வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் நான் மிகுந்த கரிசனையாக உள்ளதோடு அம்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எனது பலத்தைப் பிரயோகித்து அம் மக்களின் பிரச்சினைகளை இலகுபடுத்துவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – ” வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் நான் மிகுந்த கரிசனையாக உள்ளதோடு அம்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எனது பலத்தைப் பிரயோகித்து அம் மக்களின் பிரச்சினைகளை இலகுபடுத்துவேன்
மேலும் வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்கவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் சுயலாப அரசியல் கூட்டுக்களால் தடுக்கப்பட்டதோடு மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் உரிய மக்களுக்கு சென்றடையவில்லை. இம்முறை தேர்தலில் வட மாகாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களை மக்கள் வழங்கியுள்ளாரகள்.
இதன் மூலம் இருப்பதை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதே எமது நிலைப்பாடாகும். தற்போது நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் சட்டியிலிருந்ததை அடுப்பில் விழ வைத்து விட்டார்கள். ஏனெனில் சில தமிழ் அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தேவையானது எது என சிந்திக்காமல் விதண்டாவாத பேச்சுக்களால் தமிழ் மக்களுக்கு இருக்கின்றவற்றை கூட இழக்கக் கூடிய நிலைக்கு இட்டுச் செல்கிறார்கள்.
இந் நிலையில் இவ் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் விளிப்படையாமல் விட்டால் அதன் விளைவுகளை மக்களே ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி விடும் 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இத் திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு தடையாக இருந்த விடயங்கள் நீக்கப்பட்டு புதிய விடயங்கள் உட்சேர்க்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது