கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமரும் இலங்கை பிரதமருக்கும் இடையிலான மெய்நிகர் உச்சி
மகாநாடு ஒன்று நடந்திருக்கிறது. ராஜபக்சக்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய பின் நடந்த
முதலாவது உயர்மட்ட உச்சி மகாநாடு இது. இச்சந்திப்பில் இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைக் குறித்தும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் குறித்தும் பேசியிருக்கிறது. அதோடு இந்தியா இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்தம் தொடர்பான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு என்று இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு மானியமாக வழங்க இருக்கிறது.
இதில் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த விடயம் 13 ஆவது திருத்தம். பதின்மூன்றாவது திருத்தம் இந்திய இலங்கை உடன்படிக்கையின் எஞ்சியிருக்கும் ஒரே பதாங்க உறுப்பு. இத் திருத்தத்தைத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியா கேட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்தியப் பிரதமர் பேசிய பொழுது மஹிந்த ராஜபக்ச அதை பதில் ஏதும் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அரசாங்கம் வெளியிட்ட உத்தியோக பூர்வ அறிக்கையில் குறிப்பாக சிங்கள அறிக்கையில் அது தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது. அதே சமயம் இந்திய வெளியுற அமைச்சு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் அதுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
உச்சி மாநாட்டுக்கு பின் இரு தரப்பும் இணைந்து உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின் அரசாங்கம் சிங்கள மக்களுக்கு ஒரு தனி அறிக்கை வெளியிட்டிருப்பது ராஜதந்திர வழமைக்கு முரணானது. அதோடு மோடி பதின் மூன்றாவது திருத்தம் பற்றி என்ன கதைத்தவர் என்று ஊடகங்கள் கேட்டபோது தான் அதை மறந்து விட்டதாக மகிந்த பகிடியாகச்
சொல்லியுமிருகிறார்.
மேற்படி உச்சி மகாநாடு இரண்டு நாட்டின் பிரதமர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆனால் இலங்கைத் தீவின் அரசியலமைப்பின்படி இப்பொழுது நாட்டின் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான். ஆனால் அவரோடு இந்த உச்சி மகாநாடு நடக்கவில்லை. இந்திய பிரதமர் மோடி இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவோடு தான் பேசினார். இதற்குள் ஏதும் செய்தி உண்டா? நிறைவேற்று அதிகாரமுடைய அவருடைய சகோதரரைத் தவிர்த்து விட்டு மூத்தவரான மஹிந்தவை அழைத்துப் பேசியதன்
பின்னணி என்ன?
பின்வரும் காரணங்களைக் கூறலாம். முதலாவது அரசாங்கத்தில் கோட்டாபய அதிகாரம் மிக்கவராக காணப்பட்டாலும் நடைமுறையில் கட்சிக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும் ஜனவசியம் மிக மூத்த பெருந் தலைவராக மகிந்தவே காணப்படுகிறார். எனவே அவருக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அவரை அழைத்திருக்கலாம். இரண்டாவது காரணம் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருடைய அணியை சேர்ந்தவர்களும் குறிப்பாக கோட்டாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்னிருந்து தீர்மானிக்கும் சக்தி என்று கருதப்படும் வியத்மக என்று அழைக்கப்படுகின்ற சிந்தனை குழாமும் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக காணப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
குறிப்பாக தனது முதலாவது இந்திய விஜயத்தின் பின் கோட்டாபய இந்தியாவில் வைத்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த மாட்டேன் என்று கூறி விட்டே நாடு திரும்பினார். அதாவது காணி அதிகாரத்தையும் போலீஸ் அதிகாரத்தையும் மாகாண சபைகளுக்கு வழங்கப் போவதில்லை என்று அவர் இந்தியாவில் வைத்துக் கூறினார். இதில் அவர் இந்தியாவுக்கு ஒரு செய்தியை உணர்த்த முற்பட்டார். ஆனால் இப்பொழுது அவரை தவிர்த்து மகிந்தவை பேச அழைத்ததன் மூலம் இந்தியா கோட்டாபயவுக்கு ஏதும் செய்தியை உணர்த்த முயற்சிக்கின்றதா?
மூன்றாவது காரணம்- 20ஆவது திருத்தம். 20ஆவது திருத்தத்திற்கான முன்வரைபானது ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மையை வெளிப்படுத்தி இருக்கிறதா? என்ற கேள்வி பரவலாக உண்டு. நாட்டை இப்பொழுது ஒரு சிந்தனை குழாமே- வியத்மக அமைப்பே வழி நடத்துகிறதா? என்று கேட்கப்படுகிறது. 20ஆவது திருத்தத்துக்குரிய நகல் வரைபை வியத்மக அமைப்பே உருவாக்கியதாக நம்பப்படுகிறது. அதற்கு எதிராக மகிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு காட்டியதன் விளைவாக மகிந்த ராஜபக்ச அது தொடர்பான மீளாய்வுக்கு ஏழு பேர்கள் அடங்கிய நாடாளுமன்ற குழு ஒன்றை நியமித்திருந்தார். இக்குழுவின் ஆலோசனைகளை உள்ளடக்கி திருத்தப்பட்ட முதல் வரைபே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என்று முன்பு கூறப்பட்ட போதிலும் வியத்மகவின் முதல் வரைபே மாற்றங்கள் எவையுமின்றி அரச வர்த்தமானியில் தொடர்ந்தும் காணப்படுகிறது.
எனவே இது விடயத்தில் வியத்மகவின் கை மேலோங்கி இருக்கிறதா? அல்லது தம்பியை அண்ணன் அனுசரித்துப் போகிறாரா? என்ற கேள்வி முக்கியமானது. இப்படிப்பட்ட கேள்விகளின் மத்தியில் மஹிந்தவையே தான் அங்கீகரிப்பதாகக் காட்ட இந்தியா முயற்சிக்கின்றதா? எனவே, பதின்மூன்றாவது திருத்தத்தை ஒரு பிடியாக வைத்துக் கொண்டு இந்தியா இலங்கை அரசாங்கத்தின் மீது தன் செல்வாக்கைப் பிரயோகிக்க எத்தனிகின்றது என்பதனைத் தான் கடந்த வார நிகழ்வுகள் நிரூபிக்கின்றனவா?
அதுமட்டுமில்ல இதில் ஆகப் பிந்திய மற்றொரு விடயமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இந்தியா ஒரு கலாச்சார மண்டபத்தைக் கட்டி முடித்தி ருக்கிறது. இந்தக் கலாச்சார மண்டபத்தை முதலில் யாழ் மாநகர சபையிடம் கையளிப்பதாக இருந்தது. ஆனால் யாழ் மாநகர சபையிடம் அதை நிர்வகிக்கத் தேவையான நிதி பலமும் இல்லை ; ஆட்பலமும் இல்லை என்று முறையிடப் பட்டதன் பின்னணியில் அக்கட்டிடம் இப்பொழுது மத்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற மற்றொரு கலாச்சார மண்டபத்தை இந்தியா முல்லைத்தீவிலும் கட்டிக் கொடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கலாச்சார மண்டபத்தின் விடயத்திலும் அது தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை வருவதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?
இவ்வாறானதொரு அரசியல் பின்னணியில் தான் ராஜபக்சகளின் மீது ஏதோ ஒரு விதத்தில் தனது செல்வாக்கை பிரயோகிப்பதற்கு இந்தியா முயற்சிக்கிறது. அதற்கு 13ஆவது திருத்தத்தை ஒரு துருப்புச் சீட்டாக அவர்கள் பயன்படுத்தக் கூடும். ஆனால் நடைமுறையில் 13 ஆவது திருத்தம் என்ற ஒன்று நாட்டில் அமுலில் இல்லை. அதன் வெற்றுடல் தான் அமுலில் உள்ளது. கடந்த 33 ஆண்டுகளாக அது தேய்ந்து கொண்டே வந்தது. காலத்துக்கு காலம் ஆட்சிக்கு
வரும் சிங்கள ஜனாதிபதிகள் மாகாணத்தின் அதிகாரங்களை எப்படி மத்திக்கு பிடுங்கிக் கொள்ளலாம் என்றே சிந்தித்து வந்திருக்கிறார்கள். அதை அவர்கள் மிகவும் தந்திரமாக செயல்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போதிருக்கும் மாகாணக் கட்டமைப்பானது ஒரு கோறையான அமைப்பு. அந்தக் கோறையான உடலுக்கு மறுபடியும் உயிர் கொடுப்பது என்றால் அதற்கு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலையில் இந்தியா இருக்கிறதா? மோடிக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்த அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் அதாவது ஈழத்து சிவசேனையின் தலைவர் ஒரு சிறு ஊர்வலத்தை நடத்தியிருக்கிறார். இந்து மதத்தின் பிரதிநிதியாக தன்னை அறிவித்துக் கொண்டு பௌத்த மதத்தின் பிரதிநிதியாக ஒரு பௌத்த பிக்குவையும் இணைத்துக் கொண்டு பசு பாதுகாப்புச் சட்டத்தைக் கோரி அந்த சிறு ஊர்வலம் நடத்தப்பட்டது. காலிமுகத்திடல் சங்கரில்லா விடுதிக்கு எதிரே தொடங்கிய ஊர்வலம் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு முன் முடிவடைந்தது. சில வாரங்களுக்கு முன் மஹிந்த ராஜபக்ச இறைச்சிக்காக மாட்டை கொல்வதைத் தடை செய்யப் போவதாக அறிவித்திருந்தார். எனினும் அந்த முடிவு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. இப்பொழுது மறவன்புலவு சச்சிதானந்தம் பசுக்களைக் காப்பாற்ற போவதாக கூறிக் கொண்டு ஒரு பிக்குவோடு ஊர்வலம் செய்திருக்கிறார். அதுவும் இந்திய-இலங்கை உச்சி மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாள்.
உச்சி மாநாட்டுக்கு பின் இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மதம் சார்ந்த உறவுகளை பலப்படுத்துவதற்கு என்று கூறி இந்தியா இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது. இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்று தெரிய வருகிறது. இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு மத ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உதவிகளை வழங்கி தன்னுடைய செல்வாக்கு செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வரலாமா என்று தான் சிந்திக்கின்றதே தவிர அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலைமை இன்னமும் உருவாகவில்லை என்பதுதான். அப்படி அழுத்தங்களை பிரயோகிக்க வெளிக்கிட்டால் அது ராஜபக்சக்களை மேலும் சீனாவை நோக்கி உந்தித் தள்ளும் என்று இந்தியா அஞ்சக் கூடும். இந்த அச்சந்தானே ராஜபக்ச களின் பேர பலம்?