அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்!
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப்பெற்ற ராஜபக்ச அரசில் அங்கம்வகிப்பவர்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர்.
2009ம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசியல் செயற்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்குத் தேடிக்கொடுக்காமலேயே பத்து வருடங்களை இணக்க அரசில் செய்து வீணடித்த தமிழ் அரசியல்வாதிகள் இனியும் பாராளுமன்றத்தில் ஒரு துரும்பையும் நகர்த்தப்போவதில்லை. பாராளுமன்றில் பல பேரம்பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்குக் கூட எந்தத் தீர்வையும் பெற்றுக்கொடுக்காத தமிழ்த் தலைமைகள் இனியாவது நேர்மையாக செயற்பட வேண்டும் என்பதே எமது பேரவா.
ஈழத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு வருடங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திவரும் நிலையில் 72ற்கும் மேற்பட்ட உறவினர்கள் எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் மருணித்துப்போயினர். தமிழ் உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கியவர்கள் இன்று அசுரபலத்துடன் அரச அரியணை ஏறியிருக்கும் நிலையில் எதிர்வரும் ஐந்து வருட காலங்களில் நீதி வேண்டி வீதியோரங்களில் உணவின்றி கண்ணீருடன் நிற்கதியாக நிற்கும் உறவுகளிற்கு எந்தத் தீர்வும் கிடைக்கும் என்பதை இன்று முன்னெடுக்கப்படும் இனவாத நிகழ்வுகளை வைத்தே கணிப்பிட முடியும். சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி ஈழத்தமிழர்களின் இனவழிப்பிற்கு நீதி பெறுவது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றதாகும். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட புதிய தேசியவாதிகளின் செயற்பாடுகள் சொந்தங்களைத் தேடி அலைந்து திரியும் உறவுகளுக்கு தீர்வைத் தேடித்தருவார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சிறிலங்கா இனவழிப்பு இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய ஒட்டுக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து கலந்துகொள்ள வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்று தனது பாராளுமன்ற உரையில் இறுமாப்புடன் பேசிய இனவழிப்பாளன் கோத்தபாயவையும் அவரது சகாக்களையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் வரை உலகத்தமிழர் ஓயாது உழைக்கவேண்டும். நடைபெற்ற இனவழிப்புக்கு ஒரு பரிகார நீதி கிடைக்காமல் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பது என்பது எட்டாக்கனியே. பௌத்த துறவிகளின் துணையுடன் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக இராணுவ பலத்துடன் தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பேரினவாத அரசு தமிழர்களின் அரசியல்த் தீர்வில் எந்தளவு கரிசனை செலுத்தும் என்பது துல்லியமாகத் தெரிகின்றது.
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகச் சிதைத்து, ஆயதப்போராட்டத்தை சர்வதேச நாடுகளின் உதவியுடன் நசுக்கிய பின்னர் இப்போது தமிழர்களைச் சித்தாந்த ரீதியாகச் சிதைக்கும் சதிவேலையைத் திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றனர். இவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டுமாயின் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஓர் அணியில் திரளவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவிருக்கும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் வடக்கு-கிழக்கு தமிழ்மக்கள், அரசியற்கட்சிகள், சமய குரமார்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் சிவில் அமைப்புகள் அனைவரும் எந்தவிதமான வேறுபாடுகளும் இன்றி பெருந்திரளாக அணிதிரளுமாறு கேட்டுக் கொள்வதுடன் உலகத் தமிழர்கள் சார்பில் எமது தார்மீக ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
Email: media.icet@gmail.com
Website: www.iceelamtamils.com