சிவா பரமேஸ்வரன்–மூத்த செய்தியாளர்
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் விலக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த `தியாக தீபம்` திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் செய்தியாளர்களையும் பொதுமக்களையும் இலங்கை காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.
திலீபனின் நினைவு நாளை அனுசரிக்க அரசால் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாகச் சிக்கலின்றி அவரது நினைவு நாளை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனுசரித்தனர். ஆனால் இவ்வாண்டு மீண்டும் அதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசின் தடையையும் மீறி முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கூட்டு உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் பங்குபெற்ற பொதுமக்களையும் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் இலங்கை காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் படம் பிடிக்கத் தொடங்கியதும் பிரச்சினை எழுந்தது.
புலனாய்வுப் பிரிவினரிடம் செய்தியாளர்கள் பேச விழைந்த போது அவர்கள் மக்களைப் படம் பிடித்தது மற்றும் அந்தச் செய்தியாளர்களைப் படம் பிடிக்க விடாமல் தடுத்து அச்சுறுத்தியது ஆகியவற்றைக் காட்டும் கானொளி இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்ணாவிரதம் குறித்த செய்திகளை தமது மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கவே இந்த வீடியோவை தாங்கள் எடுத்ததாக இலங்கை காவல்துறை கூறுகிறது. ஆனால் இந்த வீடியோ மூலம் தங்களை அடையாளம் கண்டு நினைவேந்தல் நிகழ்வுக்குப் பிறகு தம்மை அச்சுறுத்தவே பதிவு செய்யப்பட்டது என்று அதில் பங்குபெற்ற சிலர் கூறுகின்றனர்.
அமைதியான முறையில் கோவில் ஒன்றில் கூடி உண்ணா விரதம் இருந்த தங்களை பொலிசாரும் புலனாய்வுத் துறையும் படம் பிடித்தது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கூறினர்.
அந்த நிகழ்வில் பங்குபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜாவும் காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.
நீத்தாரை நினைவு கூர்வது தமிழர் பண்பாடு மற்றும் மரபு என்று ஒட்டுசுட்டான் சிவன் கோவிலில் கூடியிருந்த செய்தியாளர்களும் பொதுமக்களும் பொலிசாரிடம் விளக்கியும் அவர்கள் செவிமடுக்கவில்லை என்று அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் முழுமையாக உள்ளது என்று அரசு கூறும் வேளையில், நினைவு நாள் ஒன்றில் பங்கேற்ற மக்கள் செய்தியாளர்களிடம் பேசுவதை காவல்துறையினர் ஏன் படம்பிடிக்க வேண்டும்? எனும் கேள்வியை இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
காவல்துறையினரும் புலனாய்வுப் பிரிவினரும் பதிவு செய்த வீடியோ தங்களையும் அங்கு குழுமியிருந்த மக்களையும் மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்று வடக்கு மாகாண செய்தியாளர் சண்முகம் தவசீலன் கவலை வெளியிட்டுள்ளனர்.
‘’பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் எமது நிறுவனத்தின் இலச்சினையுடன் கூடிய மைக்கில் பதிவு செய்யும் போது அதைக் காவல்துறையினர் படம் படிப்பது முறையானது அல்ல’’
எனினும் அங்கு கூடிய சிலர் கோவில் பகுதியிலிருந்து வெளியேறி பொலிசாரின் கண்ணில் படாமல் சில செய்தியாளர்களிடம் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கையில் அரசுக்கு எதிரான எந்தச் செயல்பாடும், கருத்தும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் என்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஊடகச் சுதந்திரம் இலங்கையில் ஏட்டளவில் மட்டுமே உள்ளது என்று நீண்ட காலமாகப் பன்னாட்டு அமைப்புகளும், எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பும் குற்றஞ்சாட்டி வருகின்றன.