முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தாவையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சுன்னகம் காவல்துறையில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஞானலிங்கம் மயூரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த இருவரையும் வரவழைக்க ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.
நேற்று காலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த ஞானலிங்கம் மயூரன்,புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் அல்லது சுவிஸ் குமாரை விடுவிப்பதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வர் நேரடியாக தலையிட்டதாக கூறியிருந்தார்.
இதன் அடிப்படையிலேயே, குறித்த இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.