இலங்கையின் தலைநகரான கொழும்பில் காணப்படும் பழைய கட்டடங்களை சீரமைத்து அவற்றின் வரலாற்றுச் சிறப்பை பாதுகாத்து மீண்டும் பாவனைக்கு எடுக்கக் கூடியவாறு ஒழுங்குபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுத்த அறிவுறுத்தலின் பேரில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய கொழும்பு நகரின் பழைமை வாய்ந்த கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு நகரில் உள்ள 100 வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையான கட்டங்கள் இடிந்து விழுவதற்கு முன்னர், அவற்றை முறையான பழுது பார்க்கும் திட்டம் 2015 ஆம் ஆண்டுக்கு முன்பே அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அப்போதைய தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் 2015 முதல் சுமார் நான்கரை ஆண்டுகளாக கொழும்பு நகரில் உள்ள பழைய கட்டடங்கள் எதுவும் புனரமைப்பு செய்யப்படவில்லை. இதனால், கொழும்பு நகரில் உள்ள சில பழைய கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதுடன் அவற்றில் உட்சுவர்கள் இடிந்து காணப்படுவதாக அறியக் கிடைத்துள்ளது.
கொழும்பு நகரின் பழைய கட்டடங்களின் வரலாற்றுச் சிறப்பைப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றைப் புனரமைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் தனித்துவ புனரமைப்பு பணியாக கபூர் கட்டடத்தைக் குறிப்படலாம்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் கோட்டை பஸ்டியன் மாவத்தை ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்த கஃபூர் கட்டடத்தின் வரலாறு டச்சு காலத்தைச் சேர்ந்தது.
முன்னோடி நகைக்கடை மற்றும் நகை விற்பனையாளரான நூர்தீன் ஹாஜியார் அப்துல் கஃபூர் அவர்களினால் சுமார் 105 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. அதாவது, 1915 இல் 5 மாடிகள் கொண்ட 8,250 சதுர அடி கட்டடம் தொகுதி வடிவத்தில் அமைக்கப்பட்டது.
இந்த பிரமாண்டமான பழங்கால கட்டடம் கொழும்பின் மதிப்பை அதிகரிக்க காரணமாக இருந்த வடிவமைப்பு என்றும் கூறலாம். இதன் வரலாற்று சிறப்பு காரணமாகவே அது 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 அன்று தொல்பொருள் நிலையமாக தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த இடத்தின் வரலாற்று மதிப்பை ஆய்வு செய்து தற்போதைய அரசு அதனை புனரமைத்து அதன் புராதன மதிப்பை பாதுகாக்கின்றது. இந்த கஃபூர் கட்டடத்தின் வரலாற்று சிறப்புத்தன்மையை பாதுகாப்பதற்காக அதன் புனரமைப்பு பணிகளை 2015 இல் அரசாங்கம் முன்னெடுத்த போதிலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ற்றும் அப்போதைய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் புனரமைப்புப் பணிகள் 2015 க்கு முன்னரே தொடங்கப்பட்டன.
தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் கஃபூர் கட்டடம் உட்பட கொழும்பில் உள்ள பழைய கட்டடங்களை, அவற்றின் வரலாற்று மதிப்பை பாதுகாப்பதற்காக புதுப்பிக்கும் பணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒப்படைத்துள்ளனர்.
கஃபூர் கட்டிடத்தின் புனரமைப்புக்கான மதிப்பீட்டு செலவு ரூ .620 மில்லியன் ரூபா ஆகும். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
1947 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அவுஸதிரேலிய உயர் ஸ்தானிக அலுவலகம் கோல்பேஸ் ஹோட்டலில் (காலி முகத்திடல் ஹோட்டல்) இருந்து கஃபூர் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் கஃபூர் கட்டடத்தின் தனித்துவம் பேசப்பட்டதுடன், மேலும் பல தனித்துவமான நிறுவனங்கள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், நகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் சுகாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.