இலங்கையின் வடபகுதி மீனவர்கள் தங்கள்; மீன்பிடித் தொழிலை நிம்மதியாகச் செய்ய முடியா வண்ணம், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயலால் பாதிக்கப்படுகின்றனர் இதன் காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
வடபகுதி மீனவர்கள் வாயைத் துணியினால் மறைத்துக் கட்டியபடி மெளனமான முறையில் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை நேற்று நடத்தியுள்ளனர். இந்திய மீனவர்களின் கடல் எல்லை தாண்டிய மீன்பிடித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே வடமராட்சி மீனவர்கள் இந்த மௌன ஊர்வலத்தை நடத்தி மகஜர்களையும் கையளித்து இருக்கின்றனர்.
வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் ஏற்பாடு செய்த இந்த மௌன ஊர்வலம் நேற்று முற்பகல் நல்லூர் முன்றலில் ஆரம்பமானது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட கடற்றொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவரிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சருக்கான மகஜரை அமைச்சரின் அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.ஆளுநருக்கான மகஜர் அவரது அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடித்தலால் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் தாம் எதிர்கொள்கின்ற அசௌகரியங்களையும் வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்கள் அந்த மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம், இந்த மௌன ஊர்வலத்தில் கலந்து கொண்ட கடற்றொழிலாளர்கள் ‘இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே!’, ‘மீனவர்களின் கண்ணீர் துடைக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தாருங்கள்’, ‘சுருக்கு வலையைத் தடை செய்!’, ‘இழுவைப் படகுகளை கைப்பற்று’ என்றபடியான வாசகங்களைத் தாங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.
இலங்கைக் கடற்பரப்பில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய மீன்பிடித்தலில் ஈடுபட்டு வருவதால் பல வருடங்களாக நீடித்து வரும் ஒரு விவகாரமே இதுவாகும். அவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்தலில் ஈடுபட்டு வருவதால் வடபகுதி மீனவர்கள் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அதிலும் கடந்த சில தினங்களாக இம்மீன்பிடித்தலில் அதிகளவிலான இந்திய மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் இவ்வாறான மௌன ஊர்வலமொன்றை நடத்தி மகஜர்களை கையளித்து நியாயம் கோரும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று ஊர்வல ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலைமை அக்காலத்தில் ஏற்பட்டிருந்தது. அதனால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வடபகுதி மீனவர்கள் கடற்றொழிலில் அச்சமின்றி ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
என்றாலும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடித்தல் நடவடிக்கை வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பிரச்சினைக்குரிய விடயமாகவும் விளங்கி வருகின்றது.
குறிப்பாக இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைகளை எல்லை தாண்டிய மீன்பிடித்தல் நடவடிக்கையின் போது இந்திய கடற்றொழிலாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். அவற்றில் இழுவைப் படகு, சுருக்கு வலைகள் குறிப்பிடத்தக்கவை.
இதன் விளைவாக வடபகுதி கடலில் மீன்வளம் அழிவடைவதோடு முருகைக் கற்பாறைகளும் பெரிதும் சேதப்படுத்தப்படுகின்றன. அதனால் மீன்களின் இனவிருத்தி வடபகுதி கடலில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம் இந்திய மீனவர்கள் தம் எல்லை தாண்டிய மீன்பிடித்தலின் போது வடபகுதி மீனவர்களின் இலட்சக்கணக்கான பெறுமதிமிக்க வலைகளை அறுத்து சேதப்படுத்தவும் செய்கின்றனர்.
இந்திய மீனவர்களின் இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் இருப்புக்கும் இனவிருத்திக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்தோடு வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களது கடற்றொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனால் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடித்தலையும் அவர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத மீன்பிடி முறைமைகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே வடபகுதி மீனவர்களின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அது முற்றிலும் நியாபூர்வமான கோரிக்கையாகும்.
ஆகவே இக்கோரிக்கை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு அணுகப்பட வேண்டும். இவ்விவகாரத்திற்கு நியாயபூர்வமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலும் கடல் வளங்களைப் பாதுகாப்பதிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் விஷேட கவனம் செலுத்த வேண்டும். அது வடபகுதி கடல்வாழ் உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் பாரிய நிவாரணமாகவும் அமையும்.