சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகியோரை, யாழ். மாநகரசபையின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை செயலாளருக்கும் இந்தக் கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசின் அடிப்படையில், 2018 உள்ளூராட்சித் தேர்தலில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், எமது கட்சியின் நியமன உறுப்பினராக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டார்.
எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுக்காற்று நடவடிக்கையால், விஸ்வலிங்கம் மணிவண்ணன், அந்தக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மீளப் பெறப்பட்ட, அதே நாளிலேயே இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவாகிய மயூரனின் உறுப்புரிமையையும் நீக்குமாறும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கோரியுள்ளது.