ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் அரசியல் பேரம்பேசுதல் ஏதாவது உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிஐடியினரின் நடவடிக்கைகள் குறித்து கவலையும் ஆச்சரியமும் வெளியிட்டுள்ள அவர் இது குறித்து அதிகாரிகளை உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
விசாரணைகளின் போது அமைச்சரின் சகோதரர் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பிலிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்ததையும் கர்தினால் மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் சிஐடியினரின் நடவடிக்கை அதற்கு முரணாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்