இலங்கையின் வடக்கே இறுதிக்கட்ட போரின் போது மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தக்கப்பட்டனர்.
சட்டவிரோத மரக்கடத்தல் குறித்த செய்திகளை வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்த செய்தியாளர்கள் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிபிள்ளை குமணன் ஆகியோர் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்று அங்கு விளைந்திருக்கும் தேக்கு மரங்களை வெட்டத் தனியர் உரிமம் பெற்றிருந்தாலும், குறித்த அளவுக்கு மேலாக மரம் வெட்டிக் கடத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக நிலவுகின்றன.
போருக்குப் பிறகு அந்த அடர்ந்த வனப்பகுதி இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பின்னர் படிப்படியாக இராணுவம் விலக அங்கு அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்போடு சட்டவிரோத மரக்கடத்தல் நடைபெறுகிறது. இதனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு வனப்பகுதிக்கு அருகில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.

கணபதிப்பிள்ளைக் குமணன் – சண்முகம் தவசீலன்
கடுமையாகத் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் தவசீலனுக்கு பற்கள் உடைந்துள்ளன, குமணனுக்கு முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரது படப்பிடிப்புக் கருவிகள் மற்றும் சொந்த தொலைபேசிகள் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தாக்கப்பட்டுள்ளதைப் பன்னாட்டு அமைப்பான எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டித்துள்ளது. பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்பு இலங்கையில் ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கண்டன அறிக்கை ஒன்றை தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. “இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் மரக்கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை வன்மையாக கண்டிக்கிறோம் அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் சம்பந்தப்பட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.“