மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிவந்த பாடசாலையின் அதிபரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் இன்று (புதன்கிழமை) காலை பாடசாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபர் எஸ்.கே.பிகிராடோவை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி பள்ளிமுனை கிராமம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி பாடசாலைக்கு சமூகமளித்து பெற்றோருடன் கலந்துரையாடினார்.
இதன்போது, மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜோட்சன் பிகிராடோ, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியார் பாடசாலைக்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடினர்.
இந்நிலையில், குறித்த பாடசாலை வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தி பாடசாலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்வதை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அதிபரை தொடர்ந்தும் இப்பாடசாலையில் கடமையாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிபரின் இடமாற்றம் உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டுமெனவும் மக்கள் வலியுறுத்தினர்.
இதன்போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிபரின் இடமாற்றத்தை தற்காலிகமாக இரத்துச் செய்வதாகவும் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி உறுதியளித்தார். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.