கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. 2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை 331,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கம்பஹா கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 6,000 மாணவர்களும் உயர்தரப் பரீட்சையில் 7,000 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.
மினுவாங்கொடை கல்வி வலயத்தில் 50 புலமைப்பரிசில் பரீட்சை நிலையங்களும் 37 உயர்தரப் பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அது தொடர்பில் மாணவர்களுக்கும் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
உயர்தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் நவம்பவர் 6 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிராத்து 684 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கு இதுவரை அதற்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காதிருந்தால் விண்ணப்பதாரர் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உபயோகித்து பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.