நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு உத்தியோகபூர்வமற்ற பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டதாகவும், அதுகுறித்து அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
“மீண்டும் இந்த நாட்டில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நாடாளுமன்றில் கருத்துக்கள் வெளியிட்டால் அல்லது தமிழ் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினால் சுயநிர்ணயத்திற்காக தமிழ் இளைஞர்களை மீண்டும் தூண்டும் வகையில் பேசினால் உண்மையிலேயே அதனை நிராகரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே தமிழ்ப் பிரதிநிதி ஒருவர், தமிழ் மொழிதான் சுதேசவாசிகளின் மொழி என்று கூறியிருந்தார்.
அதனை நிர்ணயிப்பது இதுபோன்ற சபையல்ல. எனினும் எமது நாட்டைப் பற்றிய 2500 ஆண்டுகள் ஆவண வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இங்குள்ள அனைத்து சம்பிரதாயங்களையும் சிங்களவர்களே இயற்றி வைத்தார்கள். இது நாடு முழுவதிலும் உள்ள தொல்பொருள் அடையாளங்களினால் உறுதிபடுகிறது. இந்த வரலாற்றை தெரிந்து கொண்டே வல்லிபுரம் சிதைவுகளைத் தெரிந்துகொண்டே பிழையானவற்றைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
சுயநிர்ணயத்தைக் கோரி அவர் கருத்து முன்வைத்திருப்பதானது தாயுடன் சிறிய குழந்தை சந்தைக்குச் சென்று இனிப்பைக் கோருவதற்கு சமமாகும். 50 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் ஏனைய இனத்தவர்களுடன் வாழ்கின்றனர். ஆனால் மிகவும் பொறுப்புவாய்ந்த மதிப்பிற்குரிய அந்த உறுப்பினர், சிங்களவர்கள் வடக்கில் வாழமுடியாது என்று கூறியிருக்கின்றார்.
அவர் ரோயல் கல்லூரியில் பயின்றவர். சிங்களவர்களுடன் சட்டக்கல்லூரியில் பயின்றவர். 65 வருடகாலமாக சிங்கள சமூகத்துடன் வாழ்ந்தவர். இவர் தொடர்ச்சியாக சிங்கள மொழி, சிங்கள மக்கள் மீது அவதூறு செய்து வருகின்றார். பௌத்த மதத்திற்கு எதிராகவும், வடக்கில் புத்தர் சிலைகளை அகற்றும்படியும் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியுள்ளார்.
அவர் வேறுயாருமல்ல, விக்னேஸ்வரன் தான். அவர் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்கின்றார். முள்ளிவாய்க்கால் என்பது ஈழத்திற்கான போர் நிறைவுற்ற இடம். அங்கு பல ஆயுதமேந்தியவர்கள் கொல்லப்பட்டனர். அங்கு சென்று உத்தியோகபூர்வமற்ற பதவிப்பிரமாணம் செய்பவராயின் பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதல்கள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய வேண்டும். அவர் பேசிய கருத்துக்களும் ஹான்சாட்டிலிருந்து நீக்கப்படல் வேண்டும்.
இலங்கைப் படையினர் இனப்படுகொலை செய்தார்கள் என்றும், போர்குற்றம் செய்தார்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணத்தில் வாக்குகள் கிடைக்காமைக்கான காரணமும் இனப்படுகொலை செய்தமையே என்றும் கூறியுள்ளார்.
கடந்த கால ஜனாதிபதி தேர்தலில், இனப்படுகொலை செய்தார்கள் எனக்கூறும் படைக்குத் தலைமைதாங்கிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிக மக்கள் வடக்கில் வாக்களித்தார்கள். ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தர்க்கத்தை நிராகரிக்கிறோம். போர்க்குற்றம் பற்றிய விசேட நிபுணர்களாகிய சேர்.டெஸ்மன் டி சில்வா, ஜெப்ரி நைஸ், பேராசிரியர் மைக்கல் கிரேன், பேராசிரியர் மைக்கல் நியூட்டன், ரொட்னி டிக்ஸன், கியூஸி, மேஜர் ஜெனரல்.ஜோன் ஹோம்ஸ் உள்ளிட்டவர்களும் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உயர்குலத்தினர் தாழ் குலத்தினருக்கு இரத்ததானம்கூட செய்யமாட்டார்கள். இப்படியிருக்க, சிங்களப் படையினர் அங்கு பலருக்கும் இரத்ததானம் செய்திருக்கின்றனர். ஆகவே இவர்களுக்கு தமிழ் மக்கள் பற்றி கருத்து கூற உரிமை கிடையாது. சிங்களப் படையினருக்கும் எமக்குமே அதற்கான உரிமை இருக்கிறது. காணாமல்போனோர் அலுவலகத்திற்கும் இம்முறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயை தற்கொலைதாரி ஒருவரே கொலை செய்தார். அவரது ஆள் அடையாளம் இதுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் அவருக்கான நட்டஈட்டைக் கோரினால் எப்படி வழங்குவது? சாலிய பீரிஸ் என்பவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர போர்க் குற்றம் பற்றி கூறிய போது அதனை வரவேற்றவர்.
நிமல்கா பெர்ணான்டோவும் அதற்கு சாதகமாக ஜெனீவாவில் கருத்துரைத்தவர். இப்படிப்பட்டவர்கள் அங்கம் வகிக்கின்ற காணாமல் போனார் அலுவலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் நாங்கள் ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.