மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக, நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
செம்மணி- சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வி.மணிவண்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
இந்த மயானத்தின் பாதுகாப்பு முழுவதும் நல்லூர் பிரதேச சபையினுடையதே அவ்வாறு இருக்க, இந்த மயானத்தில் அத்துமீறி நுழைந்து, மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
பிரதேச சபை இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானித்தால், அதற்கான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க தயாராக உள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.