சிவா பரமேஸ்வரன்
இலங்கையில் வெற்றிலை மங்களகரமான ஒரு பொருளாகக் கருதப்பட்டு மதிக்கப்படுகிறது. குறிப்பாக பௌத்த சிங்களவர்கள் எந்த சுப காரியங்களிலும் வெற்றிலை கொடுத்து வரவேற்பது அவர்களின் பாரம்பரியம்.
இம்முறை அமைச்சர்களுக்குப் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கும் போது வெற்றிலைக்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் 40 ராஜாங்க அமைச்சர்களில் கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கருவா, கிராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத் தொழில்கள், ஏற்றுமதி ராஜாங்க அமைச்சராக ஜனக வக்கும்பர பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கையில் 29 அமைச்சுக்களைக் உள்ளடக்கிய 25 பேர் கொண்ட அமைச்சரவையில் ஆறு அமைச்சுகள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை நாடாளுமன்றத்துக்கு ராஜபக்ச குடும்பத்திலிருந்து தெரிவான ஐந்து பேரில் நான்கு பேருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன. ராஜபக்சக்களின் சகோதரி மகனான நிபுண ரணவக்க மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெயர் | பொறுப்பு |
கோத்தாபய ராஜபக்ச | பாதுகாப்பு அமைச்சு |
மஹிந்த ராஜபக்ச | நிதி அமைச்சு |
புத்த சாசனம் மற்றும் கலாச்சார அமைச்சு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு | |
சமல் ராஜபக்ச | நீர்ப்பாசன அமைச்சு |
உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சு | |
நாமல் ராஜபக்ச | இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு |
சசீந்திர ராஜபக்ச
(சமல் மகன்) |
வெங்காயம், மிளகாய், கிழக்கு போன்றவை உற்பத்தி அமைச்சு |
அமைச்சரவையில் டக்ளஸ்-அலி சப்ரி:
ஆளும் தரப்பில் நேரடியாகவும் பங்காளியாகவும் 8 தமிழர்கள் உள்ள போதிலும் மூவருக்கு மட்டுமே அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள மீன்பிடித்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் தபால் மற்றும் தகவல் தொடர்பாடல் ராஜாங்க அமைச்சரானார். இ.தொ.காவைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு ராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.
ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐந்து. அதில் தேசியப் பட்டியல் உறுப்பினரான அல் சப்ரிக்கு மட்டுமே அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. அவர் நீதித்துறைக்கான கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசியக் காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.அதாவுல்லா ஆகியோருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனங்களும் வழங்கப்பட்டன. அந்த வெற்றிடத்துக்கு பிள்ளையான் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மைத்திரி இல்லாத அமைச்சரவை:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இம்முறை 14 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த நிமல் ஸ்ரீபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துமிந்த டி சில்வா மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டப் போதிலும் அவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
புது முகங்கள் உள்ளே பழைய முகங்கள் வெளியே:
ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜெயந்த, ரஞ்சித் சியம்பலபிட்டிய, ஜோன் செனவிரட்ன, எஸ். பி. திஸநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த சமரசிங்க, விஜேதாச ராஜபக்ச ஆகியோருக்கு இம்முறை அமைச்சராகும் வாய்ப்பு கிட்டவில்லை.
இவர்களில் பலர் மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசில் அங்கம் வகித்தவர்கள். அமைச்சுப் பட்டியலில் இவர்களுக்கு இடமளிக்கப்படாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதேவேளை இம்முறை நாடாளுமன்றத்தில் புது முகங்களாக நுழைந்த அலி சப்ரி, ஜீவன் தொண்டமான், மருத்துவ நிபுணர் சீதா அரம்பேபொல, அஜித் நிவாட் கப்ரால், சசீந்திர ராஜபக்ச, நாளக கொடகேவா, பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோரில் அலி சப்ரி தவிர ஏனையோர் ராஜாங்க அமைச்சர்கள்.
அமைச்சுப் பதவியில் பெண்கள்:
ஆளும் தரப்பிலுள்ள எட்டுப் பெண்களில் மூவருக்கு மட்டுமே அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன. பவித்திரா வன்னியாராய்ச்சிக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
சுதர்ஷனி ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராகவும், சீதா அரம்பேபொல திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, தகவல் தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 28, ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40. இதில் ஒரு ராஜாங்க அமைச்சுப் பதவி இன்னும் நிரப்பப்படவில்லை.
வெங்காயம், மிளகாய், போன்றவற்றுக்கு ராஜாங்க அமைச்சர்கள்:
* மரக்கறிகள், பழவகைகள், மிளகாய் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கைக்கு ஒரு ராஜாங்க அமைச்சர்.
* பால் மற்றும் முட்டைக்கு ஒரு ராஜாங்க அமைச்சு.
*கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கருவா, கிராம்பு, வெற்றிலைக்கு இவற்றுக்கெல்லாம் ஒரு ராஜாங்க அமைச்சு.
* பிரம்பு, பித்தளை, மண் பாண்டங்கள் ஆகியவற்றுக்கும் ஒரு ராஜாங்க அமைச்சு.
பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் கொரோனோ தாக்கம் மேலும் நிதிச் சுமைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த அளவுக்குத் தேவையில்லாத துறைகளுக்கு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
மக்கள் நலன் என்று வரும்போது கொரோனாச் சூழலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறும் அரசு அமைச்சர்களின் எண்ணிக்கையை ஏன் குறைக்கக் கூடாது என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு அரசின் பதில் என்ன?.
இது இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.