வணக்கம் உறவுகளே
தேசத்தின் வாசத்தை சுவாசித்து வாழும் உங்களுக்கு , புலிகளின்குரல் நிறுவனத்தின் புரட்சிகர வணக்கங்கள்.
தாயகத்தில் 2009ம் ஆண்டுவரை பண்பலையில் ஒலித்து வந்த புலிகளின்குரல் வானொலி, எமது ஆயுத மௌனிப்புக்கு பின்னர், 2009ம் ஆண்டு யூலை – 05, கரும்புலிகள் நாள் முதல் இணையத்தில் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.
இந்த 11 ஆண்டுகளாக எமது இணையத்தளத்தில் ஒலித்து வந்த புலிகளின்குரல் வானொலியை, தற்போது ஆட்சியில் உள்ள சிறிலங்கா அரசானது தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நிறுத்துவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்கா அரசின் இச் செயற்பாட்டிற்கு இந்த உலகமும் ஒத்துழைக்கின்றது. எமது இணையத்தளத்திற்கு சேர்வர் வழங்கும் நிறுவனம், மற்றும் Google play store , Apple Store நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசானது ஒரு உத்தியோகபூர்வ கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது.
அதில் எமது வானொலிக்கான சேவையை நிறுத்துமாறும், இது விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியெனவும்,இவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டு, அக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்கள்.
எமது வானொலிக்கு இணையத்தள சேர்வரினை வழங்கிய நிறுவனத்தினர், தங்களோடு இணைந்து எமது வானொலியை தொடர்ந்தும் செயற்படுத்த முடியாது என கூறியதற்கு அமைய, எமது இணையத்தளம் வேறு சேர்வர் நிறுவனத்தோடு இணைந்து தற்போது மீண்டும் இயங்குகின்றது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
ஆனால் Google play store மற்றும் Apple Store நிறுவனங்கள் சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, எமது வானொலிக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு, சேவையில் இருந்த செல்லிடப்பேசிகளின் மென் பொருட்கள் (Apps) மற்றும் முகப்புத்தகம் போன்றவற்றை, பாவனையில் இருந்து நிறுத்தியுள்ளது என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
எனவே, வெகு விரைவில் எதோ ஒரு வழியில், எமது வானொலிக்குரிய மென்பொருட்கள் இணைக்கப்படும் என்பதனை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
எத்தனையோ தடைகளை சந்தித்த எமது வானொலி, இத் தடையையும் கடந்து, தொடர்ந்து தேசத்தின் வாசம் சுமந்து தேசியத்தலைவரின் எண்ணக்குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
புலிகளின்குரல் நிறுவனம்
26.08.2020
www.pulikalinkural.com