பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
அத்துடன், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் அனைவரையும் எதிர்வரும் செப்ரெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின்போது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் இன்று (சனிக்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் குறித்த பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்தர்களில் சுமார் ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பதாரிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை மேற்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரமாக சேமலாப நிதி கணக்கினை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாது தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதன்போது, பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும், சேமலாப நிதிக் கணக்கினை வைத்திருந்தாலும் பட்டப்படிப்பிற்கு பொருத்தமற்ற தொழில்களில் தற்காலிகமாக ஈடுபட்டு வருகின்றவர்களுக்கும் நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறும் மேலதிகமாக பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்