மினுவாங்கொட என்னும் தென்னிலங்கைக் கிராமம் தற்போது இலங்கையர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ளவர்களால் நன்கு கவனிக்கப்படும் ஒரு இடமாக மாறிவிட்டது.
இலங்கை அரசாங்கமும் இராணுவமும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் பல அரச கட்டடங்களை தம்வகமாக்கி அங்கு கொரோனா மீட்ப மையங்களை எற்படுத்தி வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்த முனைந்தனர். பல தமிழ் அரசியல்ி தலைவர்களும் அரசாங்த்தின் இந்த கபடத்தனத்திற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டி வந்தனர். ஆனால் அரசாங்கமோ அன்றி இராணுவத்தின் தலைமைப் பீடமோ தமிழ் மக்களின் எதிர்ப்பைக் கண்டு கொள்ளவில்லை.
அதற்கிடையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களால் தான் கொரோனா தொற்று பரவுகின்றது என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் திடீரென மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள கொவிட்- 19 தொற்று நாட்டின் பல பகுதிகளிலும் பதிவாகி வருகிறது.
தற்போது மினுவாங்கொட என்னும் கிராமம் ஒரு கொரோனாச் சுரங்கம் என்று அழைக்கப்படும் வகையில் ;அங்கு கொரோனா தாண்டவமாடுகின்றது. இந்த கொரோனாச் சுரங்கத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் தொற்று பரவியது தான் இங்கு ஆச்சரியம் மிகுந்ததாக உள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தாதிமார்கள் பலர் கடமையாற்றியிருந்தாலும் இவர்களால் கூட இந்த தொற்றின் அபாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே இங்கு ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகின்ற விடயமாக உள்ளது.
இதன் விளைவாக இத்தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பல்வேறு மட்டங்களதும் அவதானத்தை ெபற்றுள்ளது. அத்தோடு இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களையும் அவற்றை உதாசீனம் செய்பவர்களையும் மக்கள் மத்தியில் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இது இத்தொற்று தீவிரமடைவதற்கான வாய்ப்பாகக் கூட அமைந்து விட முடியும்.
தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்தத் தேவைக்கும் வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீட்டுக்கு வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் முகக்கவசம் அணிதல் தொடர்பில் கவனயீனமும், உதாசீனமும் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக முகக்கவசத்தை பொறுப்பற்ற விதத்தில் அணிபவர்களையும் பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது.
கொவிட்- 19 தொற்றைத் தவிர்த்துக் கொள்வதற்காக அது தொற்றும் பிரதான வழிகளாக விளங்கும் வாயையும், மூக்கையும் மறைக்கும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும். ஆனால், இம்முகக்கவசத்தை முகத்தின் கீழ்த்தாடைக்கும், கழுத்துப் பகுதிக்குமாக அணிந்திருப்பவர்களை பரவலாகக் காண முடிகின்றது. இவ்வாறு முகக்கவசத்தை அணியும் போது நாடிப் பகுதியிலும், கழுத்துப் பகுதியிலும் காணப்படும் நுண்கிருமிகள் சுவாசத்தின் ஊடாக உடலுக்குள் செல்லக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படவே செய்கின்றது. அதன் விளைவாக வேறுவிதமான ஆரோக்கியப் பாதிப்புகளுக்குக் கூட முகம் கொடுக்க நேரிடலாம்.
இவை இவ்வாறிருக்க, முகக்கவசம் அணிவதை உதாசீனம் செய்வது போன்று சமூக இடைவெளியைப் பேணுவதிலும் அநேகர் அசிரத்தை காட்டுகின்றனர். அத்தோடு கைகழுவுவதில் அக்கறை கொள்ளாதவர்களும் அதிகளவில் இருக்கவே செய்கின்றனர்.
கொவிட் -19 தொற்று, சீனாவின் வூஹானில் தோற்றம் பெற்றது முதல் இற்றை வரையும் உலகிற்கே பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கோ தவிர்த்துக் கொள்வதற்கோ இற்றை வரையும் தடுப்பு மருந்துகள் பாவனைக்கு வராத நிலைமையே நீடித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் இத்தொற்றைத் தவிர்த்துக் கொள்வதற்கு கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்கள்தான் முக்கிய வழிமுறைகளாக விளங்குகின்றன. அவற்றையே மருத்துவ நிபுணர்களும் சிபார்சு செய்து வருகின்றனர்.
இருந்த போதிலும் இந்த வழிமுறைகள் தொடர்பில் கவனயீனமாக நடந்து கொள்வதும், அவற்றைப் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவதும் கொவிட்- 19 தொற்று அச்சுறுத்தலை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். இந்நிலைமையைக் கருத்தில் கொண்டுதான் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட்- 19 தொற்று தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தலை விடுக்க தீர்மானித்திருக்கிறார்.
இதற்கேற்ப இத்தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாவுக்கு குறையாத அபராதமும், 6 மாதங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட முடியும்.
இது உண்மையில் வரவேற்கத்தக்கதொரு நடவடிக்கையாகும். கொவிட்- 19 தொற்றுக்கு எதிரான தனிமைப்படுத்தல் சட்டமானது மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டுதான் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவ்வாறான ஒரு சட்டம் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வதும் அதனை உதாசீனம் செய்வதும் முழுநாட்டு மக்களுக்குமே பேராபத்தாக அமைந்து விட முடியும். ஒரு சிலர் செய்கின்ற செயலால் எல்லா மக்களும் பாதிக்கப்பட இடமளிக்க முடியாது.
அதனால் தனிமைப்படுத்தல் சட்டம் உதாசீனம் செய்யப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பினர் உச்சபட்ச கவனம் செலுத்த வேண்டும். இதற்குத் தேவையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மக்கள் அளிக்க வேண்டும். மக்கள் பொறுப்புணர்வோடும், தூரநோக்கோடும் செயற்படும் போதுதான் இத்தொற்றின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
ஆகவே கொவிட்- 19 தொற்று தொடர்பான தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து செயற்படுவதில் ஒவ்வொருவரும் அக்கறை காட்ட வேண்டும். அது இத்தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பெரும் பங்களிப்பாக அமையும். இலங்கை அரசாங்கமும் இலங்கையின் சுகாதாரப் பகுதியும் தங்கள் பணிகளை கவனமாகச் செய்வது போன்று இருந்தாலும் யாழ்ப்பாணம் வரை தொற்றை பரப்பியுள்ள இந்த மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையும் அது அமைந்துள்ள கிராமமும் முழு இலங்கைத் தீவிற்குமே ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்றால் அது பொய்யல்ல.