-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.27:
மலேசிய இந்திய சமுதாயத்தில் இன்றைய காலக்கட்டத்தில் நகர்ப்புற ஏழை மக்களாக இலட்சக் கணக்கானோர் அல்லல்படுவதற்கு முகாந்திரமான காரணம், தோட்டப் பாட்டாளிகளை அன்றைய காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக கைவிட்டதுதான்.
மலாயாக் கூட்டமைப்பு என்ற பெயரில் அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னம் இந்த மலைத்திருநாடு விடுதலைப் பெற்றது. இன்று நாம் வாழும் சுதந்திர வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட அந்த வரலாற்று நிகழ்ச்சியை ‘வளமான மலேசியா’ என்னும் பெயரில் அறுபதாவது முறையாக இன்னும் ஒரு சில நாட்களில், இம்மாத நிறைவில் கொண்டாட இருக்கிறோம்.
அவ்வண்ணம், 1957-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் திங்கள் 31-ஆம் நாளில் நாம் சுதந்திரம் பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன், 27-08-1957இல் மலாயா அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது.
அதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சிதான் என்றாலும் இந்தியத் தோட்டத் தொழி-லாளர்கள் கைவிடப்பட்ட நாளும் ஏறக்குறைய அந்த நாள்தான். இந்த மண்ணிற்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு ஈராயிர ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என்றாலும் அதில் இடையில் ஏற்பட்டுவிட்ட நெடிய தொய்-விற்குப் பின், அந்த உறவைப் புதுப்பித்துத் தந்ததில் நாம் ஆங்கிலேயர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
அதேவேளை, அப்படிப்பட்ட நல்ல எண்ணமெல்லாம் அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இருந்ததில்லை. இயற்கை வள நாடாகவும் வேளாண் தொழில் நாடாகவும் இருந்த அன்றைய மலாயாவில், ரப்பர் மரத் தோட்டங்-களிலும் செம்பனைத் தோட்டங்களிலும் குறைந்த ஊதியத்தில் நிறைந்த உழைப்பைச் சுரண்டும் நோக்கத்தில்தான் தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கப்பல் கப்பலாக பல வகையாலும் இங்கு அழைத்து வந்தது அன்றைய ஆங்கிலேய நிருவாகம்.
விடியற்காலையில் தோட்டத்திற்கு அழைத்து, வியர்வை சிந்தச்சிந்த.. .. இரத்தம் சொட்டச்சொட்ட வேலை வாங்கினான்; மாலை வேளையிலோ கள்ளுக்கடைப் பக்கம் திருப்பிவிட்டு, தமிழப் பாட்டாளிகளை சிந்திக்க விடாமல் பார்த்துக் கொண்டான். தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள கல்விச் சாலைகளை அரையும் குறையுமாக அமைத்துத்தந்து தன் பொல்லாத் தனத்திற்கு திரைபோட்டுக் கொண்டான்.
அப்படிப்பட்டவன் இந்த மண்ணைவிட்டு வெளியேறும் காலம் நெருங்கிய போது, இந்த மண்ணுக்கேற்ற அரசியல் சாசனம் வரையப்பட்டது. அப்போது, காலங்காலமாக தோட்டங்களிலேயே உழன்று தம் வாழ்வைத் தொலைத்த இந்தத் தமிழர்கள், மலாயா விடுதலைக்குப் பின் மற்ற இனங்களுடன் சக வாழ்வும் பொருளாதார அளவில் சுகவாழ்வும் வாழ வேண்டுமே என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், அப்படியே கைகழுவிவிட்டுச் சென்றான்.
காட்டையும் மேட்டையும் திருத்தி நல்கழனியாக சமைத்த தமிழனுக்கு அரசியல் சாசன அடிப்படையில் எந்த உறுதியும் வாய்ப்பும் ஏற்படுத்தப் படாமல் தோட்டப் பாட்டாளிகளை கைவிட்டுச் சென்றதில் ஆங்கிலேய-னுக்கு கொஞ்சமும் மனம் உறுத்தவில்லை. அவர்களின் உழைப்பைச் சுரண்டவும் பெரும்பொருளீட்டவும் முனைந்த ஆங்கிலேயன், தோட்டப் பாட்டாளிகளின் உரிமைக்காக குரல் கொடுத்த ‘மலாயா’ கணபதி, வீரசேனன் போன்ற மறவர்களை ஒழித்துக் கட்டுவதில் மட்டும் முனைப்பு காட்டினான்; அதற்கேற்ப காட்டிக் கொடுப்போரை துணைக் கொண்டான்.
எல்லாப் பிரச்னைகளுக்கும் மலாயா அரசியல் சாசனத்தால் தீர்வு காணப்பட்ட நிலையில், தோட்டப் பாட்டாளித் தமிழர்களின் எதிர்காலம் குறித்து மட்டும் ஒரு தரப்பும் அக்கறைப்படவில்லை.
நாடு விடுதலைப் பெறுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப் பட்ட மஇகா-விற்கு அந்த சமயத்தில் வயது பத்து. அண்மையில் எழுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடி முடித்துவிட்டு, அடுத்து பவள விழாவையும் 15-ஆவது பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டிருக்கும் இந்த தாய்க்கட்சி-யைப் பற்றி நாளைய சமுதாயம் வரையறுக்கும். .
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் தோட்டப் பாட்டாளிகள் பட்ட பாட்டிற்கு பலன் இல்லாமலேயே, இன்று மூன்றாவது, நான்காவது தலைமுறையினர் உருவாகிவிட்டனர். மலேசியவாழ் தோட்டப் பாட்டாளிப் பரம்பரையினரைப் பொறுத்தமட்டில், 27-08-1957இல் மலேசியக் கூட்டரசு அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது, ஒரு வரலாற்றுச் சம்பவம்: அவ்வளவுதான்.
கொண்டவனும் கைவிட்டான்; கண்டவனும் மறந்துவிட்டான். நாளைய உலகின் கணக்கு என்னவென்று காலம் உணர்த்தும்.