நக்கீரன்
ஒருவர் பேசும் போது இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பேசும் போது எந்த இடத்தில் பேசுகிறோம் என்ன பொருளில் பேசுகிறோம் என்ன தொனியில் பேசுகிறோம் என்பது முக்கியம்.
இது அன்றைய வட மாகாண சபை முதலமைச்சருக்கும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதாவது எங்கே, எதனைப் பேச வேண்டும் என்ன தொனியில் பேசவேண்டும் என்பது அவருக்குத் தெரியாது இருக்கிறது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கடந்த ஓகஸ்ட் மாதம் 21, 2020 (வியாழக்கிழமை) காலை தொடங்கிய பின்னர் புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து உறுப்பினர்கள் பேசினார்கள். அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நீதியரசர் விக்னேஸ்வரன் “எனது தாய்மொழியில் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன்” எனத் தமிழில் கூறிவிட்டு தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது “தமிழ் உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று. அதுவே இந்த நாட்டில் வாழும் முதல் பழங்குடி மக்களின் மொழி” என்றார்.
மேலும் பேசுகையில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையுடன் (ICCPR) மற்றும் மரபு பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும் ” என்று கூறினார். தமிழில் தொடங்கி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடிவில் சிங்கள மொழியில் தனது உரையை நிறைவு செய்தார்.
விக்னேஸ்வரன் தமிழர்கள் இலங்கையின் பழங்குடிகள் என்று பேசியது முற்றிலும் சரியே. அதற்கான சான்றுகள் மகாவம்சத்தில் உள்ளது. ஆனால் விக்னேஸ்வரன் தமிழ் உலகில் உயிரோடு இன்றும் வாழும் மொழி என்று பேசியிருக்க வேண்டியதில்லை என்பது பலரது எண்ணமாக இருக்கிறது.
சிங்கள அரசியல்வாதிகள் யாரும் தமிழ் மூத்தமொழி அல்ல, அது இலக்கிய வளம் நிறைந்த மொழியல்ல எனச் சொல்லவில்லை. மாறாக மூத்த மொழியான தமிழ், இலக்கிய வளம் படைத்த தமிழ் காலத்தால் பிந்தி உருவான சிங்களத்தை அது விழுங்கிவிடும் என்றே பயப்படுகிறார்கள். அதற்கு வரலாற்றில் சான்றுகள் உண்டு.
1944 ஆம் ஆண்டு மே 24 இல் சிங்களத்தை மட்டும் அரசமொழியாகப் பிரகடனப் படுத்த வேண்டும் என ஜே.ஆர். ஜெயவர்த்தன ஒரு தீர்மானத்தை சட்டச சபையில் முன்மொழிந்தார்.
அன்று அரச மொழியா இருந்த ஆங்கிலத்தை அகற்றி, அந்த இடத்தில் பெரும்பான்மை சிங்கள மக்கள் பேசும் மொழியை உத்தியோக மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தனது உரையில் ஜெயவர்த்தன வேண்டிக் கொண்டார். டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு – எல்லோரும் இந்நாட்டு மன்னர் – என்ற யாப்பு இயற்றப்பட்ட பின்னணியில்தான் ஜெயவர்த்தன அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதற்கு முன்னர் ஆங்கிலம் உத்தியோக மொழியாக இருந்தாலும் இலங்கைத் தீவில் பண்டுதொட்டு பேசப்பட்டு வந்த சிங்களம் – தமிழ் இரண்டும் சமவுரிமை கொண்ட மொழிகள் என்ற கோட்பாடே மேலோங்கியிருந்தது.
“நான் எப்போதும் தமிழ்மொழி பேசும் மாகாணங்களில் தமிழ் பேசப்பட வேண்டும் என எண்ணுபவன். தமிழ்மொழி பேசும் மாகாணங்களில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. ஆனால் நாட்டில் உள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சிங்கள மொழி பேசுபவராக இருப்பதால் சிங்களமொழி மட்டுமே இலங்கைத் தீவின் உத்தியோக மொழியாக முன்மொழியும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் தமிழ் சமூகமும் தமிழ்பேசும் முஸ்லிம் சமூகமும் தமிழ்மொழி சிங்களமொழிக்கு சமமாக சேர்க்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதில் எனக்கிருக்கிற பெரிய அச்சம் என்னவெனில் முழு உலகத்திலும் சிங்களம் 3,000,000 மில்லியன் மக்களால் மட்டுமே பேசப்படுவதால் அந்த மொழி பாதிக்கப்படக் கூடும். அல்லது சிங்களமொழியோடு தமிழ்மொழியை சமத்துவ நிலையில் வைத்தால் சிங்களமொழி காலப் போக்கில் இல்லாமல் போகக் கூடும்.”
I had always the intention that Tamil should be spoken in Tamil speaking provinces, and that Tamil should be the official language in the Tamil speaking provinces. But as two-thirds of the people of this country speak Sinhala, I had the intention of proposing that only Sinhalese should be the official language of the Island; but it seems to me that the Tamil community and also the Muslim community, who speak Tamil, wish that Tamil should also be included on equal terms with Sinhalese. The great fear I had was that Sinhalese being a language spoken by only 3,000,000 people in the whole world would suffer, or may be entirely lost in time to come, if Tamil is also placed on an equal footing with it in this country…”
தமிழ்மொழி இந்தியாவில் 40,000,000 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகிறது, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் செல்வாக்கு எதிர்காலத்தில் சிங்களமொழிக்கு பாதகமாக அமையக் கூடும் என நினைக்கிறேன். ஆனால் தமிழர்கள் சிங்களமொழிக்கு கொடுக்கப்படும் உரிமைபோல் தமிழ்மொழிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என விரும்பினால் அந்த நிலையை அடைவதை நாங்கள் தடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.” (சட்ட சபை விவாதங்கள், மே 24,1944).
The influence of Tamil literature, a literature used in India by over 40,000,000 and the influence of Tamil literature and Tamil culture in the country, I thought, might be detrimental to the future of the Sinhalese language.” (State Council Debates, May 24, 1944)
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்க, ஜெயவர்த்தன பேசியதுபோலவே சிங்களத்தோடு தமிழுக்கு சமவுரிமை வழங்கினால் சிங்களமொழியை எதிர்காலத்தில் இழக்க நேரிடும் என அச்சத்தை வெளிப்படுத்தினார்.
“இருப்பினும், ஒரு தேசத்தின் மொழிக்கு முக்கியமான அர்த்தம் உள்ளது. தேசிய பண்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்தைப் பாதுகாக்க, சிங்கள மொழி மிகவும் அவசியமானது என்றும் எனவே அந்த மொழி உத்தியோகபூர்வ மொழியாக உருவாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரது மனதில் இருந்தாக நான் ஊகிக்கிறேன். ஆகையால், இந்த முதல் கட்டத்தில், இறுதியாக, ஒரு உத்தியோகபூர்வ மொழியாக, ஆங்கில மொழியிலிருந்து நமது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளுக்கு மாற்றம் என்பது மிகவும் விரும்பத்தக்க முயற்சி என்பதில் சந்தேகமில்லை. (சட்ட சபை ஹன்சாட், மே 24,1944).
S W R D Bandaranaike said, “However, language has that important meaning to a nation. I presume that, to some extent, is what the mover had in mind when he thought that for the preservation of national culture and national progress, the Sinhalese language was very necessary and that the language should form the official language. Therefore, on this first point, finally, there can be no doubt that a change-over, as an official language, from English language to one or more of our languages is a very desirable step.” – State Council Hansard, 1944.
இந்தக் கட்டத்தில் சட்ட சபையில் பேசிய டி.எஸ் சேனநாயக்கா “ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதுதான் முக்கிய பணியாகும். அதனை ஒரு மொழிக்குப் பதில் இரண்டு மொழிகளால் கட்டியெழுப்புவது அவசியமாகும்” என்றார்.
இந்தப் பிரேரணைக்கு எதிராக அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு சட்ட சபை உறுப்பினர் ஜி. நல்லையா ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். எங்கு சிங்களம் என்ற சொல் வருகிறதோ அதை அடுத்து தமிழ்மொழி என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்தத் திருத்தம் ஆகும். அவர் முன்மொழிந்த திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் யினரால் (ஆம் 29 இல்லை 8) நிறைவேற்றப்பட்டது.
1944 இல் ஜெயவர்த்தனாவும் பண்டாரநாயக்காவும் சிங்களத்தோடு தமிழுக்கு சமவுரிமை கொடுத்தால் அது சிங்கள மொழிக்கும் சிங்கள பண்பாட்டுக்கும் பாதகமாக அமையும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஐம்பதுகளில் இந்த இருவரும் இருமொழிக் கோட்பாட்டில் இருந்து விலகி தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக மாறிக்கொண்டார்கள்.
1955 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில், அவரது தேர்தல் வெற்றிக்கு முன்னும், அதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு உரைகளிலும், சிங்களத்தை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக மாற்ற வேண்டும் என்று பண்டாரநாயக்க ஐயத்துக்கு இடமின்றி வாதிட்டார். அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிங்கள தேசியவாத சக்திகளை ஒன்று திரட்டினார்.
“… சிங்களவர்களின் அச்சங்கள், முற்றிலும் அற்பமானவை என்று ஒதுக்கித் தள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. எட்டு மில்லியன் மக்கள்தொகையில் இந்த நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் இல்லை என்று நான் நம்பவில்லை. மேலும் அருகிலுள்ள நாட்டில் நாற்பது அல்லது ஐம்பது மில்லியன் [தமிழ்] மக்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இலக்கியங்கள், தமிழ் ஆசிரியர்கள், திரைப்படங்கள், ஆவணங்கள், பத்திரிகைகள் பற்றி என்ன? … சிங்கள மொழியின் தவிர்க்கமுடியாத சுருக்கம் குறித்து நியாயமற்ற பயம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது ஒரு பயம், அதை ஒதுக்கித் தள்ள முடியாது. (பண்டாரநாயக்க 1963, 394–5)
… the fears of the Sinhalese, I do not think can be brushed aside as completely frivolous. I believe there are a not inconsiderable number of Tamils in this country out of a population of eight million. Then there are forty or fifty million [Tamil] people in the adjoining country. What about all this Tamil literature, Tamil teachers, even films, papers, and magazines? … I do not think [there is] an unjustified fear of the inexorable shrinking of the Sinhalese language. It is a fear that cannot be brushed aside. (Bandaranaike 1963, 394–5)
எனவே தமிழ் மூத்தமொழி என்பதை சிங்கள அரசியல்வாதிகளுக்குச் நாங்கள் சொல்லத் தேவையில்லை. அதை அவர்களில் யாரும் மறுக்கவும் இல்லை. உண்மையில் சிங்கள அரசியல்வாதிகள் பல கோடி மக்களால் பேசப்படும் இலக்கிய வளம் நிறைந்த தமிழ்மொழியின் செல்வாக்கைக் கண்டு அஞ்சுகிறார்கள். அப்படிப் பேசுவது சிங்கள மக்களின் மனதை மேலும் இறுகச் செய்து அச்சத்தையும், அவநம்பிக்கையும் அதிகரிக்கச் செய்யும். முரண்பாட்டை வளர்க்கும். விக்னேஸ்வரனது பேச்சு சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் மற்றும் பவுத்த தேரர்களுக்கு அவல் கொடுத்தமாதிரி அமைந்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. சிங்கள – பவுத்த தீவிரவாத தேரர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து விக்னேஸ்வரனை உளவுத்துறை விசாரணை செய்துள்ளது.
விக்னேஸ்வரன் இடம், பொருள், ஏவல் மூன்றையும் மனதில் கொண்டு தமிழின் தொன்மைபற்றிப் பேசாது விட்டிருக்கலாம்.
அடுத்து தமிழ்மக்கள் இலங்கை நாட்டின் மூத்த குடிகள் எனக் குறிப்பிட்டார். அப்படிக் குறிப்பிட்டதில் தவறில்லை. சிங்கள – பவுத்த தேசியவாதிகள் தமிழர்கள் வந்தேறு குடிகள், போர்த்துக்கேயர், கூலிவேலை செய்ய ஒல்லாந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு திரும்பிப் போக வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். ஆனால் சிங்கள – பவுத்த தேசியவாதிகளின் வேத புத்தகமான மகாவம்சம் தமிழர்கள் இலங்கையில் கிமு 200 ஆண்டுகளுக்கு முன் அதாவது இற்றைக்கு 2,200 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவலி கங்கைக்கு வடக்கே உள்ள நிலப்பகுதியை ஆண்டார்கள் என்பதை பதிவு செய்துள்ளது.(மிகுதி அடுத்த வாரம்)