்பட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் தவிர்க்கலாம். தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சைகள் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகும் தொடர்கிறது.
2004 தேர்தலில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் போட்டியிடவில்லை. தேர்தலுக்கு முன்னரான தேசியப் பட்டியலிலும் அவர்களின் பெயர் முன்மொழியப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இவர்கள் இருவரும் ஐ.ம.சு.முன்னணி சார்பில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றனர். இவர்களின் நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. இதில் சட்டப் பிரச்சினை ஒன்று எழுந்தாலும் அவர்களின் நியமனம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
பதவிச் சண்டையில் பிக்குகள்:
நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட அபே ஜன பல பக்ஷயவுக்கு மாவட்ட ரீதியாக ஒரு ஆசனமும் கிடைக்காத போதிலும் தேசியப் பட்டியலில் கிடைத்த ஒரு ஆசனத்துக்காக மூன்று பிக்குமார் அடித்துக் கொள்கின்றனர்.
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அந்த நியமனம் அளிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து மற்றொரு தேரரான அதுரலிய ரத்திண தேரோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்தக் கட்சியின் பொதுச் செயலராக இருந்த வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் தனக்கே அந்த ஆசனம் வேண்டுமென உரிமை கோரியதால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியலுக்கு உரிமை கோரியுள்ள அவர் இப்போது தலைமறைவாக உள்ளார். வர்த்தமானியில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகே தன்னால் வெளியே வர முடியும் என்றும் விமலதிஸ்ஸ தேரர் உள்ளூர் ஊடகங்களுக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலுக்கு முன்னர் கையளிக்கப்பட்ட தேசியப் பட்டியலிலும் அவரது பெயர் இல்லை என்று அதுரலிய ரத்திண தேரர் வாதிடுகிறார்.
ஆனால் ஞானசார தேரர் தலைமையில் இந்தக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த விடயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
“பதவிக்கு ஆசைப்படக் கூடாது“ என்று கூறிய புத்த பகவானின் அறிவுரையையும் அசோகச் சக்ரவர்த்தி பதவியைத் துறந்து பௌத்தத்தைத் தழுவியதையும் பிக்குமார் மறந்தது ஏனோ? என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆட்டம் காணும் வீடு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு ஆசனத்துக்கு அம்பாறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தவராசா கலையரசனுக்கு அளித்தது தொடர்பிலான சர்ச்சை பெரியளவில் வெடித்துள்ளது. ஏற்கனவே `வீட்டுக்குள்` இருந்த மாவை-சுமந்திரன் மோதல் இப்போது வீதிக்கு வந்துள்ளது.
கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அந்த நியமனத்துக்கு தமது பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தி அதை ரத்து செய்யுமாறு கூட்டமைப்பின் தலைவரிடம் கோரியுள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் கலையரசனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இது கூட்டமைப்பிற்குள் மேலும் மோதலுக்கு வித்திட்டுள்ளது. கலையரசன் பதவி விலகுவதாகத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்படி அறிவித்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே கூட்டமைப்பால் வேறொருவர் நியமிக்கப்படுவது சாத்தியமாகும்.
வீட்டுக்குள் பற்றி எரியும் பிரச்சினையை வீட்டின் தலைவர் சம்பந்தர் எப்படிக் கையாளப் போகிறார்?
இப்படியான குழப்பங்கள் அனைத்துக் கட்சிகளிலும் நிலவுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் தமக்கு உரிய பங்கைக் கேட்டு ஏற்கனவே போர்க் கொடி உயர்த்தியுள்ளன.
தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் நடைபெற்று வரும் மோதல்கள், சர்ச்சைகள், முரண்பாடுகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது இலங்கையின் தேர்தல் முறை மற்றும் தேர்தல் சட்டங்களில் மாறுதல்கள் தேவை எனும் எண்ணம் தவிர்க்க முடியாததாகிறது.