யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிருபம் கடந்த மே மாத முற்பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்காக மே 15 ஆம் திகதி பதிவாளரினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து – சுற்றுநிருபத்துக்கு அமைய இடம்பெற்ற மதிப்பீடுகளின் படி, கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற விசேட பேரவை அமர்வில் வைத்து திறமை அடிப்படையில் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, பேராசிரியர் கு. மிகுந்தன், பேராசிரியர் த. வேல்நம்பி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு, அவர்களின் விபரங்கள் ஜனாதிபதியின் தெரிவுக்காக அனுப்பப்பட்டிருந்தன.
பல்கலைக் கழகப் பேரவையின் பரிந்துரையின் அடிப்படையில், மூவரினது பெயர்களையும் கடந்த 13 ஆம் திகதி பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்தது.
பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமித்திருக்கிறார்