சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இலங்கை அரசியல் யாப்பில் ஜனநாயகத்தைக் காக்கும் ஒரு தேவையாகக் கருதப்பட்டு மைத்திரி-ரணில் `நல்லாட்சிக்` காலத்தில் முன்னெடுக்கப்பட்ட 19 ஆவது திருத்தம் மரண படுக்கையிலுள்ளது.
ஜனநாயகத்தை அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்றவே பல நாடுகளில் அரசியல் யாப்பில் சில பாதுகாப்புப் பொறிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நீண்ட காலத்துக்குப் பிறகு இலங்கையில் கொண்டுவரப்பட்டதே அரசியல் யாப்பின் 19ஆவது அரசியல் திருத்தம்.
2015ல் ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் ஜோடி 4-5 மாதங்கள் இழுபறிக்குப் பின்னரே இந்த 19ஆவது திருத்தத்தைத் கொண்டுவர முடிந்தது.
ஆனால் ராஜபக்ச தரப்பு இதை இலக்கு வைத்து ஆட்சிக்கு வந்து நான்கு வாரங்களில் 20ஆவது திருத்தத்தின் சட்ட மூலத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதில் 19ல் உள்வாங்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், நாடாளுமன்றம், ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் ஜனாதிபதி பதவி தொடர்பான வரம்பு ஆகியவை மட்டுமே தப்பியுள்ளன.
அந்தத் திருத்தத்தில் பல அம்சங்கள் தெளிவில்லாமலும் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்றாலும் அதில் பல நன்மைகள் இருந்ததை மறுக்க முடியாது.
இப்போது இலங்கை அரசு அந்தத் திருத்தத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் 20ஆவது திருத்தத்தின் சட்ட மூலத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நான்கு வாரங்களுக்குள் முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை. புதிய யாப்பு உருவாக்கப்படும் போது தேவையான திருத்தங்களை செய்ய முடியும். அதற்குள் இந்த அவசரம் ஏன்?
அமைச்சுப் பதவிகள் தாராளமாகக் கிடைக்கும் :
அமைச்சர்கள் வகை தொகையின்றி நியமிக்கப்பட்டதைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் 19ஆவது திருத்தத்தின் கீழ் அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது. இதன் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஏனைய அமைச்சர்களின் எண்ணிக்கை 40 என நிர்ணயிக்கப்பட்டது. 20ஆவது திருத்தத்தின் படி அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சபட்ச அளவு நீக்கப்படுகிறது.
இப்போது 20ல் அந்தக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது. இது அமைச்சுப் பதவிகளுக்கான கோட்டை வாசலைத் திறக்கும். அதன் மூலம் ஏராளமானோர் அமைச்சர்கள் ஆகலாமென்றால் அது எங்கு சென்று முடியும்?
ஒரு உறுப்பினரைக் கொண்ட பங்காளிக் கட்சி மற்றும் கட்சி மாறி வருபவர்களுக்கு சுலபமாக அமைச்சுப் பதவியை வழங்க 20ஆவது திருத்தம் வழி செய்துவிடும் எனும் அச்சங்கள் உள்ளன.
இந்நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதின் நோக்கம் ஏன் எனும் வினா பலராலும் முன்வைக்கப்படுகிறது.
உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவில் கூட மத்திய மற்றும் மாநில அரசுகளில் அமைச்சர்களின் எண்ணிக்கை என்பது அந்தந்த சபைகளிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% அளவுக்கே அதிகபட்சமாக இருக்க முடியும்.
அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கான ஆளனி, அலுவலக வசதிகள் மற்றும் வாகனங்கள் எனச் செலவினங்கள் அதிகரிக்கும்.
எனவே பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இலங்கை போன்ற நாடுகளினால் அதைச் சமாளிக்க முடியாது என்பதே யதார்த்தம்.
இலங்கை தொடர்ச்சியாக சுனாமி, உள்நாட்டுப் போர், பன்னாட்டுக் கடன்கள், கொரோனா தாக்குதல் ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை சமாளிக்க செலவினங்களைக் குறைக்க வேண்டியது அத்தியாவசியமானது.
கூடுதலாக அமைச்சுகள் மற்றும் அமைச்சர் பதவிகள் என்பது ஊழலுக்கு வழி வகுத்து, நிர்வாக சீர்கேட்டை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும்.
ஏற்கனவே இலங்கையில் வெங்காயம், மிளகாய், வெற்றிலை, பித்தளை, பத்திக் துணிகள் என்று தனித்தனி அமைச்சர்கள் இருப்பது போல் எதிர்காலத்தில் பேனாவுக்கும் ஒரு அமைச்சர், பென்சிலுக்கும் ஒரு அமைச்சர் என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வயது குறைப்பு :
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் குறைந்தபட்ச வயது 19ஆவது திருத்தத்தில் 35ஆக இருந்தது. அது இப்போது 30ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உதாரணமாக நாட்டில் இராணுவ ஜெனரலாக உச்சப் பதவி அடைவதற்கு ஒருவருக்குச் சராசரியாக 55 வயதும் 30 ஆண்டுகள் அனுபவமும் இருக்கும். அதே போன்று நாட்டின் தலைமை நீதிபதியாக ஒருவர் வரவேண்டுமென்றால் அவர் பல படிநிலைகளைக் கடந்து வயது, சேவை மூப்பு, சட்ட அறிவு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையிலேயே அந்தப் பதவியை எட்ட முடியும்.
இந்நிலையில் முப்படைகளின் தலைவர் என்று அறியப்படும் ஜனாதிபதியாகக் குறைந்த வயதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஜனநாயக கேலிக் கூத்தாக அமையாதா?
ஒரு நாட்டை வழி நடத்த குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் நாடாளுமன்ற அனுபவம் இருக்க வேண்டியது அத்தியாவசியமானது என்று பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் அடிபட்டு ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியல் புரிதலைக் கொண்டுள்ளவர்களே தலைமைப் பதவியை ஏற்று நாட்டை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்ல முடியும். அந்த அனுபவப் பாடம் 30 வயதானவருக்குக் கிடைக்குமா?
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட கொண்ட முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர் தொடக்கம் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ஜீ.ஆர். வரை ஐம்பது வயதைக் கடந்தவர்கள்.
வளர்ந்து வரும் நாடொன்றில் ஜனாதிபதிப் பதவிக்கு ஒருவர் போட்டியிடக் குறைந்தபட்சமாக 45 வயதளவில் இருப்பதே யதார்த்தமாகும்.
ஸ்வீடன், நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் இந்த விடயத்தில் ஒப்பீடு செய்வது பேதமையாவே இருக்கும்.
அரசியல் கருக்கலைப்பு :
ஜனநாயக நாட்டின் அடித்தளம் நாடாளுமன்றம். அதன் தூண்கள் அரசியல் யாப்பு. `எனவே நினைத்தால் கலைத்துவிடுவேன் எனும் அரசியல் நிலைப்பாடு` மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இது சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் எனும் அச்சங்கள் உள்ளன. இதற்கும் சிசு கருக்கலைப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
19ஆவது திருத்தம் வரும் முன்னர் ஜனாதிபதி விரும்பினால் நாடாளுமன்றத்தை ஒரு வருடத்தின் பின்னர் கலைக்க முடியும். இந்த அடிப்படையில் தான் இரண்டு முறை ரணில்-சந்திரிகா அதிகாரப் போட்டியில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை 2000 மற்றும் 2004 ஆண்டுகளில் கலைத்து மக்கள் ஆணையைப் புறந்தள்ளினார்.
இலங்கை அரசியல் யாப்பின் படி நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை ஜனாதிபதி தனது விருப்பத்தின்படி ஓரண்டுக்குப் பிறகு கலைக்கலாம் என்று கூறுவது அரசியல் யாப்பின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்கிறது.
எந்தவொரு நாட்டிலும் பொதுத் தேர்தல் என்பது பெரும் செலவாகும் ஒரு நடவடிக்கை. நினைத்த போதெல்லாம் தேர்தல் என்பது நாட்டின் நிதிச்சுமையை அதிகரிக்கச் செய்யும். அடிக்கடி தேர்தல் நடந்து ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கொள்கை மாற்றங்கள் ஏற்படும் நிலையில் இது நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியைப் பாதித்து, கடன் நெருக்கடியை அதிகரித்து மக்களை பெரும் நிதிச் சுமைக்குள் தள்ளுவதோடு தேர்தல் என்றால் மக்களை சலிப்படையவும் செய்யும்.
நாடாளுமன்ற பதவிக் காலம் நிலையாக இருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்று. அந்தப் பதவிக் காலம் விரும்பியபடி மாற்றி அமைக்கப்பட்டால் ஜனநாயகமே சீரழிந்து போகும்.
அமைச்சுகளின் `பிக் பாஸ்` ஜனாதிபதி :
ஏற்கனவே இலங்கையில் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமே இருக்கும் மரபொன்று இருந்தது. அதைத் தவிர மேலதிகமாக சில அமைச்சுப் பொறுப்புகளும் ஜனாதிபதி விரும்பினால் தன் வசம் வைத்திருக்க முடியும்.
ஆனால் 19ஆவது திருத்தம் மூலம் இல்லாமல் போன இந்த நடைமுறை 20ஆவது திருத்தத்தில் மீண்டும் வருகிறது. 19ஆவது திருத்தத்தின் படி பிரதமரின் ஆலோசனையைப் பெற்றே அமைச்சர்களை நியமிக்க முடியும். ஆனால் 20ஆவது திருத்தம் அதற்கு மாறாக பிரதமரின் பரிந்துரை இல்லாமலும் ஜனாதிபதியால் தன்னிச்சையாக அமைச்சர்களை நியமிக்க முடியும்.
அதேவேளை ஜனாதிபதி தான் விரும்பிய அமைச்சையும் தன் வசம் வைத்திருக்க முடியும். இந்த மாற்றம் பிரதமர்-ஜனாதிபதி என்று இரட்டை அதிகார மையத்துக்கு வழி வகுக்கிறது.
இரட்டைக் குடியுரிமை :
இலங்கையில் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு. 2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் அமெரிக்க குடியுரிமையும் பெற்றிருந்த கோத்தாபய ராஜபக்ச உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் பாதுகாப்புச் செயலராக பதவி வகித்தார்.
உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் யுத்தத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டார்.
மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகி முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தார்.
ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் வலுப்பெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி 19ஆவது திருத்தத்தில் வழி செய்யப்பட்டதாக இப்போதும் பேசப்படுகிறது. .
இதனால் தான் கோத்தாபய ராஜபக்ச தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை துறந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
பசில் ராஜபக்ச இப்போது நேரடி அரசியலில் ஈடுபடாமல் திரைமறைவில் அரசியல் வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இயக்கும் `ரிமோட் கண்ட்ரோல்` இவர் வசம் தான் உள்ளது. மேலும் ஜனாதிபதியின் பொருளாதார மறுமலர்ச்சி செயலணியின் தலைவராகவும் இருக்கிறார்.
2015 தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து தெரிவானவர் பிரபல நடிகை கீதா குமாரசிங்க. 19ஆவது திருத்தம் காரணமாக உள்நாட்டுத் தேர்தலில் இரட்டைக் குடியுரிமை உள்ள பிரஜைகள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்றிருந்த கீதா குமாரசிங்க நீதிமன்ற உத்தரவையடுத்து பதவியிழக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் அவர் சுவிஸ் பிரஜாவுரிமையைத் துறந்து 2020 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனும் தனது கனடிய பிரஜாவுரிமையை துறந்தார்.
சுயாதீனத்தை இழக்கும் ஆணைக் குழுக்கள் :
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்ட ஒரு நாட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது நாட்டின் நலத்தைவிட தனி நபரின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கே வழி செய்கிறது என்பதற்கு இலங்கையின் தற்போதைய அரசியல் ஒரு உதாரணம்.
19ஆவது திருத்தத்தின் படி அமைக்கப்பட்ட அரசியல் யாப்புப் பேரவை இப்போது நாடாளுமன்ற பேரவை என்று மாற்றப்படுகிறது.
அதாவது இந்தப் பேரவையில் சிவில் பிரதிநிதிகளுக்கு இனி இடமில்லை. அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே இருப்பார்கள்.
நாட்டின் உயர் பதவிகளுக்கும், தேர்தல் ஆணைக் குழு, மனித உரிமைகள் ஆணைக் குழு, பொதுச் சேவைகள் ஆணைக் குழு போன்றவைகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை இந்தக் குழு முன்வைக்கும். அதில் யாரைத் தெரிவு செய்வது என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பார். அப்படியான சூழலில் இந்த ஆனைக் குழுக்கள் அரசியல் மயமாக்கப்படும் போது அதன் சுயாதீனத் தன்மை என்பது கேள்விக்குள்ளாகும்.
*இனி காவல்துறைத் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோரையும் ஜனாதிபதி தனது விருப்பப்படி நியமிக்க முடியும்.
*பிரதமரை நீக்கும் அதிகாரமும் எந்த அமைச்சையும் தன் வசம் வைத்திருக்கும் அதிகாரமும் 20ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
*ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக் கூரல் 19ஆவது திருத்தத்தில் இருந்தது. 20ல் அது இல்லை.
*19ன் படி ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். ஆனால் 20ல் அந்த வழிமுறை இல்லை.
அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தம் இன்னும் சட்டமாகவில்லை. இப்போது ஹன்சார்டில் சட்ட மூலமே வெளியாகியுள்ளது. சமூக கருத்தாடல்களுக்காக இரு வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஏதாவது சர்ச்சைக்குரிய அம்சங்கள் அதில் காணப்படுமாயின் உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி யாராவது நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் குழு நிலை விவாதங்களின் போது திருத்தங்கள் கூட வரலாம்.
ராஜபக்ச தரப்பு முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டார்கள் என்பது வரலாறு. அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவர்கள் என்பது மட்டும் உண்மை.