கதிரோட்டம் 02-10-2020
கொரோனா தொற்றும் ஆரம்பமான மாதங்களில் மிகவும் கவனத்துடன் நடந்துகொண்ட உலகின் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களை நோக்கி வந்த பேராபத்து கட்டத்தை தவிர்த்துக் கொண்டனர் ஆனால் அதே மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தை முற்றாக மறந்த நிலையிலேயே செயற்படத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் பலர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறான அலட்சியப் போக்கு தொடருவது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆனால் கனடாவிலும் கொரோனா தொற்றை மறந்த நிலையில் மக்களில் பெருந்தொகையானோர் செயற்பட்டாலும், எமது கனடிய அரசும் மாகாணங்களும் திறந்த கொள்கையோடு செயற்படுகின்றன என்றே கூறலாம். முக்கியமாக கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மிகவும் பொறுப்புணர்வுடன் தமது நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கோவிட்-19 கிருமி தொற்று ஆரம்பித்தவுடனேயே, கனடாவில் உள்ள மூன்று முக்கியமான பல்கலைக் கழகங்களின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவுகளுக்கு தலா ஒரு மில்லியன் டாலர்களை அனுப்பிவைத்து உடனேயே கோவிட்-19 வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து தகுந்த தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என்;று உற்சாகம் அளித்தவர்கள் எமது பிரதமர் என்றால் அது மிகையாகாது.
இது போலவே ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் அவர்கள் தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு இணைந்து தகுந்த நடவடிக்கைகளை தினமும் எடுத்த வண்ணம் உள்ளார். குறிப்பாக மருத்துவ ஏற்பாடுகள் மற்றும் பாடசாலைகளை மீண்டும் திறந்த விடயம் ஆகியன பாராட்டுக்குரியவை.
எத்தனையோ கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் கனடாவின் பிரதமர் மற்றும் அமைச்சர் அத்துடன் ஒன்றாரியோ, கியுபெக் மாகாணங்களின் முதல்வர்கள், இவர்களைப் போன்ற ஏனைய சில மாகாணங்களின் முதல்வர்கள் அனைவரும் தங்கள் மாகாணங்களுக்குப் பொறுப்பான தலைமை மருத்துவ அதிகாரிகளோடு இணைந்து தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்தும் தகுந்த நேரத்தில் சிறப்பான பணியை ஆற்றியமைக்கு தகுந்த சாட்சிகளாக, பல்லின ஊடகங்களான நாமே சாட்சிகளாக உள்ளோம்.
கியுபெக் மாகாண முதல்வர் மற்றும் அவரது சுகாதார அமைச்சர் ஆகியோரின் சேவையும் பாராட்டுக்களுக்கு உரியவை. ஆரம்பத்தில் அந்த மாகாணத்தில் இறப்புக்களின் விகிதம் அதிகமாக இருந்தபோதும் சற்றும் பதற்றமடையாமல் தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு இணைந்து தகுந்த சேவைகளை வழங்கியவர் கியுபெக் மாகாண முதலமைச்சர் என்றே நாம் கூறவேண்டும்.
கொரோனா தொற்று பாதுகாப்பு விடயத்தில் உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு செல்வதாக சமீப நாட்களாக பரவலாக குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. எமது மக்களில் பலர் கொரோனா விடயத்தில் இப்போது அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
குறிப்பாக இலங்கையில் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள் பலவற்றிலும் கூட தற்போது இவ்விதமான அலட்சியத்தையே அவதானிக்க முடிகின்றது. அலுவலகக் கட்டடங்களுக்குள் பிரவேசிக்கின்ற போது கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவுதல் நடைமுறையை பல இடங்களில் தற்போது காண முடிவதில்லை. பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகின்ற நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களில் பலரும் இப்போதெல்லாம் முகக் கவசத்தை முற்றாக மறந்த நிலையிலேயே காணப்படுகின்றனர் என்பது எமக்கு அங்கிருந்து கிடைக்கும் தகவலாகும் அங்கு இந்த நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கையை மிகவும் குறைத்து வெளியிடுவதில் அரசாங்கம் கவனமாகச் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு இருப்பதால் மக்களும் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்றும் நாம் எண்ணக் கூடியதாக உள்ளது.
கனடாவில் நாம் நடமாடும் இடங்களில் , முகக்கவசத்தை எம்மில் பலர் வெறுமனே சம்பிரதாயத்துக்காகவே அணிந்து கொள்வதையும் காண முடிகின்றது. மூக்கும், வாயும் மூடப்படாத நிலையில் முகக்கவசத்தை தாடை வரை கீழறக்கிய நிலையில் வீதியில் மக்கள் நடமாடுவதை தாராளமாகவே காண முடிகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரிடமிருந்து ஏனையோருக்கு நோய்க் கிருமிகள் பரவுவதை முகக்கவசம் பெருமளவில் தடுக்கிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதேசமயம் நோயாளி ஒருவரின் தும்மல், இருமல் போன்றவற்றால் காற்றில் விசிறப்படுகின்ற கொரோனா வைரஸ் கிருமிகள் சுகதேகி ஒருவரின் உடலினுள் பிரவேசிப்பதை முகக்கவசத்தினால் ஓரளவு தடுக்க முடியுமென்பதும் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.
எனவே எமது அரசாங்கமும் மாகாண அரசாங்கமும்; எடுத்துவரும் ஒத்துழைப்பு வழங்கி இந்த ‘கொரோனா’ என்னும் கொடிய நோயிலிருந்து எம்மையும் எமது நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம் என்;று ஒவ்வொருவரும் ‘சபதம்’ எடுத்துக்கொள்ள வேண்டும்.