சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இலங்கையின் தற்போது உள்நாட்டு அரசியலில் பலம் பொருந்திய குடும்ப வலையமைப்பை கொண்டுள்ள அரசியல் குடும்பம் என்றால் அது ராஜபக்ச குடும்பம் தான்.
குடும்ப அரசியல் என்றால் சேநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் என்று தான் ஏற்கனவே இலங்கையிலிருந்தது. அந்த இடத்தை இப்போது ராஜபக்ச குடும்பம் பிடித்துள்ளது
1951ஆம் ஆண்டு ஐ.தே.கவிலிருந்து வெளியேறிய பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அச்சமயத்தில் அவருக்குத் துணையாக வெளியேறியவர்களில் மஹிந்தவின் தந்தையான டி.ஏ. ராஜபக்சவும் ஒருவர்.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியலுக்கு வித்திட்டவர் மஹிந்த ராஜபக்சவின் பெரியப்பாவான டி.எம்.ராஜபக்ச. சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த சட்ட சபையில் அவர் 9 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவையடுத்து இளைய சகோதரரான டி.ஏ.ராஜபக்ச (மஹிந்தவின் தந்தை) 1947 தேர்தலில் ஐ.தே.க சார்பில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற அரசியலில் பிரவேசித்தார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக 1960 மார்ச் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். எனினும் அதே ஆண்டு ஜூனில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தெரிவானார். இருந்தாலும் 1965 தேர்தலில் தோல்வி கண்டார். தனது நீண்ட நாடாளுமன்ற அரசியலில் அவர் அமைச்சர் மற்றும் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
மஹிந்தவின் அரசியல் பிரவேசம் :
டி .எ ராஜபக்ச 1967 ல் காலமானதையடுத்து அவரது இரண்டாவது மகன் மஹிந்த ராஜபக்ச அரசியலில் நுழைந்தார். 1970 தேர்தலில் பெலியத்த தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராகக் களமிறங்கி நாடாளுமன்ற உறுப்பினரானார்.
1977 ஆம் ஆண்டு தொகுதி வாரியாக நடைபெற்ற இறுதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்தவும் சுதந்திரக் கட்சி அடைந்த படுதோல்வியில் சிக்கினார்.
1989ல் நடைபெற்ற முதலாவது விகிதாசார முறையிலான தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தெரிவாகி மீண்டும் நாடாளுமன்றம் சென்று அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என படிப்படியாக உயர்ந்தார்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்த அவர் தனக்கு முன்னர் ஜனாதிபதி பதவி வகித்தவர்களை போலன்றி மீண்டும் நாடாளுமன்ற அரசியலை நாடினார்.
அதே வருடத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனது பூர்வீகமான ஹம்பாந்தோட்டையில் தனது வாரிசான நாமல் ராஜபக்சவுக்கு வழிவிட்டு அவர் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில் அம்மாவட்டத்திலிருந்து மீண்டும் தெரிவாகி பிரதமராகியுள்ளார்.
இலங்கை அரசியலில் மிகவும் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியிலிருந்த ஒருவர் அதை விடக் குறைவான பதவிக்கு வரும் மன நிலையை ஏற்படுத்தியவர் மஹிந்த ராஜபக்ச.
ஜனாதிபதியாக இருந்தவர் அடுத்த படிநிலையில் இருக்கும்
பிரதமர் பதவிக்கும் வர முடியும் என்பதற்கு வித்திட்ட மஹிந்த ராஜபக்சவின்
வழியில் இப்போது மைத்திரி பால சிறிசேனவும் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
1989 முதல் வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வந்த ராஜபக்ச தனது அரசியல் ஆளுமை, பலம், வெகுஜன தொடர்பு, சிங்கள பௌத்த கோட்பாடு போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு தனது உடையிலும் மக்களைக் கவரக் கூடிய ஒரு தன்மையையும் உருவாக்கினார். அப்படி கோலோச்சி வந்தவருக்கு 2015 ஜனாதிபதித் தேர்தல் எதிர்பாராத திருப்பத்தையும் தோல்வியையும் அளித்தது.
முதல் நாள் அலரி மாளிகையில் சக முக்கியஸ்தர்களுடன் மஹிந்தவுடன் அப்பம் சாப்பிட்ட மைத்திரிபால சிறிசேன மறு நாள் கூட்டு எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிட ஒப்பமிட்டார். 2015க்கு முன்னர் நகமும் சதையுமாக இருந்த மஹிந்த-மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் “கண்ணா நீயும் நானுமா….?“ என மோதிக் கொண்டனர்.
அன்று மஹிந்த இன்று மைத்திரி :
முன்னாள் ஜனாதிபதிகள் பதவி முடித்தவுடன் நேரடி அரசியலிருந்து விலகியிருந்தனர். ஆனால் மஹிந்த ராஜபக்ச 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அரசியலை விட்டு ஒதுங்காமல் மீண்டும் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டார்.
முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளை அனுபவித்தவாறு சாதாரண உறுப்பினராக நான்கரை ஆண்டுகளை மஹிந்த கழித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான வாய்ப்பிருந்தும் மைத்திரி-ரணில் `நல்லாட்சி` அதற்குக் கூட தடையாக இருந்தாலும் பொறுமையுடன் இருந்தார். அக்காலப்பகுதியில் தேசிய அளவில் ஒரு பிரதான மாற்றுக் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பி அதை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றார்.
தனது தோல்வி பயத்தின் காரணமாக மைத்திரிபால 2019 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டார். அரசியல் அனாதையாவதை விட எதிர்காலத்தை மனதில் கொண்டு தனது கட்சியுடன் மஹிந்தவிடம் தஞ்சம் புகுந்தார்.
அன்று மஹிந்த குருநாகலை மாவட்டத்திலிருந்து தெரிவானது போல்
இன்று மைத்திரியும் பொலநறுவை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற அரசியலுக்கு மீளத் திரும்பியுள்ளார்.
2015 நாடாளுமன்றத்தில் மைத்திரி – ஆளும் தரப்பு, மஹிந்த- எதிர்த் தரப்பு என இருந்த அரசியல் 2020ல் இருவரும் ஆளும் தரப்பு என மாறினாலும் மஹிந்த பிரதமராக உள்ளார் மைத்திரி சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்
மகிந்தவின் பலம் உடன் பிறப்புகள் :
மஹிந்தவின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அவரது
உடன்பிறப்புகளின் பக்க பலமே உறுதுணையாக இருந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் சகோதரர்களின் மாறாத அன்பும் ஆதரவு காரணமாகவே மஹிந்த மீண்டெழுந்தார்.
சகோதரர்களின் ஆதரவின் மூலம் தனது குடும்ப கலாச்சாரத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் பலமான அரசியல் கட்சியை கட்டியெழுப்பி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எனும் நிலைக்கு கொண்டுவந்துள்ளார்.
போர் காலத்திலும் அதற்குப் பின்னரான அரசியல் செயல்பாடுகளிலும் தனக்கு
மிகவும் உறுதுணையாக இருந்த இளைய சகோதரர் கோத்தாபய ராஜபக்சவை
ஜனாதிபதி எனும் அதியுயர் பதவியில் அமர வைத்துள்ளார்.
மூத்த சகோதரர் சாமல் ராஜபக்சவை மூத்த அமைச்சராக்கி முக்கிய பொறுப்புகளைக் கையளித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்கு அரசியல் வியூகத்தை வகுக்கும் மற்றொரு சகோதரர் பசில்
ராஜபக்சவிடம் கட்சியின் பிடியை ஒப்படைத்துள்ளார்
அரசியல் யாப்பு 19 வது திருத்தம் ஒழிக்கப்பட்டு 20ஆவது திருத்தம் மூலம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் உள்நாட்டு அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும் போது தேசிய பட்டியலில் மூலம் பசிலை நாடாளுமன்றத்துக்கு
மீண்டும் கொண்டு வந்து அமைச்சராக்க காய் நகர்த்தல் முன்னெடுக்கப்படுகிறது.
ராஜபக்சக்களின் அரசியல் பாதை தொடர வேண்டும் எனும் தொலைதூரப்
பார்வையில் நாமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச(சாமலின் மகன்) ஆகியோரையும் அமைச்சராக்கியுள்ளார். மேலும் தனது சகோதரியின் மகன் நிபுண ரணவக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக்கியுள்ளார்.
மஹிந்தவின் தந்தை அரசியலுக்கு வர முன்னோடியாக இருந்த அவரது மூத்த சகோதரரான டி.எம் .ராஜபக்சவின் வாரிசுகளான இரு மகன்கள் மற்றும் பேத்தி ( நிருபமா ராஜபக்ச) என அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் வளர முடியவில்லை.
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் எனும் நிலையில் தனது பின்னடைவைப்
பொருட்படுத்தாமல் மக்களோடு மக்களாக நின்று ”அரசியல் களத்தில் விழுந்தாலும் எழுவேன்” என்று இன்று ”பீனிக்ஸ் பறவை” போல மீண்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
ரணில் போன்று மேட்டுக்குடி அரசியல் செய்யாமல் சாரத்தை வரிந்து கட்டிக்
கொண்டு வீதியில் இறங்கிப் போராடி மக்களை தன்பால் ஈர்த்து அதை தேர்தல் வெற்றியாக மாற்றிக் காட்டியவர் மஹிந்த.
இருந்தாலும் போர் காலத்தில் அவரது தலைமையிலான அரசு நடந்து கொண்ட விதம், சர்வதேச மட்டத்தில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்
குற்றச்சாட்டுக்கள், தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைப் புறந்தள்ளியது, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றுக்கும் அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.
அரசியல் பழி வாங்கலும் மஹிந்தவும் :
மஹிந்த-மைத்திரி இடையே மேலோட்டமாக காணப்படும் நேசம் நீறுபூத்த
நெருப்பாக உள்ளது என்பதே யதார்த்தம்.
தான் ஒரு போதும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தாலும் அவரது செய்கை சொல்லியதுடன் ஒத்துப் போகவில்லை எனும் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
குறிப்பாக மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துப் போட்டியிட்டாலும் அமைச்சரவை என்று வந்த போது மைத்திரி தரப்பிற்கு நான்கு பேருக்கு அமைச்சுப் பதவி கிடைத்தாலும் முக்கிய அமைச்சுகள் ஏதும் வழங்கப்படவில்லை.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றாலும் அதேயாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மௌனம் சாதித்தார். தேர்தலில் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வி கண்டது
பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமை மைத்திரி வசம் செல்ல `நல்லாட்சி அரசு`என்று மைத்திரி-ரணில் தலைமையிலான ஆட்சி மலர்ந்தது .
முரண்பாடுகளையும் இழுபறிகளையும் கொண்ட அந்த ஆட்சியில் மைத்திரி தரப்பிலும் சிலர் அமைச்சர்களாக இருந்தனர் அவர்கள் ஆட்சியின் இறுதிக் காலத்தில் விலகி முழுமையாக மஹிந்தவிடம் சரணடைந்தனர்.
அன்றும் இன்றும் மஹிந்தவை அவர்கள் தலைவராக கொண்டிருந்தாலும் இம்முறை அமைச்சுப் பதவி விடயத்தில் `நல்ல்லாட்சியில்` அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.திஸநாயக்க, சுசில் பிரேம ஜயந்த, ஜோன் செனிவரட்ண போன்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமைச்சரவையில் மைத்திரிக்கு கூட இடமளிக்கப்படவில்லை.
அரசியல் யாப்பில் 20வது திருத்தத்தின் பின் மைத்திரி துணைப் பிரதமராக்கப்படுவார் என்று ஒரு ஊகத்தின் அடிப்படையில் மைத்திரி தரப்பு ஆறுதல் அடைகிறது. இருந்தாலும் இது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்கிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அதேவேளை வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கி தேசிய அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
மஹிந்த மைத்திரியின் `துரோகச் செயலை`மறந்து தனது பழைய
சகாவை மனதார மன்னித்து மீண்டும் அரசியல் புனர்வாழ்வு கொடுப்பாரா ? அல்லது விட்டுப் போனது அப்படியே நீடிக்கட்டும் எனும் நிலைப்பாட்டை எடுப்பாரா ? என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.