சிவா பரமேஸ்வரன்
இலங்கை மக்கள் தொகையில் 52 வீதம் பெண்களாகவுள்ள போதிலும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவர்களின் விகிதாசாரத்துடன் ஒப்பிடும் போதும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியாகவே உள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றிப் பேசி வந்தாலும் அது உதட்டளவில் மட்டுமே உள்ளது. பெண்களைப் புறக்கணிக்கும் இந்தப் போக்கு வேட்பாளர்கள் தெரிவிலிருந்து தேசியப் பட்டியல் நியமனம் வரை தொடருகிறது.
உலகில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு எனும் பெருமை இலங்கைக்கு உண்டு. அப்படியான நாட்டில் சனத்தொகையில் ஒப்பீட்டளவில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அரசியலில் யதார்த்த ரீதியில் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வருகிறது.
இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த சட்டசபையில் அடினே மெலமுறி (1931-35) முதலாவது பெண்ணாக ருவான்வெல தொகுதியிலிருந்து தெரிவாகியிருந்தார். 1936 தேர்தலில் கொழும்பு வடக்குத் தொகுதியிலிருந்து தெரிவான நேசம் சரவணமுத்து சட்டசபைக்குத் தெரிவான முதலாவது தமிழ்ப் பெண் பிரதிநிதி என்ற பெருமைக்குரியவர்.
சுதந்திரத்துக்குப் பின்னர் முதலாவது நாடாளுமன்றத்தில் மூன்று பெண்கள் தொகுதிவாரித் தேர்தலில் தெரிவாகினர். அதில் இருவர் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்..
சுதந்திரத்துக்கு பின்னர் தொகுதிவாரி முதல் விகிதாசாரம் வரை அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தெரிவானாலும் அவர்களின் விகிதாசாரத்துக்கேற்ப எண்ணிக்கை என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது.
இதுவரை இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பெண்களைப் பொறுத்தவரை அநேகமானோர் குடும்ப அரசியல் பின்புலத்தில் வாரிசாக வந்தவர்கள். குறிப்பாக உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க அவரது கணவர் சாலமன் டயஸ் பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அரசியலில் பிரவேசித்து பிரதமராகத் தெரிவானார். அவர் 10/10/2000 அன்று காலமாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்-முஸ்லிம் பெண்கள்:
சுதந்திரத்துக்கு பிறகு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற அடையளத்தைப் பெற்றவர் ரங்கநாயகி பத்மநாதன். 1977 தேர்தலில் பொத்துவில் தொகுதியில் த.வி.கூ வேட்பாளராகப் போட்டியிட்டுத் தெரிவான எம்.கனகரட்ணம் பின்னர் ஐ.தே.கவுக்கு தாவினார்.
1979ஆம் ஆண்டு அவர் காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அவரது சகோதரியான ரங்கநாயகி பத்மநாதனை ஐ.தே.க நியமித்தது. பதினோரு ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் 1989 தேர்தலில் தோல்வியடைந்தார்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை 2000ஆம் ஆண்டுத் தேர்தலில் அஞ்சான் உம்மா ஜே.வி.பின் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். அதே தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பேரியல் அஷ்ரப் தெரிவானார். தேர்தல் காலத்தில் அவரது கணவரின் அகால மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையைப் பேரியல் அஷ்ரப் பெற்றிருந்தாலும் இஸ்லாத்தின்படி (இத்தா) நான்கு மாதங்களும் 10 நாட்களுக்குப் பிற ஆண்களைச் சந்திப்பதற்குத் தடை இருப்பதால் அந்தக் காலம் முடிந்த பிறகே பதவியேற்றார்.
பேரியல் அஷ்ரப் 2000,2004 தேர்தலில் தெரிவாகி 2010ல் நாடாளுமன்ற அரசியலிருந்து ஒதுங்கினார்.
எனினும் பதிவியேற்பு திகதியின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பிரவேசித்த முதல் பெண் முஸ்லிம் உறுப்பினர் அஞ்சான் உம்மா.
அஞ்சான் உம்மா ஜே.வி.பி அங்கம் வகித்த ஐ.ம.சு.முன்னணி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் 2001, 2004 தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவானாலும் 2010 தேர்தலில் தோல்வியடைந்தார்.
கடந்த நாடாளுமன்றத்தில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் உட்பட 13 ஆக இருந்த பெண்கள் பிரதிநிதித்துவம் இம்முறை நான்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள் உட்பட 12 ஆகக் குறைந்துள்ளது. 2015 தேர்தலுடன் ஒப்பிடும் போதும் இம்முறை மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
2015 தேர்தலில் ஐ.தே.க சார்பில் தெரிவான விஜயகலா மகேஸ்வரன், த.தே.கூ தேசியப் பட்டியல் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தவிர ஏனையவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.
2020 தேர்தலும் பெண்களும்:
இந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 8% பெண்கள். பிரதானக் கட்சிகள் சார்பில் 76 பேர் களமிறக்கப்பட்டிருந்தாலும் 8 பேர் மட்டுமே இம்முறை தெரிவானார்கள். அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் பெண்களுக்கு இடமளித்திருந்தாலும் எவரும் தெரிவாகவில்லை.
2015 தேர்தலில் 13 பேர் தெரிவாகி 5.77% ஆக இருந்த பெண்கள் விகிதாசாரம் இம்முறை 12 ஆகக் குறைந்து 4.4% ஆக வீழ்ச்சியடைந்தது.
விகிதாசார முறை அறிமுகமான 1989 தேர்தல் முதல் மொனராகலை மாவட்டத்திலிருந்து தொடர்ந்து 8 முறை தெரிவான முன்னாள் அமைச்சர் சுமேதா ஜயசிங்க இம்முறை தோல்வியடைந்தார்.
இம்முறை நாடாளுமன்றம் செல்லும் பெண்களில் தாமரை மொட்டு-08, தொலைபேசி-03, ஜே.வி.பி-01 என உள்ளனர்.
தமிழ்ப் பெண் பிரதிநிதித்துவம்:
பெயர் | கட்சி | மாவட்டம் | காலம் |
ரங்கநாயகி பத்மநாதன் | ஐ.தே.க | அம்பாறை | 1978-1989 |
ராஜமனோகரி புலேந்திரன் | ஐ.தே.க | வன்னி | 1980-1994 |
பத்மினி சிதம்பரநாதன் | த.தே.கூ | யாழ்ப்பாணம் | 2004-2010 |
தங்கேஸ்வரி கதிர்காமர் | த.தே.கூ | மட்டக்களப்பு | 2004-2010 |
விஜயகலா மகேஸ்வரன் | ஐ.தே.க | யாழ்ப்பாணம் | 2010-2020 |
சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா | த.தே.கூ | தே.பட்டியல் | 2015-2020 |
ரங்கநாயகி பத்மநாதன் முதலாவது பெண் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் மக்களால் நேரடியாகத் தெரிவான முதல் பெண் உறுப்பினர் எனும் பெருமை ராஜமனோகரி புலேந்திரனையேச் சாரும்.
சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா 2015 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்விகண்ட நிலையில் பெண் பிரதிநிதித்துவம் என்ற ரீதியில் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டது. அவர் இம்முறையும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
ஐ.தே.க அமைப்பாளராக இருந்த தனது கணவரின் படுகொலையை அடுத்து அரசியலுக்கு வந்தவர் ராஜமனோகரி புலேந்திரன். அவ்வாறே விஜயகலா மகேஸ்வரனும் அரசியலுக்கு வரும் சூழல் ஏற்பட்டது. 2010, 2015 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவான இவர் இம்முறை படுதோல்வியைச் சந்தித்தார். .
கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண்கள் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியாமல் போனது துரதிஷ்டமே. வடக்கு-கிழக்கு மாகாணங்களிலிருந்து தான் இம்முறையும் ஓரிரு தமிழ்ப் பெண்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அங்குள்ள பெண் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறியதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. `அவளுக்கு ஒரு வாக்கு` (அதாவது கட்சிக்கு புள்ளடியிட்டாலும் அந்தக் கட்சியின் பெண் வேட்பாளருக்கும் ஒரு புள்ளடியிடவும்) விருப்பு வாக்குக்கான பெண் செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த பிரச்சாரமும் எடுபடவில்லை.
இம்முறை அனைவரும் சிங்களவர்:
இம்முறை தெரிவாகியுள்ள 12 பெண்களில் ஆளும் கட்சியின் பவித்திரா வன்னியராய்ச்சி கால் நூற்றாண்டைக் கடந்து நாடாளுமன்றத்தில் மிகவும் மூத்த உறுப்பினராக உள்ளார். தந்தையின் வாரிசாக அரசியலுக்கு வந்த இவர் 1994ல் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியில் தெரிவாகி இரட்டைக் குடியுரிமைப் பிரச்சினைக் காரணமாக கீதா குமாரசிங்க பதவியிழந்தார். அவர் சுவிஸ் பிரஜையாகவும் இருந்ததால் அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தத்தின்படி அவரது தெரிவை நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது. எனினும் அவர் இம்முறை இலங்கைப் பிரஜையாக காலி மாவட்டத்தில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
இலங்கையிலுள்ள தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை 22. இருப்பினும் 5 மாவட்டங்களிலிருந்து மட்டுமே இம்முறைப் பெண்கள் தெரிவாகியுள்ளனர்.
இதில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மாத்திரம் பவித்திரா வன்னியாராய்ச்சி மற்றும் முதித்த த சில்வா தாமரை மொட்டுச் சார்பிலும் தலதா அத்துகொரள தொலைபேசி சார்பிலும் தெரிவானார்கள். கம்பஹா மாவட்டத்திலிருந்து தாமரை மொட்டு சார்பில் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, கோகில தர்ஷன குணவர்த்தன ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் தொலைபேசி ஊடாக ரோஹினி கவிரட்ணவும் காலி மாவட்டத்தில் கீதா குமாரசிங்க தாமரை மொட்டிலும் அதே சின்னத்தில் கேகாலையில் ராஜிக விக்ரமசிங்கவும் தெரிவாகியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்துப் பெண்களும் நடைபெற்றத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் ஐந்து பேர் மட்டுமே மீண்டும் தெரிவாகியுள்ளனர். தேசியப் பட்டியலில் தெரிவான நான்கு பெண்கள் உட்பட இம்முறை 7 பேர் புதுமுகங்கள்.
2015ல் தெரிவான ஹிருணிகா பிரேமச்சந்திர (கொழும்பு) சந்திராணி பண்டார (அனுராதபுரம்) அனோமா கமகே (அம்பாறை) சிறியானி விக்ரம (அம்பாறை) ஆகியோரும் 2020 தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
ராஜபக்ச அரசாங்கம் நாட்டில் தேர்தல் சீர்திருத்தம் உட்பட பல மாறுதல்களை கொண்டுவர உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. அப்படிச் செய்யும் போது உள்ளூராட்சி சபைகள் போல நாடாளுமன்றத்திலும் குறைந்தது 25 வீதமாவது பெண்கள் இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும். இல்லையேல் `வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை` தான்.