அன்பான வாசகர்ப் பெருமக்களே!
எமது கடந்த வார ‘கதிரோட்டம்’ கூட இந்த ‘கள்ள’ வாக்கு விவகாரத்தையே முக்கிய கருப்பொருளாகக் கொண்டு வடிக்கப்பட்டது. எமக்கும் கவலைதான். மனதைத் தேற்றிக் கொண்டு இந்த வாரமும் இந்த ‘கள்ள’ வாக்கோடு’நல்ல வாக்கு; என்பதையும் கதிரோட்டத்தின் தலைப்போடு சேர்த்துக் கொண்டுள்ளோம்.
நல்ல வாக்கு என்ற இரு சொற்களுக்கு நல்ல அர்த்தமே உண்டு. நல்லதைப் பேசுதல் என்பதே அதன் பொருள். கள்ள வாக்கு என்கின்றபோது எமக்கு ‘ புள்ளடி’ தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த நாட்களில் கள்ள வாக்குக்கும் புள்ளடிக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டது என்ற ‘உண்மை’ சில நாட்களுக்கு முன்னர் நடந்த இலங்கைத் தேர்தலின் மூலம் எமக்குத் தெரிய வந்தது.
நல்லவர்கள், நன்றாகச் சிந்தித்து,முகக் கவசம் அணிந்து வாக்களிப்பு
நிலையத்திற்குச் சென்று, தங்கள் வாக்குகளை தாம் விரும்பியவர்களுக்கு அளித்து விட்டு வீடு திரும்பி, பின்னர் இரவிரவாக “எங்கள் வாக்குகளின் பலனை அறிவோமே” என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி.
நீதியை விரும்புகின்றவர்கள் சொல்லுகின்ற நல்ல வாக்குகளைக் கேட்டு நல்லவர்கள் என்று தாங்கள் தீர்மானித்தவர்களுக்கு அளித்த வாக்குகள், இன்னொருவரின் வெற்றிச் செய்தியை காவிச் செல்லுகின்றன என்ற விடயத்தை அறிந்த போது தான் அந்த ‘நல்லவர்கள்’ கலங்கினார்கள். அவர்கள் கண்ணீர் சொல்லி நின்ற விடயத்தை உலகமே அறிந்து கோபத்தோடு இருக்கையில் நல்ல வாக்குகளை ‘கள்ள’ வாக்குகளாக மாற்றி கபடம் செய்தவர்கள், உண்மை பேசுபவர்கள் போல பாசாங்கு செய்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கத்தின் தேர்தகளில் கடைப்பிடிக்கப்படும் ‘சிஸ்டம்” இவ்வாறான சட்டத்திற்கு முரணான ஏமாற்று வேலைகளை செய்ய விடாது என்றும் கள்ள வாக்கு பெற்றவரின் பக்கம் நிற்கும் இன்னுமொருவர் கிளிநொச்சியில் நடத்திய ஊடகச் சந்திப்பில் துணிவாகப் பேசினார்.
இங்கு எது நடந்துள்ளது என்றால், தோல்வியின் விளிம்பையும் தாண்டி குழிக்குள் விழுந்த ஒருவரை மீட்டெடுக்க காரணமாக இருந்த வாக்குகள், களவு செய்த வாக்காளர்களால் இடப்படவில்லை. ஆனால் நல்ல வாக்குகள், யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்டுள்ளன..
குறிப்பிட்ட நபர் வாக்குகளின் அடிப்படையில் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு விலகிச் சென்றிருந்தால், அடுத்தடுத்து நடைபெறுகின்ற ஊடகச் சந்திப்புகளோ அன்றி கருத்து மோதல்களோடு இடம் பெற்றிருக்காது. மாறாக, எமது தமிழ் மக்கள் வடக்கில் மேலும் மேலும் கூறுகளாக பிரிக்கப்பட்ட வண்ணம் உள்ளார்கள். இதற்கு காரணமானவர்கள் எழுந்து நின்று பேசுவதற்கு மக்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஆனால் எப்போதோ ஆற்றிய ஒரு ‘பேருதவி’க்காக, பரிசுகள் இன்னும் பெற்றுக்கொண்டே இருக்கின்றார்கள். பச்சையோ நீலமோ இரண்டுமே இவ்வாறானவர்களுக்கு ஒன்றாகிப் போய்விட்டதே என்று கூட நாங்கள் அவர்களின் இன்னும் கேட்காமலேயே உள்ளோம். வெட்கமாக இருக்கிறது அல்லவா?
இனி, தோல்வியடைந்த ஒருவரை வெற்றியடையச் செய்த ஆட்சியின் உயர் பீடமானது மக்கள் ஆதரவு குறைந்த ஒருவரை கள்ள வாக்குகளால் வெற்றியடையச் செய்ததன் மூலம் எதைச் சாதித்துள்ளது என்றால் மக்கள் நிராகரித்த ஒருவருக்கு பாராளுமன்ற ஆசனம் ஒன்றை வழங்கியிருக்கின்றது. தொடர்ந்து அவருக்கு அச்சுறு|த்தல் அதிகம் உளதாக உலகிற்கு காட்டி கடுமையான இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமாதானத்தை விரும்பாத தமிழர்கள் சிலர் அவரைக் குறிவைத்துள்ளார்கள் என்றும் வெளியுலகிற்கு காட்டி, அவரை ஒரு ‘சமதானத் தூதர்’ என்று போற்றுவார்கள்.
வெற்றியை அடைய முடியாமற் போனவர் தேர்தல் பிரச்சாரங்களின் போது மேடையில் ‘சவால்’ விடுத்துள்ளார். இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. “நான் இந்தத் தேர்தலில் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகள் பெறுவேன்” என்று. அந்த நேரத்தில் அவருக்காக பல ஏற்பாடுகள் அரச மட்டத்தில் செய்யப்பட்டிருக்கலாம். அவர் தோல்வியடைந்த வேட்பாளர் ஆகி நடுத் தெருவிற்கு வந்துவிடக் கூடாது என்று அந்த ‘உயர் பீடம்’ முடிவெடுத்திருக்கலாம். அந்து முடிவு தான் முடிவு செய்யப்பட்ட ஒரு முடிவாகப் போய்விட்டது. ஆனால் பாவம், அந்த கொடுமையான முடிவிற்கு ஒரு புத்திஜீவியான பெண்மணி ஒருவர் பலிக்கடா ஆகிவிட்டார்.
இனிமேல் அந்த கள்ள வாக்குகளால் பெற்ற வெற்றியை தாங்கிய வண்ணம் அவர் செய்யப்போகின்ற அரசியல் பயணம் என்பதும், ஒரு களங்கமுள்ள பயணமாக இருக்கப்போகின்றது. இதனால் கலகங்கள் பல நிகழலாம்.
தமிழ் மக்களுக்கு இவ்வாறான பிரதிநிதிகளால் தொடர்ந்தும் பிரச்சனைகளும் அவமானங்களும் தோல்விகளும் வந்த வண்ணமே இருக்கப்போகின்றன. ஆனால் முறையற்ற வழியில் வெற்றி பெற்ற அவர்கள், அனைத்து வளங்களையும் பெற்று அரசின் பாதுகாப்போடு வீதிகளில் வலம் வரவே போகின்றார்கள்.
ஒரு பழமொழி இருக்கின்றது.’தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்று. எமது இனத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை வரையும் சென்று வினையை விதைத்தைமைக்கான பலனை அவர்கள் மீண்டும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிலையை மாற்றக்கூடியவர்கள் எம்மோடு இல்லாமல் போய்விடவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களில் நீதியின் பக்கம் நிற்பவர்கள், இவ்வாறானவர்களை புறக்கணிக்க வேண்டும், அல்லது ஒதுக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான அநீதி மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றுபடுபவர்கள் இணைந்து செயற்படக் கூடியவர்கள், அதை உடனேயே செய்ய வேண்டும்
அப்போதுதான் இனிமேல் எமது இனத்தின் மீதான அநீதியின் தாக்குதல்களின் அகோரம் தணியும் என்று நாம் நம்புகின்றோம்.