“இலங்கை தேசமானது, வலுவான ஜனநாயகக் கட்டமைப்பு கொண்ட நாடாக இருந்தால் எவ்வாறு அங்கு மக்களில் பெருமளவானோர் காணாமல்போக முடியும் என்ற கேள்வியை நாம் எழுப்புவது அவசியமாகும்.
அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையை சட்டவிவகாரமாக நோக்காது, அரசியல் பிரச்சினையொன்றாக அணுகுவது அவசியமாகும்.”
இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில்,
“சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் மாபெரும் அமைதிவழி கவனயீர்ப்புப் பேரணியொன்று நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
முற்பகல் 11 மணியளவில் வடக்கில் யாழ். பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள காணாமல்போனோரின் உறவுகளின் பேரணி யாழ். கச்சேரியில் முடிவடைய இருப்பதுடன் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் ஆரம்பமாகும் பேரணி காந்தி பூங்காவில் முடிவடைய இருக்கின்றது.
2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த போரின்போது படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்திஅவர்களது உறவினர்கள் சுமார் 10 வருடகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இப்பிரச்சினைக்கு இதுவரையில் இறுதித் தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அமைதிப் பேரணியைத் தொடர்ந்து,
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளது.
அந்த மகஜரின் ஊடாக காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்யும் வகையிலான செயற்பாடுகளே சர்வதேச சமூகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் அதேவேளை,
இனியேனும் தமது போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதுடன் இவ்விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தவிருப்பதாக
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தலைவி கனகரஞ்சனி யோகதாசன் தெரிவித்தார்.
“போர்க்குற்றங்களே நடைபெறவில்லை என்றும், எவரும் காணாமல்போகவில்லை என்றும் கூறுகின்ற அரசு எமக்கான தீர்வை வழங்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?இப்போதும் எமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற ஐயுறவுடனேயே நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம்.இந்தநிலையில் தற்போது எமக்கிருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை சர்வதேசம் மாத்திரமே” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க காணாமல்போனோர் என்று எவருமில்லை என்றும், அவர்களில் சிலர் இறந்திருக்கலாம் என்றும், சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் அரசு தெரிவித்திருக்கின்றது. இவ்விடயத்தில் அரசின் இறுதி நிலைப்பாடு இதுவா என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரணவிடம் வினவியபோது, அவர் ‘ஆம்’ என்று பதிலளித்தார்.
“தமது உறவுகள் காணாமல்போயிருப்பதாகப் போராடுபவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும் காணாமல்போனவர்களுக்கான மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறெனின் காணாமல்போனோர் பற்றிய அலுவலம் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அரசு அனுமதிக்குமா என்று அவரிடம் வினவியபோது,
“அது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை” என்றார்.
நாடொன்றின் வலுவான ஜனநாயகக் கட்டமைப்பு முறையொன்றில் எவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் என்ற கேள்வியை நாம் எழுப்புவது அவசியமாகும்.
அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையை சட்டவிவகாரமாக நோக்காது, அரசியல் பிரச்சினையொன்றாக அணுகுவது அவசியமாகும் என்று இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளரான சுலனி கொடிக்கார கூறியிருக்கின்றார்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.