இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு துரிதமாக கொண்டு செல்ல வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச காணாமல்போனோர் தினமான இன்று, கிளிநொச்சியில் மாபெரும் பேரணி நடைபெற்ற நிலையில் ஐ.நா.சபையின் ஆணையாளர் மைக்கேல் பேச்லெட் ஜெரியாக்கு மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டெம்ரில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் ஆணையாளர் பரிந்துரைக்க வேண்டுமெனக்கோரி நான்கு விடயங்கள் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இன்று ஓகஸ்ட் 30 சர்வதேச காணாமல் போனோர் தினம். இலங்கையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்!
சிறீலங்கா அரசானது யுத்தத்தின் போதும் யுத்தத்தின் முடிவிலும் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் மற்றும் இனவழிப்புக் குற்றங்களிலும் ஈடுபட்டமைக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணையை தமிழ் மக்கள் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு ஓகஸ்டில் சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி என்னும் பெயரில் ரணில்-மைத்திரி அரசாங்கம் அமையப்பெற்ற நிலையில் தமிழர்களது கோரிக்கைகள் புறக்கணிப்பட்டு அதே ஆண்டு செப்ரெம்பரில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில் சிறீலங்கா அரசு மீதான மேற்படி குற்றச் சாட்டுக்களை விசாரிக்க உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
அத்தகைய உள்ளக விசாரணை தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியைத் தராது என்பது நன்கு தெரிந்தும் அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வடக்கு கிழக்கில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக இருந்தார்கள். அது மட்டுமன்றி மேற்படி உள்ளக விசாரணைப் பொறிமுறையை தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக கலப்புப்பொறிமுறை உருவாக்கப்படவுள்ளதாகவும் தமிழ் மக்களின் பிரிதிநிதிகளால் ஊடகங்கள் ஊடாகப் பொய்யான பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு எமது மக்கள் நம்பிக்கை மோசடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்படி தீர்மானம் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஒருவரேனும் கண்டுபிடிக்கப்படவோ, அல்லது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களோ வெளிப்படுத்தப்படவில்லை. மாறாக பொறுப்புக்கூறல் எதுவும் நடைபெறாமலேயே 2017 மார்ச்சிலும் மற்றும் 2019 மார்சிலும் கால நீடிப்பு அல்லது சர்வதேச கண்காணிப்பு நீடிப்பு செய்யப்பட்டது.
சர்வதேச சமூகத்தை ஏமாற்றிக் கால நீடிப்பை பெற வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பாதிக்கப்பட்ட மக்களின் ஒப்புதல் இன்றி காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. ஏழ்மை நிலையிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை அச்சுறுத்தியும், அழுத்தங்களை ஏற்படுத்தியும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகங்கள் வழங்கும் மரணச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகளே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
கால நீடிப்புத் கோரும் சந்தர்ப்பங்களில் மேற்படி காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் உருவாக்கத்தையும் பொறுப்புக் கூறலுடன் தொடர்பற்ற வேறு சில விடயங்களையும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் என அறிக்கையிட்டதன் மூலம் தொடர்ச்சியான கால நீடிப்புக்களை அரசின் முகவர்களாக செயற்படும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் அரசு பெற்றுக்கொண்டது. இதன்மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன் நீதியும் மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோருவதோ தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி கோருவதோ மனித குலத்துக்கெதிரான போர்க் குற்றங்களுக்கு நீதி கோருவதோ சிறிலங்கா அரசின் பங்களிப்போடு ஒருபோதும் நடைபெறப்போவதில்லை. அத்துடன் சிறிலங்கா அரசு அத்தகைய முயற்சிகளை தோற்கடிக்கக் கூடிய முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கடந்த 2019 நவம்பர் 16 ஆம் திகதி சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அகுனுசரணையாளர் நிலையிலிருந்து சிறீலங்கா அரசு வெளியேறியுள்ளது.
ஆரம்பத்திலிருந்து மனித உரிமைப் பேரவையினூடாக பொறுப்புக்கூறல் விவகாரத்தில் நீதி கிடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டி வந்திருந்தபோதும் இத்தீர்மானங்களை நிறைவேற்றும் சர்வதேச நாடுகள் பாதிக்கப்பட்ட தரப்பாகிய எமது கருத்தை பொருட்படுத்தாமல் தங்களது தமிழ் அரசியல் முகவர்களைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய விடயத்தை முடக்கி வைத்திருந்தார்கள்.
தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை ஒரு பிரயோசனமுமற்ற வகையில் மனித உரிமைப் பேரவையில் முடக்கி வைத்திருப்பது பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாக மட்டுமே சாத்தியமாகும்.
எனவே தங்களது தலைமையில் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ நடத்துவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமேனவும் எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் கூட்டத்தொடருக்கு முன்மொழிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
1.சமர்ப்பிக்கும் அறிக்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் சாத்தியப்படுத்த அவசியமான அரசியல் விருப்பு இலங்கை அரசிடம் இல்லை என்பதால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் 2019 கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தினை நீக்க வேண்டும் என்ற முன்மொழிவை தாங்கள் முன்மொழிய வேண்டும்.
2.இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தக்குற்றங்கள்,மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய தாங்கள் வலியுறுத்த வேண்டுமெனக் கோருகின்றோம்.
3.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஐ.நா குழு இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.
4.இலங்கைக்கான விசேட ஐ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும்,வடக்கு-கிழக்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேன்படுத்தவும்,உறுதுணையாகவும் இருக்க இருக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு- கிழக்கில் நிறுவ வேண்டும் எனவும் மீளவும் வலியுறுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.