சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
சராசரி மனிதர்களுக்கு 2020, 20, 100, 1200 என்பவை உடனடியாகப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் எண்களாக மட்டுமே தோன்றலாம். ஆனால் என்னைப் போல் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு அந்த எண்கள் மிகவும் முக்கியம் மற்றும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
திங்கள்கிழமை (12/10/20) அன்று அநேகமாக உலகின் அனைத்து நாடுகளிலும் முன்னணி பத்திரிகை மற்றும் தினசரிகளின் நடால் சிரித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிரிப்பு சாதாரணமான சிரிப்பல்ல அது சாதனைச் சிரிப்பு.
சர்வதேச டென்னிஸ் உலகில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனக்கென்று ஒரு ஆளுமையுடன் வலம் வருபவர் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.
கடந்த ஞாயிறன்று அவர் தனது 20ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் அமெரிக்கன் ஓபன் ஆகிய நான்கு போட்டிகள் டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம்கள். அதில் நடால் 13 முறை பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை வென்றுள்ளார்.
இதுவரை யாரும் ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை அந்த அளவுக்கு வென்றதில்லை. ஸ்விஸ்ஸின் ரோஜர் ஃபெடரரும் 20 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றுள்ளார். ஆனால் அவர் நடாலைப் போன்று ஒரே கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இந்த அளவுக்கு வென்றதில்லை.
ரோஜர் ஃபெடரர் ஒரே போட்டியை-விம்பிள்டன்-அதிக அளவில் எட்டு முறை வென்றுள்ளார். அவரது இதர வெற்றிகள் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம்களில் கிட்டியவை.
நடாலின் தனித்துவம்:
எந்த விளையாட்டிலும் இடது கை ஆட்டக்காரர்களுக்கு ஒரு அனுகூலம் உண்டு என்பது பொதுவான ஒரு கருத்து. அது நடாலுக்கும் பொருந்தும். ஆனால் அது மட்டுமே அவரது தனித்துவம் அல்ல. ஆடுகளத்தின் நடுவிலிருந்து ஆடுவதைவிட எல்லைக் கோட்டுக்கு அருகிலிருந்து குறுக்குவாட்டாக அடித்து விளையாடுவதில் நடால் வல்லவர். அதாவது எதிர் ஆட்டக்காரரை இயல்பாக ஓடும் தூரத்தைவிட அதிகமாக ஓட வைத்துத் திணறடிப்பது அவர் ஆடுகளத்தில் கையாளும் முக்கியமானதொரு உத்தியாகும்.
நடால் விடயத்தில் பெரும்பாலான டென்னிஸ் விமர்சகர்கள் ஒத்துக் கொள்ளும் ஒரு அம்சம் அவரது நிதானமும் துவண்டு போகாத தன்மையும். ஆடுகளத்தில் எதிராக ஆடுபவர் மீதோ அல்லது ஆட்ட நடுவர் மீதோ அவர் கடும் வார்த்தைப் பிரயோகங்களைச் செய்வது மிகவும் அரிது. முறையீடு செய்வதாக இருந்தாலும் வலுவான ஆதாரங்களுடனேயே அவர் அதைச் செய்வார். இதை ஞாயிறன்று நடைபெற்ற பிரஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியைப் பார்த்தவர்கள் கண்டிருப்பார்கள்.
அவரது கூர்மையான கழுப் பார்வை மூலம் பந்து எல்லைக் கோட்டின் உள்ளேயா-வெளியேயா? என்பதை அவரால் அவதானிக்க முடியும். அவரது கண்ணுக்கும் மூளைக்குமான ஒருங்கிணைப்பு நேரம் அசாத்தியமானது. அதன் மூலம் எல்லைக் கோட்டுப் பகுதியை நோக்கி வரும் பந்தை அடிப்பதா இல்லையா என்பதை ஒரு நொடியின் ஐம்பதின் ஒரு பகுதி கால அளவில் அவரால் முடிவெடுக்க முடிகிறது என்று அவரது புலன்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.
களிமண் தரையின் சவால்கள்:
இதற்கு அடிப்படையில் இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது களிமண் ஆடுகளத்தில் பந்து இதர ஆடுகளங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் மெதுவாகத் துள்ளும். ஆடுகளமும் வழுவழுப்பாக இல்லாமல் ஒப்பீட்டளவில் சொறசொறப்பாக இருக்கும். இதன் காரணமாக ரப்பர் மற்றும் புல்தரை ஆடுகளங்களைவிடக் களிமண் அடுகளத்தில் உராய்வு தன்மை கூடுதலாக இருக்கும்.
இதனால் விளையாட்டு வீரர்களின் ஆடுசதையின் மீது மிக அதிகமான தாக்கம் இருக்கும். எனவே பந்தின் ஓட்டத்துக்கு ஏற்ப வீரர்கள் வேகமாக நகர்வது கடினம். மேலும் காலணிகளில் ஒட்டும் களிமண் துகள்கள் வீரரின் அசைவுகள் மீது எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தும். பந்து துள்ளி எழும் தன்மையும் சீராக இருக்காது. உதாரணமாகப் பந்து அடிக்கப்படும் வேகத்தைப் பொறுத்து அது சில வேளைகளில் 180 பாகை சுழலவும் கூடும். அச்சூழலில் பந்தின் போக்கை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ற வகையில் விளையாட்டு வீரர் நகர வேண்டும்.
ஆகவே களிமண் ஆடுகளத்தில் விளையாடுவதற்கு கூடுதல் பயிற்சியும் அதற்கான கால அவகாசமும் தேவை. அதை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார் ரஃபேல் நடால்.
எனவே தான் களிமண் ஆடுகளத்தில் சிறப்பாக ஆடுபவர்கள் டென்னிஸ் உலகில் தனித்துவமாக நிற்கிறார்கள். முன்னர் ஸ்வீடனின் பியான் போர்க் பிரஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ஏக காலத்தில் ஆறு முறை வென்று சாதனைப் படைத்தார். அவரும் நடாலைப் போலவே எல்லைக் கோட்டிலிருந்து ஆடுவதில் வல்லமைப் பெற்றிருந்தார்.
சரி, முதலாவது பத்தியில் கூறியிருந்த எண்களின் சிறப்புகளைப் பார்ப்போம். முதலாவதாக 2020ஆம் ஆண்டில் நடால் தனது 20ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இந்த வெற்றி ரோலண் காரோஸ் மைதானத்தில் அவரது 100 ஆவது செட் வெற்றியாகும். 1200 என்பது அவரது டென்னிஸ் வாழ்க்கை தொடங்கிய காலம் முதல் சிறியதும் பெரியதுமாக உள்ளூர் போட்டி முதல் கிராண்ட் ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக் உட்பட அவர் வென்ற போட்டிகளின் எண்ணிக்கையாகும்.
நடாலின் சாதனையை முறியடிக்க முடியுமா?
சுருங்கச் சொல்வதானால் முடியாது. ஏனெனில் தற்போதைய சூழலில் அவர் குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளாவது விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். அவரிடம் தோல்வியடைந்த நோவாக் யாக்கோவிச்சும் இன்னும் இரண்டு ஆண்டுகாலமே டென்னிஸ் ஆடுவார் என்று கருதப்படுகிறது. அவ்வகையில் நடால் மற்றும் ஃபெடரரின் சாதனையை முறியடிக்க இன்னும் மூன்று கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் தேவை. அது சாத்தியம் என்றாலும் சுலபமில்லை.
இருபது கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் எனும் இலக்கை இனிவரும் காலத்தில் வேறு விளையாட்டு வீரர் எட்டினாலும், மிகக் கடுமையானதும் சவால்கள் நிறைந்ததுமான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை 13 முறை வெல்வது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். அடுத்த ஆண்டும் ரஃபேல் நடால் இந்தப் போட்டியை வென்றால் அந்த இலக்கை எட்டுவது மேலும் கடினமாக்கும்.
ஆனாலும் ரோஜர் ஃபெடரர் எனும் மற்றொரு ஆளுமை இன்னும் களத்திலுள்ளார். அவர் ஓய்வு பெறுவதாக அறிவிக்காத வரையில் அவரை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும் ஒன்றிரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அவர் வெல்லவும் கூடும். ஆனால் அண்மைக் காலங்களில் அவரது வெற்றி வீதம் குறைந்துள்ளதையும் கவனிக்காமல் இருக்க முடியாது.
எப்படியாயினும் டென்னிஸ் உலகில் ரஃபேல் நடால் எனும் நபர் அசைக்க முடியாத ஆளுமையாக இருக்கிறார், இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை.