தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் விலகியுள்ளார். அதே வேளை தனது அணிசார்பில் பேச்சாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைப் பிரேரித்ததால் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அடுத்த பேச்சாளர் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தபடியால் கூட்டத்தின் ஆரம்பித்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு சிறிதரனை முன்மொழிவதாகத் தெரிவித்தார். அதே வேளை செல்வம் அடைக்கலநாதன் அவர்களே அடுத்த பேச்சாளர் பதவிக்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்தார். செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பேச்சாளராவதைத் தாம் எதிர்ப்பதாக சுமந்திரன், சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுத்தன் அடிப்படையில் செல்வம் அடைக்கலநாதனே கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கப்படவேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஆயினும் சம்பந்தனின் கருத்தையும் அவமதித்து சுமந்திரன் அணி குழப்பத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.