சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இலங்கையில் புதிய அரசாங்கத்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனத்தில் சிறுபான்மை இன மூத்த அதிகாரிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது ராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனத்திலும் உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே 28 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனத்தில் 28 பேரில் தமிழர் அல்லது முஸ்லிம் எனப் பெயருக்குக் கூட ஒருவர் இல்லை.
40 ராஜாங்க அமைச்சுகளில் 35 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தில் ஒரு தமிழருக்கு இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு அதுவும் இல்லை.
அமைச்சரவை செயலாளரினால் ராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களின் விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது .
இதில் ஏற்கனவே முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு செயலாளராகவிருந்த சுந்தரம் அருமைநாயகம் மட்டுமே சிறுபான்மை இனம் என்ற அடையாளத்தடன் இம்முறை பெயரளவுக்கு ஒரு அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த வருட இறுதியில் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது 32 ராஜாங்க அமைச்சு செயலாளர்கள் நியமனம் பெற்றனர்.
அப்போது சுந்தரம் அருமைநாயகம்-முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு, ஆர்.விஜயலட்சுமி – சமூக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு மற்றும் எம்.ஐ,அமீர் – விவசாய ஏற்றுமதி ராஜாங்க அமைச்சு எனச் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மூவருக்கு ராஜாங்க அமைச்சுச் செயலாளராகும் வாய்ப்பும் கிடைத்தது.
ராஜாங்க அமைச்சுகள் 32 ஆக இருந்த வேளை இரு தமிழர்களுக்கும் ஒரு இஸ்லாமியருக்கும் நியமனம் வழங்கப்பட்டன.
ராஜாங்க அமைச்சுகள் தற்போது 40ஆக உயர்ந்த போதிலும் அதற்கேற்ற வகையில் சிறுபான்மையின செயலாளர்கள் எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக இப்போது குறைந்துள்ளது. அதாவது முன்னர் இரு தமிழர்கள் இருந்த நிலையில் அது ஒன்றாகி, முஸ்லிம்களுக்கு இருந்த ஒன்று இல்லாமல் ஆகியுள்ளது.
இலங்கை நிர்வாகச் சேவை மற்றும் சமாந்தர சேவைகளில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மூத்த அதிகாரிகள் பலர் இருந்தாலும் இது போன்ற தேசிய மட்டத்திலான உயர்ந்த பதவிகளில் சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளுக்கு நியாயம் வழங்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டுக்கு அரசு தொடர்ந்தும் ஆளாகி வருகிறது.
இந்தப் போக்கு தமிழ்-முஸ்லிம் அதிகாரிகள் விடயத்தில் அரசின் மாற்றாந்தாய் போக்கு மனப்பான்மையைக் காட்டுகிறது.
நாட்டில் சட்டம் என்பது சகலருக்கும் ஒரே சட்டம். இதில் பாகுபாடு இல்லை என ஜனாதிபதி கூறுகின்றார். தனது ஆட்சியில் எந்தவொரு இனத்திற்கும் அநீதி இழக்கப்படமாட்டாது எனப் பிரதமர் தொடர்ந்தும் கூறுகின்றார்.
ஆனால் சொல்லும் செயலும் மாறுபட்டுள்ளது. இது தமது சமூகங்களைப் புறக்கணிக்கும் செயலா? அல்லது பழிவாங்கும் செயலா? என்று தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் தமக்குள் மன வேதனை அடைந்தாலும் வாய் திறக்க முடியாத சூழலில் அம்மக்களும் அவர்களின் தலைமைகளும் உள்ளன என்பது கசப்பான உண்மை.
பாதுகாப்பு அமைச்சர் யார் ?
இலங்கை அரசு 28 அமைச்சுக்களைக் கொண்டது. அண்மையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர்களின் பெயர்களும் அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளும் வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியாகியுள்ளன.
இதில் அமைச்சர்கள் தொடர்பான ஒரு வர்த்தமானியை 13.08.2020 அன்று ஜனாதிபதியின் செயலர் வெளியிட்டுள்ளார். அதில் 27 அமைச்சர்களின் பெயர்களும் அவர்களின் அமைச்சுக்களும் உள்ளன.
அதே தினம் அவரால் வெளியிட்டப்பட்ட மற்றொரு வர்த்தமானியில் 28 அமைச்சுகளின் செயலாளர்களின் பெயர்கள் உள்ளன.
செயலர்கள் தொடர்பிலான வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சின் செயலராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ணவின் பெயர் இருந்தாலும் அமைச்சர்கள் தொடர்பான வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சர் குறித்து எந்த தகவலும் இல்லை.
இலங்கையில் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராகச் செயல்படுவது மரபாக இருந்துள்ளது. ஆனால் சர்ச்க்சைகுரிய 19ஆவது திருத்தம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அமைச்சுப் பொறுப்பை வகிக்க முடியும் என்று கூறுகிறது. அதேவேளை அந்தத் திருத்தத்தில் சில குழப்பங்களும் தெளிவற்ற தன்மையும் உள்ளன என்று சட்டவாதிகளும் அரசியல்வாதிகளும் கூறுகின்றனர்.
இப்படியான நிலையில் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் 20ஆவது திருத்தம் இவ்வாறான குழப்பங்களைத் தெளிவுபடுத்தும் என்று கருதப்படுகிறது.
40 ராஜாங்க அமைச்சுகளும் நிரம்பின :
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 40 ராஜாங்க அமைச்சுகளில் இதுவரை நிரப்பப்படாமல் இருந்த கல்வி சீர்திருத்தங்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ராஜாங்க அமைச்சர் பதவியைப் பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் சுசில் பிரேமஜயந்த திடீரென நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகால கேபினட் அமைச்சராக இருந்த அவருக்கு இப்போது ராஜாங்க அமைச்சர் பொறுப்பே கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்தப் பதவி விஜயதாஸ ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியை எதிர்பார்த்த அவர் நிலையில் இதை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
ஏனைய அமைச்சர்கள் பதவியேற்று இருவாரங்கள் கடந்த நிலையில், காலியாக இருந்த ஒரேயொரு ராஜாங்க அமைச்சுப் பதவியும் தற்போது நிரப்பப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அதிருப்தி தொடர்ந்து நிலவி வருகிறது.
அமைச்சுப் பதவி காலியில்லை
ஜனாதிபதியால் 09.08.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி அமைச்சுகளின் எண்ணிக்கை 28 மற்றும் ராஜாங்க அமைச்சுகளின் எண்ணிக்கை 40. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் மட்டும் நிதி, புத்த சாசனம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு என்று மூன்று அமைச்சுப் பொறுப்புகள் உள்ளன.
சுசில் பிரேமஜயந்தின் நியமனத்துடன் அமைச்சுப் பதவிகளுக்கான கதவு வர்த்தமானி அறிவித்தலின் படி மூடப்பட்டுள்ளது.
அமைச்சுப் பதவி எதிர்பார்ப்புடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், மொட்டுக் கட்சியிலும் பங்காளிக் கட்சிகளிலும் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன், காதர் மஸ்தான், ஏ.எல்.அதாவுல்லாஹ் போன்றோர் கதவு மீண்டும் திறக்கப்படும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்.