சிவா பரமேஸ்வரன் – மூத்த செய்தியாளர்
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மீதான சர்ச்சை இன்னும் ஓயவில்லை.
“இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன். அந்த மூத்த குடிக்கு இலங்கையில் இறையாண்மை உள்ளது” என்று, தான் ஆங்கிலத்தில் எழுதி வந்ததை அவர் நாடாளுமன்றத்தில் படித்தார்.
முதல் நாள் அமர்வு என்பதால் அவரது உரைக்கு உடனடியாக எதிர்ப்பு கிளம்பாமல் ஒருவிதமான மௌனம் நிலவியது.
அடுத்த நாள் அவரது உரை தேசியப் பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து சர்ச்சை எழுந்தது. எனினும் இந்த விடயத்தில் பிரச்சினையை எழுப்பியது ஆளும் தரப்பினர் அல்ல.
மறுநாள் நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான மனுஷ நாணயக்கார விக்னேஸ்வரனை தாக்கும் நடவடிக்கைக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டார்.
பிரிவினையைக் கோரமாட்டேன் என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு அதனை மீறும் வகையில் விக்னேஸ்வரனின் உரை இருப்பதால் அதை அவைக் குறிப்பிலிருந்து (ஹன்சார்ட்) நீக்க வேண்டும் என்று அவர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று சபாநாயகரால் அப்போது பதிலளிக்கப்பட்டது.
விக்னேஸ்வரனின் இந்த உரை முழுமையாக ஆங்கிலத்தில் இருந்ததால் பல உறுப்பினர்களுக்கு அது அவ்வேளைப் புரியாமல் இருந்திருக்கலாம்.
பேசுவதை விட எழுதி வைத்து வாசிக்கும் போது உடனடி மொழிபெயர்ப்பு உறுப்பினர்களுக்கு உரிய வகையில் உறுப்பினர்களுக்குச் சென்றடைவதில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. மேலும் முதல் நாள் அமர்வு என்பதால் சபையின் கௌரவம் கருதி யாரும் இதைப் பெரிதுபடுத்தாமல் இருந்திருக்கலாம்.
இந்த உரை வெளியாகி 24 மணி நேரத்துக்குள் சிங்கள ஊடகங்கள் இந்த விடயத்தை ஊதிப் பெரிதாக்கும் தங்களது இனவாத `திருப்பணியை` ஆரம்பித்தன.
கடும்போக்கு சிங்கள பௌத்தர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்றோர் விக்னேஸ்வரனுக்கு சவால்விட்டு தமது கருத்துக்களையும் கண்டனங்களையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தத் தொடங்கினர். இதில் ஆளும் தரப்பு-எதிர்த் தரப்பு பேதமின்றி சிங்கள பேரினவாதக் குரல் ஒலித்தது.
சஜித் அணி மூட்டிய இனவாத தீ :
அடுத்த நாள் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது தமிழர்கள் பூர்வீகக் குடிகள் எனும் விடயத்துக்கு இனவாத சாயம் பூசி சொல்லடித் தாக்குதலைத் தொடங்கிவைத்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான மனுஷ நாணயக்கார.
எனினும் முதல் வார அமர்வில் விக்னேஸ்வரனின் உரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்று மனுஷ நாணயக்கார விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அது ஹன்சார்ட்டிலும் பதிவானது.
ஒரு வாரம் கழித்து நாடாளுமன்றம் கூடிய போது இந்தப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
சஜித் தரப்பின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டாரவும் இதில் இணைந்து கொண்டார். விக்னேஸ்வரனின் உரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் விடாப்பிடியாக இருந்தனர். இதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி வரிசைகளிலிருந்து ஒரு சாரார் ஆதரவுக் குரல் எழுப்பினர்.
விக்னேஸ்வரனின் உரை குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று தனது சுய அரசியல் இலாபத்துக்காக அரசைப் பொறியில் சிக்க வைக்கும் நோக்கில் ஒரு வினாவை எழுப்பினார் மனுஷ நாணயக்கார.
விக்னேஸ்வரனின் உரை தேசத் துரோகம் என்று கூறி அவரை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தையும் அவர் முன்வைத்தார்.
எனினும் இந்த விடயத்தில் மனுஷ நாணயக்காரவுக்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, உங்களுக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. உங்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் அதைத் தெரிவிக்கலாம். இதில் அரச நிலைப்பாடு எதிர்க்கட்சி நிலைப்பாடு என்று ஏதும் இல்லை, இவை தனிப்பட்ட உறுப்பினர்களின் கருத்து“ என்று பதிலளித்து விக்னேஸ்வரனின் உரையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது” என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இந்த வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விக்னேஸ்வரன் தனித்து விடப்பட்ட நிலையில் மௌனமாக இருந்தார்.
பேரினவாதிகளின் குரல் :
விக்னேஸ்வரனின் உரைக்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன ரீதியான தாக்குதல் தொடருகின்றன. இதில் சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் கட்சி பேதமின்றி கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கருத்தை ஆதாரபூர்வமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக அக்கருத்துக்கு இனச் சாயம் பூசி சொல்லப்பட்ட கருத்து சரியா தவறா என்பதை ஆராய்வதை விட்டு அதை திசை திருப்பும் செயலில் பேரனவாத மனப்பான்மை கொண்ட சில உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனின் உரையை அவமதித்துப் பேசிய அமைச்சர் சரத் வீரசேகர, “விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைக் கேட்பது சூப்பர் மார்க்கெட்டில் லொலி பாப் கேட்பது போல் உள்ளது” என்று கிண்டல் செய்தார்.
கடந்த 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை அவர் மீது போர் குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையிலும் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்ற காரணத்தால் பெரும்பாலான தமிழர்கள் ஆதரித்திருந்தனர்.
ஆனால் அவர் நன்றி விசுவாசத்தை மறந்து விக்னேஸ்வரன் கூறிய கருத்தைக் கடுமையாக சாடினார்.
“தேசியம் சுயநிர்ணயம் பேசி இளைஞர்களை தவறாக வழி நடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரன் ஆகியோருக்கு நடந்தது என்ன என்பதை விக்னேஸ்வரன் நினைத்துப் பார்க்க வேண்டும். இதே தவறை அவர் தொடர்ந்து செய்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று இராணுவ பாணியில் எச்சரிக்கை விடுத்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் அமோக ஆதரவு காரணமாக அவர் ஜனாதிபதியாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் தமிழர்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை இந்நேரத்தில் தமிழ் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளனர். அவரை அப்போது முழு மூச்சாக ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது மௌனம் காப்பது ஏன்?
விக்னேஸ்வரின் தெரிவித்த கருத்துக்கான எதிர்ப்பு நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் தொடர்ந்தன. அவரை உரையை நிராகரித்த அமைச்சர் உதய கம்மன்பில விக்னேஸ்வரனை நேரடி விவாதத்துக்கு வருமாறு வம்புக்கு இழுத்தார்.
தமிழர் இனப்பிரச்சினை என்பதைக் கேட்டாலே வெறுப்பை உமிழும் மற்றொரு அமைச்சரான விமல் வீரவனச. “விக்னேஸ்வரன் தனது வாயை உடனடியாக அடக்க வேண்டும். இதனை மீறி சபையில் ஊளையிட்டால் ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்” என்று தனது வழக்கமான பாணியில் அநாகரீகமற்ற வார்த்தைகளை வீசியுள்ளார்.
இந்த விடயம் அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புகளுக்கும் ‘வெறும் வாயில் அவலை மெல்வது போல’ தமது வெறுப்புகளைக் காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியவாதிகள் மௌனம் :
தமிழர்கள் இலங்கையின் முதல் பூர்விகக் குடியென்று விக்னேஸ்வரன் சபையில் முன்வைத்த கருத்துக்கு எதிர்ப்பும் கண்டனக் குரல்களும் எழுந்த நிலையில், அவர் எதிர்கொண்ட சொல்லடிகளுக்கு மௌனமே அவரது பதிலாக இருந்தது. ஆனால் அவரைப் போன்று தமிழ்த் தேசியம் பேசி நாடாளுமன்றம் வந்த வேறு எவரும் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது கருத்தை நியாயப்படுத்தத் தவறிவிட்டனர். யாழ்ப்பாண உள்ளூர் அரசியல் நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டதாகவே தோன்றுகிறது. இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு கொடுத்ததை நினைவுபடுத்திய த.தே.கூ உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விக்னேஸ்வரன் உரைக்கு சஜித் தரப்பு இப்படி எதிர்ப்புத் தெரிவிப்பது வேதனையளிப்பதாக மேலோட்டமாக பட்டும் படாமலும் பேசினார்.
இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கும் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையே நடபெற்ற வாதத்தின் போது குறுக்கீடு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபாநாயகருக்கு பக்க பலமாகவும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்.
“நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் சகலருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. நாட்டின் சட்டத்திற்கு எதிரான வகையில் கருத்துத் தெரிவிக்கப்படுவதாக இருந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விடயத்தில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது” என்று அந்தத் தீர்ப்பை நியாயப்படுத்தினார் ஹக்கீம்.
‘தமிழ் மக்களின் காவலன்’ என்று தன்னைக் கூறிக் கொள்ளும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தில் மௌனம் சாதித்தது ஆச்சரியமளிக்கிறது.
எந்த விடயமானாலும் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தனது கருத்தைப் பதிவிடும் மனோ கணேசன் இந்த விடயத்தில் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் தாமதமாகத் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். “இது விக்னேஸ்வரனின் தனிப்பட்ட கருத்து. சபாநாயகர் பதிலளித்து விட்டார். எனவே இதனைத் தொடர்ந்தும் விவாதப் பொருளாக்கக் கூடாது. தமிழ் மொழி இலங்கையின் பூர்வீக மொழியா இல்லையா ? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்று. இதனை ஊதிப் பெரிதாக்கி இனவாதம் பேசி மக்களைக் குழப்ப வேண்டாம்”.
இதுவே தனது கூட்டணியின் சகாக்களுக்கும் ஆளும் தரப்புக்கும் அவர் அளித்த பதில்.
விக்கியும் விடுவதாக இல்லை :
தன்னை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்த அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் “தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள்” எனும் கருத்தை மீண்டும் நிலைநிறுத்தினார்.
“எனது உரை யாரையும் வசைபாடுவதாகவோ அல்லது புண்படுத்தும் வகையிலோ அமையவில்லை. எனது முடிவுகளில் தவறுகள் இருக்குமானால் மற்றவர்கள் சுட்டிக் காட்டலாம் மாறாகக் குழப்பமடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு அழைப்பதன் மூலம் ஒரு பொய் உண்மையாகவோ அல்லது ஒரு உண்மை பொய்யாகவோ ஆகிவிடாது. தேவையேற்பட்டால் எமது வரலாறு மற்றும் பாரம்பரியம் தொடர்பில் சிறந்த அறிவு கொண்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேச ரீதியிலான வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்ட ஆணைக் குழுவொன்றை அமைக்கலாம்” என்று விக்கினேஸ்வரன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
ஒரு கருத்தைப் பதில் கருத்து மூலம் எதிர்கொள்வதை விடுத்துத் தனிப்பட்ட முறையில் இனரீதியான தாக்குதலை முன்னெடுப்பது ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் செயலாகவே பார்க்கப்படும். வரலாற்று ரீதியாக ஒரு விடயத்தில் தெளிவின்மை இருந்தால் அதை தெளிவுபடுத்தி முற்றுப்புள்ளி வைக்கும் கடமை அரசு மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் உள்ளதை யாரும் மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தொடர்ந்து தாங்கள் இலங்கையர்கள் அனைவருக்குமானவர்கள் என்று கூறி வரும் நிலையில் இன முரண்பாடுகள் மேலும் விரிவடைவதைத் தடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடமை பட்டவர்கள்.
அந்த முன்னெடுப்பை அவர்கள் இருவரும் செய்தால் மட்டுமே இலங்கையில் நீடித்திருக்கக் கூடிய இணக்கப்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மானுடவியல் மற்றும் மரபுரீதியாக தமிழ் மற்றும் சிங்களவர்கள் ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.