மூத்த செய்தியாளர் சிவா பரமேஸ்வரன்
இலங்கை அரசியல் யாப்பில் 13ஆவது சட்டத் திருத்தத்தை ஆளும் தரப்பிலிருந்து கொண்டே நேரடியாக எதிர்த்து வாக்களித்த மஹிந்த யாப்பா அபேயவர்தன 33 வருடங்களுக்குப் பின்னர் அதே நாடாளுமன்றத்தில் சபாநாயகராகத் தெரிவாகியுள்ளார்.
1983 ஆண்டு ஹக்மீமன தேர்தல் தொகுதியில் ஏற்பட்ட ஐ.தே.கவின் வெற்றிடத்துக்கு அக்கட்சியினால் நியமிக்கப்பட்டு முதல் தடவையாக அவர் நாடாளுமன்றம் சென்றார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறையிலான அதிகாரப் பகிர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திருத்தம் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க அரசால் முன்வைக்கப்பட்ட போது மஹிந்த யாப்பா அபேயவர்த்தன அதற்கு எதிராக வாக்களித்தார். கட்சித் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததால் அவரை கட்சியிலிருந்து ஐ.தே.க தலைவரான ஜே.ஆர். வெளியேற்றினார்.
1989ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகத் தெரிவானார். அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்த நிலையில், ஐ.தே.கவிலிருந்து வெளியேறிய காமினி திஸநாயக்க, லலித் அதுலத்முதலி அணியினர் ஜனநாயக ஐக்கியத் தேசிய முன்னணியை ஆரம்பித்தனர். இதன் பின்புலத்திலேயே பிரேமதாஸவுக்கு எதிராக 1991ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அது தோல்வியடைந்தது.
ஐ.தே.கவிலிருந்து வெளியேற்றப்பட்ட யாப்பா அபேயவர்தன ஜனநாயக ஐக்கியத் தேசிய முன்னணியில் இணைந்து செயல்பட்டார். தென் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் முதலமைச்சராகவும் 2000வரை பதவி வகித்தார். சந்திரிக்கா குமாரணதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி சார்பில் முதலமைச்சராக இருந்த இவர் 2000ஆம் ஆண்டு தேர்தலில் அந்த முன்னணி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ள இவர் இப்போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாகாண சபை முறையை எதிர்த்து வாக்களித்த அவர் பின்னர் மூன்று முறை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகவும் இருந்தார் என்பது பலர் இப்போது மறந்திருக்கக் கூடும்.
மஹிந்த யாப்பா அபேயவர்த்தன சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரை வாழ்த்தி உரையாற்றிய சிறுபான்மைக் கட்சித் தலைவர்களில் பலர் அவர் அதிகாரப் பகிர்வுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அவர் மீது நம்பிக்கையும் வெளியிட்டனர்.
நாடாளுமன்ற முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி வெளியிட்ட அரசின் கொள்கைப் பிரகடனத்தில் இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அப்படி புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் போது சபாநாயகர் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்து அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் சிறுபான்மை கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. சபாநாயகர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை இவர் நிலை நிறுத்த வேண்டும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது.
காவி உடை இல்லாத முதல் நாள் அமர்வு :
இருபது வருடங்களுக்கு பிறகு காவி உடை தரித்த உறுப்பினர் இல்லாத முதல் நாள் நாடாளுமன்ற அமர்வு நடந்தேறியது. 2001ஆம் ஆண்டு ஐ.ம.சு.முன்னணி சார்பாக இடது சாரியான வத்தேகம சமிந்த தேரர் (2001-04) என்ற பிக்கு காலி மாவட்டத்திலிருந்து நாடளுமன்றத்துக்கு தெரிவானார்.
இவரே நாடாளுமன்றதில் பிரவேசித்த முதலாவது பௌத்த மதகுரு. இவரைத் தொடர்ந்து 2004 தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய என்ற சிங்கள கடும் போக்குக் கட்சி சார்பில் ஒன்பது பேர் கொண்ட பிக்குமார் பட்டாளம் நாடாளுமன்றத்துக்கு சென்றது.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஓரிரு பௌத்த பிக்குமார்கள் பிரதானக் கட்சிகள், சிறிய கட்சிகள், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திலிருந்தனர். கடைசியாக 2015ல் அதுரலிய ரத்தின தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இம்முறை பௌத்த பிக்குமார்களைக் கொண்ட அபே ஜன பல பக்ஷயவுக்கு மாவட்ட ரீதியாக பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டாலும் தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்தது. இந்த ஒரு ஆசனத்துக்கு ஞானசார தேரர், அதுரலிய ரத்தின தேரர் உட்பட புத்த பகவானின் போதனைப்படி `பற்றற்ற` மூன்று பிக்குமார் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. இதனால் தேர்தல் ஆணையத்தால் இது தொடர்பில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தில் பிக்குமார்களுக்கு ஒரு இடம் கிடைத்தும் அதை நிரப்ப முடியாமல் உள்ளது.
அமைச்சர் பதவியும் ஏமாற்றமும் :
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆளும் தரப்பில் தனித்தும் கூட்டாகவும் போட்டியிட்ட முன்னணி வேட்பாளர்கள் வருங்கால் அமைச்சர்கள் எனும் பாணியிலேயே தமது பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.
இந்த மாகாணங்களில் இருந்து தெரிவான 6 தமிழ் – முஸ்லிம் உறுப்பினர்களில் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
பொதுஜன பெரமுனவில் நேரடியாகத் தெரிவான ஒரேயொரு தமிழரான ச.வியாளேந்திரன் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தாலும் ராஜாங்க அமைச்சர் பதவியே அவருக்கு கிடைத்தது.
அதேபோன்று மொட்டுக் கட்சியில் நேரடியாக அதுவும் வன்னியிலிருந்து தெரிவான ஒரேயொரு முஸ்லிமான காதர் மஸ்தானுக்கு எந்த அமைச்சுப் பொறுப்பும் கிடைக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரேயொரு பிரதிநிதியான அங்கஜன் இராமநாதன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசியக் காங்கிரஸ் தலைவர் ஏ.எல் அதாவுல்லாஹ் ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும் ஏமாற்றமே மிஞ்சியது.
இருந்தாலும் ஆறுதல் பரிசாக அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோருக்கு அவர்களின் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி கிடைத்துள்ளது. அங்கஜன் இராமநாதனுக்கு மேலதிகப் பரிசாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் கிடைத்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய சி.வி யின் உரை:
நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வின் போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சி.வி யின் உரை நாடாளுமன்ற ஹன்சார்டில் (அதிகாரபூர்வ பதிவேடு) பதியப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
சி.வி. தனது உரையில் “இலங்கையின் பூர்விகக் குடிகள் தமிழர்கள், தமிழ் மொழியே இலங்கையில் தோன்றிய முதல் மொழி” எனவும் கூறியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்யும் போது நாட்டின் பிரிவினைக்கு துணை போக மாட்டேன் என்று உறுப்பினர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி சுட்டிக்காட்டிய மனுஷ நாணய்க்கார, இலங்கையின் பூர்வ குடிகள் யார் என்பது தொடர்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால் அது ஹன்சார்டில் பதிவு செய்யப்படக் கூடாது-அது நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது ஆராயப்படும் என்று சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
புலம் பெயர்ந்தவர்களின் சிங்கள அமைப்பு :
புலம் பெயர்ந்த சிங்களவர்கள் எனும் அமைப்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களில் கடும் பௌத்த சிங்கள போக்குடையோர்களை அடையாளம் கண்டு அவர்களை ஆதரிக்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்தது.
ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை, 13 நீக்கம் போன்ற பல விடயங்களை ஆதரிக்க ஒப்புக் கொண்டதற்காக குறித்த 10 பேரை ஆதரிக்குமாறு மக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த பத்து பேரில் கொழும்பு மாவட்டத்தில் தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, விமல் வீரவன்ச ஆகிய நால்வருடன் அனுராதபுரம், களுத்துறை, கம்ஹா மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் என மொத்தமாக ஏழு பேர் நாடாளுமன்றதுக்கு தெரிவாகினர்.
வன்னியில் சிவில் பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியாக இருந்த கேர்ணல் ரட்ணபிரிய பண்டு உட்பட திருகோணமலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டவர்கள் தோல்வியடைந்தனர்.