ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2-வது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் நரேனுக்குத் தடை விதிக்கப்படும். அபுதாபியில் நடந்த ஐபிஎல் லீக்கின் பரபரப்பான ஆட்டத்தில், பஞ்சாப் அணியை 2 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.
பிரஷித் கிருஷ்ணா, சுனில் நரேன் வீசிய கடைசி இரு ஓவர்கள்தான் ஆட்டத்தையே மாற்றின. கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றுவிடும்.
நரேன் வீசிய அந்த பந்தில் மேக்ஸ்வெல் தூக்கி அடித்தார். பவுண்டரி எல்லைக்கு 2 இன்ச் முன்பாக பந்து பிட்ச் ஆனதால் பவுண்டரியோடு பஞ்சாப்பின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 2 இன்ச் தள்ளி பந்து பிட்ச் ஆகி இருந்தால் சிக்ஸர் சென்றிருக்கும். ஆட்டமும் சூப்பர் ஓவர் சென்றிருக்கும். 2 இன்ச்சில் பஞ்சாப் தோல்வி அடைந்தது. சுனில் நரேனின் பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. இக்கட்டான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசி கொல்கத்தா அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்நிலையில்,பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேன் பந்துவீசிய விதம் ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாகக் கூறி களநடுவர் உலஹாஸ் காந்தி, கிறிஸ் கஃபானே இருவரும் ஐபிஎல் அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரால் தற்போது சுனில் நரேன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளில் சுனில் நரேன் பந்துவீசத் தடையில்லை. ஒருவேளை மீண்டும் நடுவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் சுனில் நரேன் பந்துவீசத் தடை விதிக்கப்படுவார். பிசிசிஐ அமைப்பின் பந்துவீச்சு சந்தேக ஆராய்வுக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்புதான் மீண்டும் நரேன் பந்துவீச அனுமதிக்கப்படுவார். சுனில் நரேன் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு சாம்பியன்லீக் டி20 போட்டியில் நரேன் பந்துவீ்ச்சில் சந்தேகம் எழுந்ததால் புகார் செய்யப்பட்டது. இதனால் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் நரேன் பந்துவீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் நரேன் பந்துவீச்சு மீது நடுவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச நரேனுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்பின் தனது பந்துவீச்சில் மாற்றம் செய்து, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிசியின் அனுமதியை நரேன் பெற்றார். இருப்பினும் 2016-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் நரேன் பங்கேற்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்து நடுவர்கள் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நரேனுக்குப் பல்வேறு வகைகளில் கொல்கத்தா அணி நிர்வாகம் உதவியுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் கார்ல் குரோவின் மூலம் தனது பந்துவீச்சை நரேன் திருத்த உதவிய கொல்கத்தா அணி, லீசெஸ்டர் நகரைச் சேர்ந்த பயோ மெக்கானிஸ்ட் மூலம் நரேனுக்குப் பயிற்சியும் அளித்தது குறிப்பிடத்தக்கது.