கதிரோட்டம் 11-09-2020
இலங்கையில் இனவாதப் பிடிக்குள் அகப்பட்டுக் கிடந்த எமது தமிழினம், வடக்கிலும் கிழக்கிலும் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்த போது தென்னிலங்கை இனவாதிகளும் இலங்கை இராணுவமும் முற்றிலும் எதிர்பாராத வகையில் தங்களைப் பாதுகாக்கவே மிகுந்த பிரயாசைப்பட்டார்கள்.
பல்வேறு நெருக்கடிக்கடிகள் மற்றும் அடக்கு முறைகள், மற்றும் இனரீதியான வேறுபாடுகள் போன்றவை எம்மில் இலட்சக் கணக்கான உறவுகளை நாம் இழக்க வேண்டி வந்தது. இதனால் புலம் பெயர்ந்த நாடுகளுக்கு எமது மக்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.
இவ்வாறாக புலம் பெயர்ந்த நாடுகளில் எத்தனையோ ஆண்டுகள் கடந்த வலுவுள்ள சமூகமாக அடித்தளத்தை அமைத்துக் கொண்ட எமது ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேறினார்கள். விடுதலைப் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது விடுதலை இயக்கத்தின் ஆயுத பலத்தை உறுதியாக்குவதற்கு உதவியவர்களில் புலம் பெயர் தமிழர்கள் முன்னணியில் இருந்தார்கள்.
ஆனால் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் எமது சமூகத்தை இன்னொரு வகையான நச்சுப் பொருள் தாக்கத் தொடங்கியது. அது தான் ‘போதைப் பொருள் பாவனை. இந்த கொடிதான நஞ்சின் பிடியியிலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பை புலம் பெயர்நாடுகளில் எமது சமூகம் சார்ந்த அமைப்புக்கள் எற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.
கனடா போன்ற நாடுகளில் போதைப் பொருட்களின் விற்;;பனை அரசாங்கத்தின் அங்கீரகாரத்தோடு மருத்துவத்திற்கான பாவனை என்ற அடிப்படையில் திறந்த கடைகளில் கிடைக்கின்ற அளவிற்கு உள்ளதால் மக்கள் திகைத்த வண்ணம் உள்ளார்கள். பெற்றோர்கள் அச்சத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளார்கள். காரணம் அண்மைக் காலங்களில் கனடாவில் பல தமிழ் பேசும் இளைஞர்களும் திருமணமானவர்களும் போதைப் பொருள் பாவனையின் உச்சத்திற்குச் சென்று மரணத்தைத் தழுவியுள்ளார்கள். இ;ன்னும் சிலர் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்ட காரணத்தால் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் மற்;றும் பகை ஆகியவற்றின் காரணத்தால் உயிரிழக்க வேண்டி வந்த சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆனாலும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் அரசியலிலும் முன்னேற்றங்களைக் கண்ட எமது புலம் பெயர் தமிழர் சமூகம் எமது சமூகத்தில் போதைப் பொருள் பாவனையால் சீரழியும் இளைஞர்களை மீட்டுவர முன்வரவில்லை. இது ஒரு கவலைக்குரிய விடயமாகும்.
ஆனால் எமது தாயகத்தில் ஒரு தமிழ் அரசியல்வாதி இந்த முயற்சியில் இறங்கி எமது வடக்கு கிழக்கு இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று குரலெழுப்பியுள்ளார். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
இவ்வாறு இலங்கையில் தமிழ் இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என்;று குரல் எழுப்பியுள்ளவர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரி.கலையரசன் ஆவார்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிராந்தியத்தில் பணியாற்றிய உலக தரிசனம் நிறுவனத்தின் அபிவிருத்தி வேலைத்திட்ட நிறைவு விழா நேற்று வியாழக்கிழமை நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று பெரியவர்களை விட சிறியவர்கள் அதிகளவில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி சமூகத்தை சீரழிக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனை இல்லாமல் செய்ய வேண்டும்.
இந்தப் பொறுப்பை இளைஞர்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் கையிலெடுப்பது அவசியம்.
இல்லையென்றால் தமிழ்ச் சமூகம் அழிந்து விடும் அபாயம் தூரத்தில் இல்லை என்றார். தூயகத்தில் ஒரு முன்மாதிரியாக விளங்கும் இந்த தமிழ் அரசியல்வாதியைப் பின்பற்றி புலம் பெயர்ந்த நாடுகளிலும் எமது சமூகம் சார்ந்த பிரதிநிதிகள் முன்வந்து எமது தமிழ் இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நாம் வேண்டுகின்றோம்.
சீனாவை மிரட்டும் தோரணையில் இந்தியா களமிறக்கிய விமானம்
இந்திய_ சீன எல்லையில் உள்ள லடாக்கில் ரபேல் விமானங்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தியுள்ளது இந்தியா. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்தியாவின் விமானப் படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்த நிலையில் தற்போது கூடுதல் விமானங்கள் இந்தியா வந்துள்ளன.
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 36 ரபேல் விமானங்கள் இந்தியா வர வேண்டும். மீதி விமானங்கள் இந்தியாவில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் பிரான்சின் டஸால்ட் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும்.இந்தியாவிற்கு ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒரு ரபேல் விமானம் வந்தது. அதன் பின் 5 ரபேல் விமானங்கள் ஜூலை 29ம் திகதி வந்தன. இந்த ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டன.
இதற்கான இணைப்பு விழா திருவிழா போல நடந்தது. ஹரியானாவில் இருக்கும் அம்பாலா படைத்தளத்தில் இந்த விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று கூடுதலாக 5 ரபேல் விமானங்கள் இந்திய இராணுவத்துடன் இணைக்கப்பட்டன. இதற்கான விழா அம்பாலாவில் நடந்தது. ரபேல் விமானங்களை இந்திய இராணுவத்துடன் இணைக்கும் விழாவிற்கு பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்டி மற்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வருகை தந்தனர்.மிகப் பெரிய அளவில் இதற்காக அம்பாலாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட ரபேல் விமானங்களுக்கு அனைத்து மத சம்பிரதாயப்படி பூஜை செய்யப்பட்டது.
அதன் பின் இந்த ரபேல் விமானங்கள் வானத்தில் பறந்து அணிவகுப்பு நடத்தின. 5 ரபேல் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பறந்து அணிவகுப்பு நடத்தின. அதன் பின் ரபேல் விமானங்களைச் சுற்றி இந்தியாவின் சுகோய் 30 மற்றும் ஜாகுவார் விமானங்கள் பறந்தன. 3 சுகோய் விமானங்களும் 3 ஜாகுவார் விமானங்களும் அம்பாலா படைத்தளத்தில் இருந்து வானத்தில் பறந்தன.
இதில் ஜாகுவார், ரபேல் இரண்டும் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு, சுகோய் ரஷ்யாவின் தயாரிப்பு. இந்த விமானங்கள் அம்பு போல வானத்தில் தோற்றத்தை ஏற்படுத்தி அணிவகுப்பை நடத்தின. நடுவில் ரபேல் விமானங்கள் செல்ல இரண்டு பக்கமும் சுகோய் மற்றும் ஜாகுவார் விமானங்கள் பறந்து அம்பு போன்ற வடிவத்தை ஏற்படுத்தின.
லடாக்கில் போர் வந்தால் அது கண்டிப்பாக விமானப்படை சார்ந்த போராகவே இருக்கும். இராணுவம், கடற்படையை விட விமானப் படையே போரின் முடிவை மாற்றும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தியா இந்த விமானப்படை கண்காட்சியை நடத்தி உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சீனாவிற்கு இந்தியாவின் விமானப்படை வலிமையை காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சியை இந்தியா நடத்தி உள்ளது.
சீனாவிடம் சுகோய் விமானங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ம் தலைமுறை விமானங்கள் நிறைய இருக்கின்றன. அதேபோல் சீனாவிடம் ரபேலுக்கு பதில் ஜெ 20 போன்ற அதே திறன் கொண்ட விமானங்கள் உள்ளன.
இதனால் சீனாவின் ஜெ 20 வகை விமானங்களுக்கு பதிலடி கொடுக்க எங்களிடமும் விமானம் உள்ளது என்பதை புரிய வைக்க இந்தியா ரபேல் விமானங்களை களமிறக்கி உள்ளது.