ஜெகதீஸ்வரன் டிஷாந்த் (கனடா உதயன் செய்தியாளர்)
1990ஆம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன், வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி உட்பட பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
1990ஆம் ஆண்டு இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை பிரதேசங்களின் மக்கள் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது ஆவணி 15, 18 மற்றும் 22ஆம் திகதிகளில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக இன்றைய அனுஷ்டிப்பு இடம்பெற்றது.
முருகன் ஆலயத்தில் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு மௌன அஞ்சலியுடன், வாயில் கறுப்புத் துணி கட்டி உறவுகள் தங்கள் ஆதங்கத்தினையும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பான எதிர்பார்ப்பினையும் வெளிப்படுத்தும் வண்ணம் அமைதி வழியில் இந்த அனுஷ்டிப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.