சிவா பரமேஸ்வரன்-மூத்த செய்தியாளர்
இலங்கை நாடாளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் “இலங்கையின் முதல் பூர்வகுடிகள் தமிழர்கள்” என்று பேசியதற்கு எதிராக சரத் பொன்சேகா எச்சரிக்கும் தொனியில் அளித்த பதில் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
விக்னேஸ்வரனின் உரைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அவரையும் சிறுமைப்படுத்தும் வகையிலுள்ளது.
“தேசியம் சுயநிர்ணயம் பேசி இளைஞர்களைத் தவறாக வழி நடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரன் ஆகியோருக்கு நடந்தது என்ன என்பதை விக்னேஸ்வரன் நினைத்துப் பார்க்க வேண்டும். சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதே தவறை அவர் தொடர்ந்து செய்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று இராணுவ பாணியில் எச்சரிக்கை விடுத்தார் சரத் பொன்சேகா.
அவரது கடும்போக்கான இந்தக் கருத்து வள்ளுவரின்
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு” என்பதை நினைவுபடுத்துகிறது.
சரத் பொன்சேகா போன்றோர் தனக்கு உடல் ரீதீயான தீங்கை விளைவிப்பதற்கான அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக விக்னேஸ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
போர் காலத்தில் ஷெல்லடி மூலம் தமிழ் மக்களைச் சொல்லொணாத் துன்பத்துக்கு அவர் ஆளாக்கியிருந்தாலும் 2010 ஜனாதிபதி தேர்தலில் பிரதான தமிழ்க் கட்சியான தமிழத் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரித்ததிருந்தது
அக்கட்சி விடுத்த வேண்டுகோளின் படி வடக்கு-கிழக்குப் பகுதி தமிழர்கள் போர் காயங்களை மறந்து அவரை ஆதரித்தனர். அதன் விளைவாகவே அவர் படுதோல்வியிலிருந்து தன்னப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது.
அந்தத் தேர்தலுக்கு முன்னர் அவரை `யுத்த வெற்றி நாயகன்` என்று புகழ்ந்த சிங்கள மக்கள் தேர்தலில் அவருக்கு மரண அடி கொடுத்தனர். அப்போது அவரை அந்த அடியிலிருந்து கௌரவமாகக் காப்பாற்றியவர்கள் போரினால் அழிவையும் அவலங்களையும் சந்தித்த தமிழர்களே.
தமிழர்களின் ஆதரவைச் சிறிதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்காத சரத் பொன்சேகா இன்று தமிழ்ச் சமூகத்தையே அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளது தமிழர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது.
ஆனந்தசங்கரி சீற்றம்
தமிழ் மக்களை அச்சுறுத்திய சரத் பொன்சேகா மற்றும் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் இரண்டையுமே கடுமையாக சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரி.
“சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வாக்களித்த தமிழ் மக்களும் வெட்கித் தலை குனிய வேண்டும்” என்று ஆனந்தசங்கரி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகாவின் உரையைக் கூர்ந்து கவனிக்கும் போது அது அவரது ஒப்புதல் வாக்குமூலம் போலவே உள்ளது என்கிறார் ஆனந்தசங்கரி.
அதாவது விடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழித்தவர் சரத் பொன்சேகாவே என்பது அவரது உரையிலிருந்து வெளிப்படையாகத் தெரியும் உண்மையாகும். அப்படியிருக்கும் நிலையில் “ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்ட போது இது கூட்டமைப்புக்குத் தெரியாதா, அல்லது தெரிந்தும் அவருக்கு வாக்களிகச் சொன்னார்களா”? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆனந்தசங்கரி.
“இலங்கையில் தமிழர்கள் மூத்த பூர்வகுடிகள். நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் 5 வயது சிறுவனுக்கும் இந்த உண்மை தெரியும். விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் பேசித்தான் இதனை நிரூபிக்க வேண்டியதில்லை. இதை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளதால் புதிய வடிவில் பிரச்சினை கிளம்பியுள்ளது. தமிழ் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு. இதை நிரூபிக்கவா? தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினர்” என்று விக்னேஸ்வரனையும் குட்டியுள்ளார் ஆனந்தசங்கரி.
சரத் பொன்சேகாவும் சஜித் பிரேமதாஸவும் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளினால் தான் கௌரவமான தோல்வியைப் பெற்றதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா கூறியுள்ளார். “அவர்களுக்கு தமிழர்கள் அளித்த வாக்குகளும் பேராதரவும் செல்லாக் காசு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர்கள் எதிர்ப்பே தமது அரசியல் என்று செயல்படும் தென்னிலங்கை பௌத்த சிங்கள கடும்போக்கு வாதிகளான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதயன் கம்மன்பில் போன்றோர் எந்தத் தேர்தலிலும் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் தமிழர் எதிர்ப்பு கருத்தும் எச்சரிக்கும் பாணியிலான அச்சுறுத்தலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மௌனம் காக்கும் த.தே.கூ
இந்த விவகாரத்தில் அவரது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் மற்றும் அவரை அப்போது ஆதரித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் வாய் திறக்காமல் இருப்பது தமிழ் மக்களை அலட்சியம் செய்வதாகவே கருத வேண்டியுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு கூட்டமைப்பு தமது கண்டனத்தைத் தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
விக்னேஸ்வரன் கருத்தைக் கூட்டமைப்பு ஆதரிக்கிறதா இல்லையா? என்பதற்கு அப்பாற்பட்டு தொடர்ச்சியாக தமக்கு வாக்களித்த தமிழ் மக்களையும், சக தமிழ் உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தப்படுவதையும் கூட்டமைப்பு கண்டுகொள்ளாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனின் உரைக்கு எதிராகப் பிள்ளையார் சுழியைப் போட்டு இனவாதத் தீயைப் பற்ற வைத்தவர் மனுஷ நாணயக்கார.
விக்னேஸ்வரனின் உரை ஹன்சார்டில் இடம்பெறக் கூடாது என்று இவர் பிடிவாதம் பிடித்திருந்தாலும் சபாநாயகர் அதைப் புறந்தள்ளினார். நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற ஒரு விடயத்தை இப்போது பொது வெளியில் ஒரு விவாதப் பொருளாக்கி அதில் வலிந்து சிங்கள மக்களை உள்வாங்கும் நோக்குடன் செயல்படுகிறார் மனுஷ நாணயக்கார. “சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் விக்னேஸ்வரன் இப்படிக் கருத்துக்களை வெளியிட்டால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அவரின் கருத்தைச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவும் நியாயப்படுத்தி அதற்கு ஒத்து ஊதுபவராக இருக்கிறார்” என்று இருவர் மீதும் சீறிப் பாய்ந்துள்ளார் மனுஷ நாணயக்கார.
ஆனால் அவரது இது போன்ற கருத்துக்கள் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க. ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததை அவர் மறக்கவில்லை என்பதை அத்தநாயக்க நினைவு கூர்ந்தார்.
விக்கிக்கு சம்பந்தி வாசு ஆதரவு
விக்னேஸ்வரனுக்கு எதிராக மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் கண்டனத்தை தெரிவித்துவரும் அதேவேளை அவரது சம்பந்தியும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
இலங்கையின் மூத்த முன்னணி இடதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவரான வாசுதேவ நாணயக்கார ஒரு தொழிற்சங்கவாதி. ஒரு காலத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்த அவர் தற்போது மாறுபட்ட அரசியல் சூழலில் அதை வலியுறுத்த முடியாதவராக இருக்கிறார்.
அவர் ஆளும் கட்சி அமைச்சராக இருந்தாலும் தனது சம்பந்தியை விட்டுக் கொடுக்காமல் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். “விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறு கோர யாருக்கும் உரிமையில்லை. அவரது கருத்துடன் அனைவரும் இணங்க வேண்டும் என்பதும் அல்ல. எமக்கு இணக்கம் இல்லையென்பதற்காக ஒருவர் தனது கருத்தை வெளியிடாமல் இருக்க முடியாது. பொதுவாக அவரது கருத்துடன் அநேகமான உறுப்பினர்கள் இணங்கவில்லை அதிலும் நானும் ஒருவன். தமிழர்கள் இலங்கையின் முதல் பூர்வகுடிகள் என்பது அவரது தனிப்பட்ட கருத்து. அதைத் தெரிவிக்க அவருக்கு உரிமையுண்டு. இந்த அடிப்படையில் தான் சபாநாயகரின் தீர்மானமும் அமைந்துள்ளது” என்று வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
இந்தக் கருத்தை அவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே தான் கூறியுள்ளார். “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பது போலுள்ளது வாசுவின் ஆதரவு.
விக்னேஸ்வரனின் கருத்துக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற அரசியலுக்கு புதியவரான ஒரு சக தமிழ் உறுப்பினருக்கு கட்சி அரசியலுக்கு அப்பால் ஆதரவளிக்க வேண்டியது அனைத்து தமிழ் உறுப்பினர்களின் தார்மீகக் கடமையாகும். அந்தக் கடமையிலிருந்து தவறினால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.