நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்படுவது தமிழ் தேசியத்தின் மீது நான் கொண்ட பற்றினால் மட்டுமே. கடந்த 10 வருடங்களாக தலைமையின் வேண்டுகோளுக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைய கொழும்புக் கிளையை சொந்த நிதியிலேயே நடத்தி வருகின்றேன்.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பை பாதிக்கும் செயற்பாடுகளைக் கூறவேண்டிய தார்மீகக் கடமையும் கடப்பாடும் எனக்குண்டு என்பதனாலேயே இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்தமைக்கு முக்கிய காரண கர்த்தாவாக செயற்பட்டவர் திரு.ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரனே. திரு.சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும்.
இவர் கட்சியிலிருந்து நீக்கப்படாவிடின் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்ட தமிழரின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் அர்த்தமிழந்து போவதோடு தாயகத் தேசிய கொள்கைகளும் தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பெறுமதியிழந்து அழிந்தே போகும் நிலை நிச்சயம் உருவாகும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணங்களும் குறித்த கடிதத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள்,
2015ஆம் ஆண்டின் நல்லாட்சியில் அரசமைப்பு விவகாரம்.
தமிழ் தேசிய கொள்கை நீக்கல் அரசியல்.
ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்கள். தமிழ் ஊடகங்கள் மீது அவதூறான கருத்துக்கள்.
இனப்படுகொலை – சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனும் கருத்து
ஜெனிவா விவகாரங்களைக் கையாண்ட முறை
தேசிய அரசியலுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை தமிழ் தேசிய அரசியலுக்கு வழங்காமை (கடும் அரசஆதரவு)
அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஆகிய காரணங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.