மறைந்த ஆறுமுகம் தொண்டமான் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என பெருமளவில் புனைந்து பேசப்படுகிறது என்று சிறிதரன் எம்பி இன்று 11ம் திகதி இலங்கை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகம் தொண்டமான் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,
“தமிழ் மக்கள் நிம்மதியோட சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கு ஆறுமுகம் தொண்டமான் ஒத்துழைப்பு வழங்கினார். எனவேதான் 2001ம் ஆண்டு தலைவர் வே.பிரபாகரனை நேரில் சந்தித்தார். அவருடன் உணவு உண்டார்.
ஒருபோதும் மலையக மக்களோ – தலைவர்களோ ஈழ விடுதலையில் எதிர்க்கருத்தை கொண்டிருக்கவில்லை. எத்தனையோ மலையக இளைஞர்கள் ஈழத்து மண்ணில் மாவீரர்களாக மடிந்துள்ளனர்.” – என்றார்.
“ஆறுமுகம் தொண்டமான், தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசுக்கு ஆதரவாக அவர் செயற்பட்டார்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னதாக சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.