யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்
இலங்கையின் நன்கு அறியப்பட்டவராக இருந்து மறைந்த, டாக்டர் இந்திரகுமார் பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய சோவியத் யூனியன் பயணக்கட்டுரையில் சோவியத் யூனியனாக பிரகாசித்த தற்போதைய ரஸ்யா தொடர்பாக எழுதுகின்றபோது, பல இடங்களில் இலங்கையையும் ரஸ்யாவை பிரித்துப் பார்க்கும் பல விடயங்களைச் சொல்லியிருந்தார்கள்.
குறிப்பாக அந்த தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவர் மிக அழகான எழுதியிலருந்த வரிகள் எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளன.
டாக்டர் இந்திரகுமார் சோவியத் யூனியனுக்குச் பயணம் செய்துவிட்டு, இலங்கைக்கு விமானத்தில் திரும்பி வருகின்றார். அவருக்கு அருகில் உள்ள ஆசனத்தில் பத்திரிகையாளரான ஒரு ரஸ்யர் அமர்ந்திருந்து அவரோடு பல மணி நேரங்கள் அரசியல் மற்றும் நாடுகள் தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார்கள். இலங்கையில் தமிழ் , பண்டாரநாயக்கா விமான நிலையத்தை விமானம் நெருங்குகின்றபோது வானத்திலிருந்து இலங்கையின் நிலப்பகுதி மற்றும் கடல் வளம் ஆகியவற்றைப் பார்த்து விட்டு அந்த ரஸ்ய பத்திரிகையாளர் டாக்டர் இந்திரகுமாரிடம் கேட்டாராம், “உங்கள் நாட்டில் தானே நல்ல மலை வளம், மழை வீழ்ச்சி.
கடல்வளம் விவசாய நிலங்கள், கனிம வளங்கள் அனைத்தும் உள்ளன. இவையெல்லாம் எலலா இன மக்களுக்கும் பொதுவானவை தானே? அப்படியிருக்க உங்கள் நாட்டில் இனப்பிரச்சனை மேலோங்கி விஸ்வரூபம் எடுத்துள்ளது? என்று.
அதற்கு டாக்டர் எழுதுகின்றார். ” நான் அவருக்குரிய பதிலை தெளிவாகச் சொல்லுவோன் என்று சிந்தித்து ஆயத்தப்படுத்தியபோது, விமானம் தரையைத் தொட்டுவிட்டது. அவரும் நானும் பட்டத்திலிருந்து அறுந்து பிரிந்த நூலைப் போல பிரிக்கப்பட்டு விட்டோம்” என்று எழுதி தனது பயணக் கட்டுரையை முடிக்கின்றார்.
இவ்வாறான வளங்கள் அனைத்தும் நிறைந்த இலங்கை என்னும் மாங்கனித் தீவில் இனப்பிரச்சனைகள் தோன்றவே தேவையில்லை என்று ஒரு முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டு கட்டியெழுப்பப் பட்ட ரஸ்யப் பத்திரிகையாளர் சாட்சியம் கூறுகையில், இன்று இலங்கைத் தேசம் இன ரீதியாக கூறுகளாகப் பிரிந்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடக்கின்றது. அதிலும் ஈழத் தமிழினம் கொன்றொழிக்கப்பட்டு, விதவைத் தாய்மார்களை இலட்சக் கணக்கில் தாங்கிக் கொண்டு, கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தள்ளப்பட்டு அதற்கு மேலாக அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்ட ஒரு இனமாக உள்ளது என்பது எவ்வளவு கவலை தரக்கூடிய விடயம் என்பதை நாம் நன்கு கவனிக்க வேண்டும்
இன்று இலங்கையில் அரசியல் எவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்பதை விபரித்து எழுதத் தேவையே இல்லாமால போயிவிட்டது. அங்கு அரசியலும் அரசியல் பதவிகளும் சுகபோகங்களை அனுபவிக்கவும், பொருளீட்டவும் உகந்த ஒரு ‘துறை’ யாகவே மாறிவிட்டது.
உதாரணத்திற்கு பல அரசியல் சார்ந்த குடும்பங்களை எடுத்துக் கொண்டால் அந்த குடும்பங்கள் இனிவரும் ஆண்டுகளில் பரம்பரை பரம்பரையாக ஆட்சியில் அமர்ந்திருப்பதும், அவற்றின் பரம்பரைகளே, தொடர்ந்தும் ஆட்சி பீடங்களில் அமர்ந்திருக்கப்போவதும் உறுதி செய்யப்பட்ட அத்தியாயங்களாகவே மாறிவிட்டன. இனி இந்த கட்டுரையின் தலைப்புக்கு உங்களை அழைத்துச் செல்லலாம் என்று எணணுகின்றேன்.
இலங்கையில் தென்னிலங்கை அரசியலை சற்று தள்ளி வைத்துவிட்டு, எமது தமிழர் அரசியலுக்கு செல்வோம். நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது இருப்பை ஓரளவு தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றே கூறவேண்டும்.
அதுவும் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை இடம் மாற்றம் செய்து வேறு பெயர்களுக்கு மாற்றி தோற்றவர்களையே வெற்றியடைச் செய்த ஒரு தேர்தல் என்றே நாம் கடந்த தேர்தலைப் பார்க்க வேண்டும்.
தமிழர் தரப்பில் வடக்கில் சுமந்திரன் போன்றவர்களின் வெற்றிகளும் கிழக்கில் வியாழேந்திரன் பிள்ளையான் போன்றவர்களின் வெற்றிகளும் ரவிராஜ் அவர்களின் தோல்வியும் இந்த வகையான இடமாற்றங்கள் செய்யப்பட்டதால் நிகழ்ந்தவையாகும். இவற்றைப்பற்றி நிறையவே எழுதக் கூடியதாக இருந்தாலும், இந்த கட்டுரையின் தலைப்பை நோக்கிச் செல்ல வேண்டியிருப்பதால் அவற்றை பின்னர் ஒரு கட்டுரையில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
சுமந்திரனின் வெற்றியும் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றியும் ஒரேயடியாக இடம்பெற்றிருந்தால் இன்று சுமந்திரன் ஒரு அமைச்சராகப் பதவியில் அமர்ந்து பவனி வந்திருப்பார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எண்ணியிருந்தது முற்றாக இடம்பெறவில்லை. எனவே சுமந்திரன் அமைச்சராக வரமுடியவில்லை.
ஆனால் சுமந்திரன் இன்றும் ஒரு சிரேஸ்ட அமைச்சருக்குரிய அரசாங்க இராணுவ பாதுக்காப்போடு தான் எங்கும் காட்சியளிக்கின்றார். அவருக்கு வெற்றி என்ற கபடத்தனமான பரிசே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒன்று என்பதை சிறிய குழந்தைகள் கூடஅறிந்து கொள்ள வாய்ப்புண்டு.
இவ்வாறிருக்கையில், கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட நியமனப் பட்டியல் உறுப்பினர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டு, சுமந்திரன் மாவையை தொலைபேசியிலி; அழைத்து கூறிய தகவல் எதுவென்றால் ” அண்ணர்! நீங்கள் எம்பியாக பல வருடங்கள் இருந்து விடடீர்கள். அது உங்களுக்குத் தேவையில்லை இனி. உங்களது நீண்ட நாள் ஆசையான வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை நீங்கள் பெறுவதற்கு நான் நல்ல துணையாக இருப்பேன். அதுவரை நீங்கள் அமைதியாக இருங்கள்.
அந்த தேர்தலில் கூட ஏதாவது ‘வேலைகள்’ செய்து உங்களை நிச்சயம் முதலமைச்சர் பதவியில் அமர்த்துவேன்” என்று இதனால் தான் மாவை சேனாதிராஜா அவர்களும் இப்போது சில நாட்களாக சுமந்திரனை விமர்சித்து எதுவுமே பேசுவதில்லை. அவர் நேற்று நடத்திய விருந்துபசாரத்திலும் மாவை முக்கிய அழைப்பாளியாக கலந்து கொண்டமையும் மாகாண முதலமைச்சர் பதவியை இழந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் என்பது எங்கும் பேசப்படுகின்ற ஒரு விடயமாகவே வடக்கில் உள்ளது என்பதற்கு சாட்சி நானே தான்.
இதற்காகத் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு சுமந்திரனும் மாவையும் கஸ்டப்படுகின்றார்கள். “சம்பந்தர் ஐயா இனி படுக்கைக்கு போகப் போகின்றவர்தானே” என்ற எண்ணம் மாவைக்கும் சுமந்திரனுக்கும் வந்துவிட்டது போல..
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த முடியுமா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே பெரும்பான்மை அங்கத்தவர்களுக்கு இருப்பதாகவே கேள்விப்படுகின்றோம்.
இவ்வாறு முதலமைச்சர், பதவி என்ற கனவோடு உள்ள மாவை சேனாதிராஜாவும் கொழும்பு அரசியலில் ஒரு சிரேஸ்ட அமைச்சர் பதவியை எந்தக் கட்சி மூலமாகவேனும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு இருக்கின்ற சுமந்திரன், மாவை ஆகியோருக்கும் நன்கு தெரியும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சம்பந்தர் அவர்களோடு சேர்ந்த தாங்கள் இருவரும் பொறுப்பு என்பது இவ்வாறிருக்கும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தமை பற்றி எனக்குத் தோன்றியவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் முக்கியமான செய்தியை முன்வைத்திருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இவ்வாறான செய்தியை வழங்கியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.
அதாவது, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே என்று த.தே.கூட்டமைப்பு கூறிவந்தது. 2001இல் ஸ்தாபிக்கப்பட்ட இக்கூட்டமைப்பு ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் போட்டியிட்டு வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் அதிக பாராளுமன்ற ஆசனங்களை வெற்றிபெற்று வந்ததோடு, தாமே அம்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் கூறிவந்தது.
அதிலும் 2015முதல் 19வரையான காலப் பகுதியில் அன்றைய அரசாங்கத்தின் நிழல் பங்காளியாக எதிர்க்கட்சியிலிருந்து இக்கூட்டமைப்பு செயற்பட்டது. இருந்தும் கூட தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளோ, சாதாரண பிரச்சினைகளோ தீர்த்து வைக்கப்பட இக்கூட்டமைப்பினால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறிய போதிலும் அம்மக்களின் எதிர்பார்ப்புக்கள், தேவைகள் குறித்து கூட கவனம் செலுத்த தமிழ்க் கூட்டமைப்பு தவறியது.
இவ்வாறான சூழலில் நடந்த பாராளுமன்ற தேர்தலின் ஊடாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இந்த செய்தியை வழங்கி இருக்கின்றனர். அதன் பிரதான செய்தி த.தே. கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை பத்தாக வீழ்ச்சியடையச் செய்திருப்பதாகும்.
இத்தேர்தல் முடிவின்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ள இக்கூட்டமைப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் வன்னி மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் பெற்று தேசிய பட்டியலுடன் பத்து ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் வெற்றி பெறவில்லை.
வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலிருந்து இவ்வாறான தேர்தல் முடிவு வெளியாகியிருப்பது அண்மைக் காலத்தில் இதுவே முதற்தடவையாகும். இம்முடிவின்படி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்ற அந்தஸ்தை த.தே.கூட்டமைப்பு இழந்துள்ளது என்பதே அரசியல் தலைவர்களதும் அவதானிகளதும் கருத்தாக உள்ளது. தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே இவ்வாறான பின்னடைவை இக்கூட்டமைப்பு சந்தித்திருக்கிறது.
அத்தோடு இக்கூட்டமைப்பின் பேச்சை தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருப்பதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை என்பதையும் இத்தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது. தாமும் நாட்டில் வாழும் ஏனைய எல்லா மக்களுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும். கூட்டமைப்பினரின் பேச்சைக் கேட்டு தனித்திருப்பதும் பிரிந்திருப்பதும் சாத்தியமானதல்ல. ஆளுக்காள் புரிந்துணர்வு நல்லிணக்கத்துடன் வாழும் போது தான் சுபீட்சமாகவும் வளமாகவும் வாழ வழி கிடைக்கும்.
இந்த நிலையில்தான் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை வழங்கியிருக்கும் தேர்தல் முடிவுகளை நோக்க வேண்டியுள்ளது. இந்த விடயங்களை நிச்சயமாக மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் கவனிக்க வேண்டுமே தவிர மாவை வடக்கின் முதலமைச்சர் பதவியையோ, அன்றி சுமநதிரன் கொழும்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியொன்றையோ அல்ல. அதை அவர்களும் தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.