யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி, சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்துப் போல அழியாது மனத்தில் நிலைத்திருக்கும். என்ற அர்த்தத்தைத் தருவதுதான் இந்த பழமொழி. இலங்கையில் நடைபெற்று முடிந்த தரம் -5 வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை நினைக்கும் போது தான் இந்த அற்புதமான பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.
. அதேபோன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று 12ம் திகதி நாடெங்கும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறுகின்றன. தரம்-5 மாணவர்களுக்கான நேற்றைய பரீட்சை எதுவித தடங்கலும் இன்றி சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.
பொதுவாக பல்கலைக் கழகப் பரீட்சைகள் அல்லது நிர்வாக சேவை . அரச பொறியியல் சேவை ஆகியவற்றிற்காக பரீட்சைகள் தான் மிகவும் முக்கியம் என்று கருதுகின்ற இந்த வேளையில் சிறார்களின் எதிர்காலத்திற்கு கட்டியம் கூறுகின்ற இவ்வாறான பரீட்சைகளுக்கு இலங்கையில் எமது பெற்றோர் அல்லது ஆசிரிய பெருந்தகைகள் ஆகியோர் கொடுக்கும் முக்கியத்துவம் நன்கு வெளிச்சத்தில் தெரிகின்றது.
தனது பிள்ளை அல்லது தனது மாணவன் எதிர்காலத்தில் இந்த சமூகத்தில் திறமைவாய்ந்த மாணவனாவும் நல்ல பிரஜையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே., அந்த மாணவனது பெற்றோரோ அன்றி ஆசிரியரோ, மிகவும் கஸ்டப்பட்டு இந்த கொரோனா தொற்றல் உள்ள நெருக்கடியான கால கட்டத்தில் இந்த தரம் 5 பரீட்சைக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கும் அவர்களை ஆயத்தம் செய்கின்றார்கள். அதற்கு அங்குள்ள கல்விச் சமூகம் நல்ல ஆதரவை வழங்கியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ள வேளையில், சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடுமையாகப் பேணியபடி இப்பரீட்சை நடத்தப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். புலமைப் பரிசில் பரீட்சைக்காக சுமார் இரு மாதங்களாகக் காத்திருந்த தரம்-5 மாணவர்களுக்கு இப்பரீட்சை நடத்தப்பட்டிருப்பது நிட்சயம் நிம்மதியைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதுபோன்றுதான் இன்று ஆரம்பமாகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையும் மாணவர்களுக்கு நிம்மதியளிக்கின்றது. தரம்-5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டியவையாகும். ஆனால் அன்றைய வேளையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாதிருந்த காரணத்தினால் இவ்விரு பரீட்சைகளுமே திட்டமிட்டபடி நடைபெறவில்லை.
இவ்விரு பரீட்சைகளையும் எப்போது மீண்டும் நடத்துவதென்ற தீர்மானத்துக்கு கல்வியமைச்சினால் வர முடியாமல் இருந்தது. மாணவர்களின் பரீட்சையைப் பார்க்கிலும், கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதே அரசுக்கு பிரதான நோக்கமாக இருந்தது. எனவே இப்பரீட்சைகளைத் தீர்மானிக்கும் திகதி இழுபறி நிலைமையிலேயே இருந்தது.
இப்போது இரு மாத கால தாமதத்துக்குப் பின்னர் நேற்று புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்று முடிந்தது. க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. நாட்டில் இருந்து கொரோனா தொற்று அச்சம் நீங்கவில்லையென்பது உண்மைதான். ஆனாலும் நாட்டை விட்டு கொரோனா தொற்று முற்றாக நீங்கும் வரை க.பொ.த உயர்தரப் பரீட்சையை தாமதப்படுத்தி வைத்திருக்க முடியாது. அவ்வாறான தாமதம் இப்பரீட்சைக்குக் காத்திருக்கின்ற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை போன்றன பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய பொதுப் பரீட்சைகள் ஆகும். இவற்றில் க.பொ.த உயர்தரப் பரீட்சையானது மற்றைய இரு பரீட்சைகளையும் விட அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. அதாவது மாணவர் ஒவ்வொருவரினதும் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பரீட்சையாக க.பொ.த உயர்தரப் பரீட்சையைக் குறிப்பிட முடியும்.
பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதிகாண் பரீட்சை இதுவாகும். அது மாத்திரமன்றி க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தாலேயே மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்குப் பொருத்தமான உயர்கற்கை நெறியொன்றை தெரிவு செய்து கற்க முடியும். கல்வித் துறையில் போட்டா போட்டிகள் நிறைந்துள்ள இன்றைய காலத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது எனலாம்.
ஆகவே உயர்தரப் பரீட்சையை தொடர்ந்தும் தாமதப்படுத்திக் கொண்டே செல்வது அம்மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குத் தடங்கல் ஏற்படுத்துவதாக அமைந்து விடுமெனக் கருதியே அதனை நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்தது. அதன்படியே உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.
ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, இவ்வருடத்தில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற அத்தனை மாணவர்களுக்குமே கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்பதுதான் உண்மை. பாடசாலைக் கல்வியானது நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டமை மாணவர்களுக்கு மற்றொரு புறத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனார்கள். சில மாணவர்கள் கல்விப் புலத்தில் இருந்தே அந்நியப்பட்டுப் போயிருந்தனர்.
‘ஒன்லைன்’ என்ற இணையவழி கற்பித்தல் முறையில் ரியூஷன் ஆசிரியர்கள் பலர் அக்கறை காண்பித்த போதிலும், அதன் பலாபலன்கள் மாணவர்களை முழு அளவில் சென்றடையவில்லை. இணையவழிக் கற்பித்தல் மூலம் பெரும் பணம் சம்பாதித்துக் கொண்ட ஆசிரியர்களும் பலர் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலில் நாடே முடங்கிப் போயிருந்த போதிலும், சேவை மனப்பான்மைக்கு அப்பால் அதிக பணம் ஈட்டுவதில் ஆசிரியர்கள் பலர் கவனம் செலுத்தியதைக் காண முடிந்தது. அதேசமயம் இணையவழிக் கற்பித்தல் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களும் எமது நாட்டில் இல்லாமலில்லை.
மாணவர் ஒவ்வொருவருக்கும் கொரோனா தொற்றானது ஏதேனுமொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றதென்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கொரோனா நீங்கும் வரை பரீட்சையை நடத்தாமலிருப்பது முறையல்ல. உலகை விட்டு கொரோனா முற்றாக நீங்குவதற்கு பல வருடங்கள் செல்லக் கூடுமென்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். இந்நிலையில் உயர்தரப் பரீட்சை நடத்தப்படுவது உண்மையிலேயே சிறப்பானதாகும். இப்பரீட்சை சமுகமாக நடைபெற்று முடிவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குவதே பிரதானமாகும்