தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அந்தப் பதவிக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டுள்ளாரென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு, கட்சியின் கொறடா பதவிக்கு புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த செய்தியை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில், பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதாகும் என தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெறும்போது நாடாளுமன்றக் குழுவின் தலைவர் (கொறடா) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஆகிய பதவிகளுக்குரிய நியமனங்கள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் தற்போது வரையில் இந்தப் பதவிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என கூட்டமைப்பு தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.