இலங்கையில் பூர்வீக குடிகள் தமிழர்களே என்று நாடாளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, பகிரங்க விவாதம் நடத்த முன்வருமாறு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்
“இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழர்களா என்பது தொடர்பாக என்னுடன் பகிரங்க சவாலுக்கு வருமாறு, நான் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கிறேன்.
அவரிடமுள்ள அனைத்து தரவுகளையும் தோற்கடிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
இனவாதத்தை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளார்கள். அவருக்கு 21 ஆயிரத்து 554 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தனது அரசியலுக்காக அவர் இன்று இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்.
எனினும், இனவாத அரசியலை கைவிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 36 ஆயிரத்து 365 வாக்குகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 32 ஆயிரத்து 146 வாக்குகளும் வடக்கிலிருந்து கிடைத்துள்ளது.
இதிலிருந்தே வடக்கு மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை எனும் சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இனவாதிகளுடன் இணைந்து பயணிக்க தயாராக இல்லை. மாறாக தெற்குடன் இணைந்து ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறார்கள்.
இந்த காரணத்தினால்தான் விக்னேஸ்வரன் போன்றோர் மீண்டும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகிறார்கள்” என கூறினார்